Published On: Thursday, December 29, 2011
வங்காள விரிகுடாவிலுள்ள ‘தானே' சூறாவளியால் இலங்கைக்கு ஆபத்து இல்லை

வங்காள விரிகுடா கடலில் தோன்றியிருக்கும் ‘தானே’ சூறாவளி இந்திய கரையோர பிரதேசத்தை நோக்கி நகர்வதனால் இலங்கை மக்களுக்கு இதனால் எவ்வித பாதிப்புமில்லையென வானிலை அவதான நிலையத்தின் கடமை நேர பொறுப்பதிகாரி கே. சூரியகுமார் தெரிவித்தார். இருப்பினும் கடற்படை மற்றும் மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்லக்கூடாது எனவும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
‘தானே’ சூறாவளியின் வளர்ச்சி மற்றும் அதன் நகர்வை இலங்கை வளிமண்டல திணைக்களம் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதுடன் விழிப்புணர்வுடனும் செயற்பட்டு வருவதனால் அது பற்றிய தகவல்கள் யாவும் ஊடகங்கள் வாயிலாக உடனுக்குடன் அறிவிக்கப்படுமென்பதனால் பொது மக்கள் அச்சமின்றி செயற்படுமாறும் அவர் சுட்டிக்காட்டினார். வங்காள விரிகுடா கடலில் தோன்றியிருக்கும் ‘தானே’ சூறாவளியானது இலங்கை வளிமண்டல திணைக்களத்தினால் நேற்றுக் காலை 10 மணியளவில் நடத்தப்பட்ட ஆய்வின்படி யாழ்ப்பாணத்திலிருந்து வட கிழக்காக 600 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டிருப்பது அவதானிக்கப் பட்டுள்ளது.
இது இந்திய கரையோர பிரதேசத்தை நோக்கி வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்த வண்ணமுள்ளது. ‘தானே’ பெரும்பாலும் எதிர்வரும் 30ம் திகதியளவில் இந்திய தென்கரையோர பிரதேசத்தினை ஊடறுத்துச் செல்லும் வாய்ப்பு இருப்பதனால், இந்தியாவின் தென் கரையோர பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கே இது அச்சுறுத்தலாக அமையுமேயொழிய இலங்கை மக்களுக்கு ‘தானே’ யினால் எவ்வித பாதிப்பு மில்லையெனவும் அவ்வதிகாரி கூறினார்.
இருப்பினும் ‘தானே’ சூறாவளியின் தாக்கத்தை மன்னார் முதல் யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையுள்ள ஆழ்கடல் பிரதேசங்களில் உணரக் கூடியதாக இருக்குமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால் ஆழ்கடலில் தொடர் மழை, கடுங்காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஆகியன இடம்பெறுமென்பதனால் கடற்படை மற்றும் மீனவ நடவடிக்கைகள் யாவும் மறு அறிவித்தல் வரை முற்றாக மேற்கொள்ளப்படக் கூடாதெனவும் அவர் தெரிவித்துள்ளார். ‘தானே’ சூறாவளி நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் மெதுவாகவே நகர்வதனை அவதானிக்க முடிவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை கடலிலேயே தாழமுக்கம், சூறாவளி, கடுங்காற்று ஆகியன காணப்படுவதனால் தரைக்கு மேலே வலிமண்டலத்தில் தற்போது மேகக் கூட்டங்கள் காணப்படு வதில்லை இதனாலேயே பூமி பகல் நேரங்களில் வெப்பநிலை குறைவடைந்து குளிர்ச்சியாக காணப்படுவதாகவும் கே. சூரியகுமார் தெரிவித்தார்.
தற்போது வடகிழக்கு பருவப் பெயர்ச்சி ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும் தாழமுக்கம், சூறாவளி ஆகியன காரணமாக வடக்கு, கிழக்கு பெய்ய வேண்டிய மழை தற்காலிகமாக ஓய்ந்திருந்துப்பதுடன் தரையில் குளிர்ச்சி நிலவுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
தமிழகத்துக்கும் ஆந்திராவுக்குமிடையே 'தானே’ நாளை கரை கடக்கும் வங்கக்கடலில் உருவான 'தானே' புயல் நாளை வெள்ளிக்கிழமை கரையைக் கடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, நாளை காலை வட தமிழகத்திற்கும் தெற்கு ஆந்திராவுக்குமிடையே அதாவது கடலூருக்கும் நெல்லூருக்கும் இடையே கரையைக் கடக்குமென எதிர்பார்ப்பதாக சென்னை ஆராய்ச்சி மண்டல இயக்குநர் எஸ். ஆர். ரமணன் தெரிவித்தார். இது தொடர்பாக எஸ்.ஆர். ரமணன் கூறியதாவது,
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி சென்னையில் இருந்து கிழக்கு, தென்கிழக்கில் 700 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. அந்த புயலுக்கு ‘தானே’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 'தானே' புயல் மேற்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து 30ம் திகதி காலை வடதமிழகத்திற்கும், தெற்கு ஆந்திராவுக்கும் இடையே அதாவது கடலூருக்கும், நெல்லூருக்கும் இடையே கரையை கடக்கும்.