Published On: Wednesday, February 15, 2012
பிளேக்குக்கு 'பைத்தியம்'; அவருக்கு இலங்கை விவகாரங்களில் உரிமை கிடையாது

அமெரிக்க உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் பிளேக்கை 'பைத்தியம்' என்றும் இலங்கை விவகாரங்களில் தலையிட அவருக்கு உரிமை கிடையாது என்றும் அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று செவ்வாய்க்கிழமை சாடியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.
பிளேக்கிற்கும் அரசாங்கத் தரப்பிற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது தான் பிரசன்னமாகியிருந்திருந்தால் பெறுபேறு வித்தியாசமானதாக இருந்திருக்கும் என்றும் அமைச்சர் மேர்வின் கூறியதாக சண்டே லீடர் இணையத்தளம் குறிப்பிட்டது. ரொபேர்ட் பிளேக்கும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உதவிச் செயலாளர் மரியா ஒடேராவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, அரச, எதிர்க் கட்சி உறுப்பினர்கள், அதிகாரிகளைச் சந்தித்திருந்தனர்.
அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்புவதன் மூலம் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு மின்சாரக் கதிரைக்கு அமெரிக்கா முயற்சிப்பதாகவும் மேர்வின் சில்வா தெரிவித்திருக்கிறார். ஆயினும் அந்த மாதிரியானதொன்றுக்கு தான் இடமளிக்கமாட்டாரெனவும் சில்வா கூறியுள்ளார்.
மேலும் மாலைதீவு நிலைவரத்தின் பின்னணியிலும் அமெரிக்கா இருப்பதாகவும் மேர்வின் சில்வா குற்றம் சாட்டியுள்ளார். அதேவேளை, நாட்டில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களுக்கு அஞ்சி தீர்மானத்திலிருந்தும் அரசு பின்வாங்கக்கூடாது என்று சில்வா வலியுறுத்தியுள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பைக் கண்டித்து நாடளாவிய ரீதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாகவே சில்வா இதனைத் தெரிவித்திருக்கிறார்.