Published On: Tuesday, February 14, 2012
யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர்கள் போராட்டம்

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர்கள் நேற்று திங்கட்கிழமை முதல் விரிவுரைகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விஞ்ஞானபீட மூன்றாம் வருட மாணவர் ஒருவரை பல்கலைக்கழக நிர்வாகம் ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்திய செயலைக் கண்டித்து இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் குதித்துள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு இம் முறை சிங்கள மாணவர்களும் தெரிவாகியிருந்தனர். பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த சிங்கள மாணவர்களில் ஒருவர், 'மூன்றாம் வருட மாணவர் ஒருவர் தனக்கு பகிடிவதை செய்து துன்புறுத்தினார்' என்று பல்கலைக் கழக நிர்வாகத்திடம் முறைப்பாடு ஒன்றைக் கொடுத்தார்.
இந்த முறைப்பாட்டைச் சாட்டாக வைத்து அவர் தற்போது தென்னிலங்கையிலுள்ள பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்று கற்கையைத் தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் சிங்கள மாணவனின் முறைப்பாட்டை அடிப்படையாக வைத்து குறித்த விஞ்ஞான பீட மூன்றாம் வருட மாணவரை பல்கலைக்கழக நிர்வாகம் ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தும் முடிவை கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இந்த அறிவிப்பு பக்கச் சார்பானது எனத் தெரிவித்து, இடைநிறுத்தப்பட்டுள்ள மாணவனை மீண்டும் கல்வியைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்று கோரி நேற்று திங்கட்கிழமை முதல் விரிவுரைகளைப் புறக்கணித்து எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.