Published On: Saturday, February 18, 2012
பின்லேடனின் மனைவியை விடுவிக்குமாறு வழக்கு

பாகிஸ்தானில் சிறை வைக்கப் பட்டுள்ள ஒசாமா பின்லேடனின் மனைவி அமல் அகமதில் சதாவை விடுவிக்கக் கோரி அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமல் சதாவின் சகோதரர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
சதாவும் அவரது 5 குழந்தைகளும் பாகிஸ்தானில் இரகசிய இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். சதாவுக்கு இப்போது 31 வயதாகிறது. யெமன் நாட்டைச் சேர்ந்த சதாவை கடந்த 2000ஆம் ஆண்டில் பின்லேடன் திருமணம் செய்துகொண்டார். சதா தவிர பின்லேடனுடன் தங்கியிருந்த அவரது வேறு இரு மனைவியரும், அவர்களது குழந்தைகளும் இரகசிய இடத்தில்தான் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சதாவின் சகோதரர் ஒருவர் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், எனது சகோதரி சதா காலில் குண்டு பாய்ந்து நடக்க முடியாத நிலையில் உள்ளார். அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்று தெரியவில்லை. அதேபோல், அவரது குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்ட எந்த வசதியும் அளிக்கப்படவில்லை. இதனால் அக்குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின்படி, ஒருவரை இப்படி யாருக்கும் தெரியாத இடத்தில் போதிய வசதிகள் இன்றி சிறைவைப்பது தவறு. எனவே, சதாவையும் அவரது குழந்தைகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பின்லேடனின் மனைவியரும், குழந்தைகளும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் கட்டுப்பாட்டில் மறைவிடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.