எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, December 29, 2011

சூழல் சமநிலை பேணும் தாவரவியல் பல்வகைமை

Print Friendly and PDF


எஸ்.எல்.மன்சூர் (கல்விமானி) 
இயற்கை வளங்கள் என்பதானது இயற்கையாக மனிதன் உட்பட புவி மேற்பரப்பில் வாழும் அனைத்து உயிரினங்களும் பெற்றுக் கொண்ட இயற்கை மாதாவின் மாபெரும் கொடையாகும். பொதுவாக கூறுமிடத்து இயற்கைவளமானது உலகில் காணப்படும் பெறுமதிவாய்ந்த பல்வகைசார்ந்த, அரியதாகவுள்ள விலங்கினங்களும், தாவர வகைகளும் இயற்கை வளங்களிலேயே தங்கியுள்ளன. இதன்காரணமாகவே காட்டுவனங்கள் உயிர் பல்வகைமையின் பிறப்பிடமாகவும் கூறப்படுகின்றது. மரபணு வளங்களைப் கொண்டமைந்த புவிமேற்பரப்பின் உயிர் மூச்சு அல்லது நுரையீரலாகவும் செயற்படுகின்றது.

இவ்வாறாக காணப்படும் இயற்கை வளங்களை மனிதன் தன்னுடைய தேவைக்கும் ஏனைய விடயங்களுக்குமாக அழிக்கின்றான். எப்படி? மனிதனின் நுகர்வுப் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் மத்தியில் நிகழ்காலத்தில் இத்தகைய பெறுமிக்க இயற்கை வளமானது பாரதூரமான அழிவினை எதிர்நோக்கியுள்ளது. புவிமேற்பரப்பிiனைத் தழுவிக் காணப்பட்ட இயற்கை வனங்களின் என்பது சதவீதமானவை தற்போது அழிக்கப்பட்டுள்ளது. பிறேசிலின் அமேசன் மழைக்காடுகளை உள்ளடக்கிய மத்திய ஆபிரிக்கா மற்றும் தெற்காசியா, கனடா, ரஷ்யா போன்ற நாடுகளிலுள்ள வனங்களே தற்போதைக்கு எஞ்சியுள்ள மிகவும் சொற்பமான இயற்கை வனங்களாகும்.


இயற்கை வளம் குன்றி வறுமை நிலைக்கு தள்ளப்படல் 
தற்போது நாளொன்றுக்கு சுமார் 380 சதுர கிலோமீற்றருக்கும் மேற்பட்ட பரப்பளவைக் கொண்ட இயற்கை வனங்கள் மனிதனது தேவைகளுக்காக அழிக்கப்பட்டு வருகின்றன. நகர அபிவிருத்தி என்றும், விவசாயப் பயிர்நிலங்கள் மற்றும் வீட்டுக்குத் தேவையான மரத்தளபாடங்கள், விறகுகள், நீர் மின் நிலையங்கள் அமைத்தல், பாதைகள் அமைத்தல், புதிய காணிகளைப் பெறல் போன்ற பலதரப்பட்ட நடவடிக்கைகளின் நிமித்தம் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய பேரழிவின் காரணமாக மனிதனைத் துரத்திவருகின்ற பக்க விளைவுகளைப் பற்றி யாரும் கவனிப்பதாக தெரியவில்லை. அதாவது இயற்கையை சதித்தால் இயற்கை மனிதனைச் சதிக்கும் என்பதற்கொப்ப புவி மேற்பரப்பானது வெப்ப நிலையால் உயர்வடைந்து செல்லும். இது தாவர வளர்ச்சியை குன்றச் செய்து இறுதியில் வறுமைக்கு வித்திடும் நிலையைத் தோற்று விக்கும். அதாவது வெப்பத்தின் காரணமாக வறுமை, நீர்வள மூலகங்கள் அழிவடைதல், காலநிலை மாற்றங்கள் அத்துடன் இயற்கை வனப்பும் அழிவடைந்து இறுதியில் மனிதனையே அழிவுக்குள்ளாக்கும் நிலை தோற்றம் பெறும்.

வனங்களுக்குத் தீ மூட்டுதல் அல்லது காட்டுத் தீ ஏற்படல்
இதுவும் வனத்தை அழிக்கின்றது. மனிதனால் மூட்டப்படுகின்ற தீ ஒருபுறம், இயற்கையாகவே தோன்றும் காட்டுத்தீ போன்றனவும் காடுகளை அழிவுக்குள்ளாக்குகின்றன. எங்களது நாட்டிலும் அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுகின்றன. அதாவது காடுகளை அழித்து சேனைப் பயிர்கள் செய்வோர் இத்தகைய தீ  மூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்வர். அதேவேளை உலகில் பல நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் அடிக்கடி ஏற்படுகின்ற காட்டுத் தீயானது அங்குள்ள வனத்தை அப்படியே சுட்டழித்து விடுகின்றன. காடுகளை சார்ந்து வாழ்வோர் தங்களது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக காடுகளுக்கு தீ மூட்டுவர். இதுவும் தாவரத்தை மட்டுமல்ல அங்குள்ள உயிர் வளங்களும் பாதிக்கப்பட்டு இறந்து விடுகின்றன. எனவேதான் காடுகளுக்கு தீ மூட்டுவதால் வளி மண்டலத்தின் வெப்பம் உயர்வடைந்து காபனீரொட்சைட்டின் அளவும் அதிகரித்து பாரிய பாதிப்பினை உயிரினங்கள்மீது செலுத்திவிடுகின்றது. இது காடுகளுக்கு தீ மூட்டப்படுவதால் ஏற்படுகின்ற மிகப் பெரிய பாதிப்புக்கள் எனலாம்.


நோயுற்ற நிலையில் காணப்படும் காடுகள் 
உலகில் காணப்படும் பல வனங்கள் நோயுற்ற நிலையிலேயோ அல்லது பலவீனமுற்றதாகவே காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. இதற்கு முக்கிய காரணியாக அமைவது வளிமாசடைதலாகும். வளி மாசடைந்து அமில மழை பொழிவதன் காரணமாக இயற்கையாகக் காணப்படும் வனங்கள் பேரழிவை எதிர்நோக்குகின்றன. மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறான நிலையில் இறந்து கொண்டிருக்கும் அல்லது இறந்துள்ள வனங்கள் பரவலாகவே காணமுடியும். நீண்டகால வரட்சி, சிவில் யுத்தங்கள், காடுகளுக்கு தீ மூட்டுதல் மற்றும் விவசாய நடவடிக்கைகளின்கீழ் இவ்வாறான வனங்கள் பல நோயுற்ற நிலையில் காணப்படுகின்றன. இதுவும் இயற்கை வளங்களின் பாதிப்புக்கு வித்திடுகின்றன.

வனப்புமிக்க மழைக்காடுகள்
புவியில் காணப்படும் அயனமண்டலத்திற்குரிய மழைக்காடுகளில்தான் அதிக பெறுமதியான உயிர்ப்பல்வகைமையை கொண்ட வனவளங்கள் காணப்படுகின்றன. இயற்கை தந்துள்ள அருட்கொடையான இம்மழைக் காடுகள் மனிதன் உட்பட உயிரினங்கள் அனைத்திற்கும் பெரியதோர் வரப்பிரசாதமாகும். மத்திய அமெரிக்காவின் அமேசன் காடுகளை உள்ளடக்கிய மத்திய ஆபிரிக்கா, மடகஸ்கார், வட இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சீனா, பபுவா நியுகினி, பிலிப்பைன்ஸ், புறுனைண் போன்ற நாடுகளில்தான் இவ்வகை மழைக்காடுகள் காணப்படுகின்றன. 

மெக்சிக்கோவின் சீயாபாஸ் மழைக்காடுகள் ஒரு ஹெக்டேரில் 30வகையான தாவர இனங்களும், 50வகையான ஓர்கிட், 40 வகையான பறவைகள், 20 வகையான முலையூட்டிகள், 300 இனங்களைச் சேர்ந்த வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் 5000க்கும் மேற்பட்ட பலவிதமான சிற்றுயிர்கள் போன்றனவும் காணப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

ஐ.நா. ஆய்வின் பிரகாரம் ஒவ்வொரு ஆண்டிலும் 13.7 மில்லியன் ஹெக்டேயர் அளவிலான மழைக்காடுகள் சுத்திகரிக்கப்படுவதால் அல்லது தீ மூட்டப்படுவதால் அழிவுறுகின்றன. அதாவது ஒரு செக்கனுக்கு ஒரு உதைபந்தாட்ட மைதான அளவிலான மழைக்காடுகளை நாம் வாழும் புவியானது இழந்து கொண்டுவருகின்றது. அத்துடன் சின்னஞ்சிறு எறும்பு முதற்கொண்டு மிகப் பெரிய யானை வரை பலவிதமான விலங்குகளும், தாவர வகைகளும் சுற்றாடல் தொகுதியின் உயிர் வாழ்க்கையின் பங்காளிகளாக காணப்படுவதுடன் நீர், காற்று, மண் மற்றும் உயிர் வளங்கள் ஒன்றுடன் ஒன்று இடைத்தொடர்புகளைக் கொண்டுள்ளன. இத்தகைய தொகுதி சீரழிகின்றபோது மனித குலத்தின் உயிர்வாழ்க்கையும் சீரழிந்து போய்விடும் என்பது மட்டும் உறுதி.


இலங்கையின் தாவர இனங்கள்
எமது நாட்டில் பல்வேறு சூழற்றொகுதிகளை சேர்ந்த தாவர இனங்கள் காணப்படுகின்றன. இலங்கையின் தாவர உள்ளடக்கங்களைப் பார்க்கின்றபோது தனித்துவமான பலவகைத் தாவரங்கள் காணப்படுகின்றமை சிறப்புக்குரியதாகும். இலங்கையின் காடுகள் பலபிரிவுகளில் அழைக்கப்படுகின்றன. அத்துடன் புல்நிலங்கள், கரையோர மற்றும் கடல் பிரதேசம், ஈரநிலங்கள் என்று பல பிரதேசங்கள் அமைந்துள்ளன. இவற்றில் மிகவும் பிரபல்யமிக்கதும், பாதுகாக்கப்பட வேண்டியதுமான ஒரு நிலம் சிங்கராஜ வனம் அமைந்துள்ளமை இலங்கைக்கே பெருமை சேர்க்கும் ஒரு பிரதேசமாகும்.

சிங்கராஜவனம்
இது இலங்கையின் ஈரவலயத்தில் அமைந்துள்ள வனமாகும். வடகீழ் மற்றும் தென்மேல் பருவக் காற்று மழையினால் அடிக்கடி போசிக்கப்பட்டு வருகின்றது. அயன மண்டல மழைக்காட்டுக்கே உரித்தான செழிப்புமிக்க தாவர வகைகளுக்கு உரிமைபாராட்டும் இங்கு நான்கு படைகளைக் கொண்ட தாவர வகைகளைக் காணலாம். இத்தகைய ஒவ்வொரு படைகளிலும் உட்பிரதேசத்திற்குரிய மாபெரும் தாவர வகைகள் தொடக்கம் சிறிய ஒட்டிவேர் மற்றும் பன்னம் வகைகள் வரை பரவலாகக் காணப்படுகின்றன. இதன் காரணமாகவே சிங்கராஜ வனம் அரிய மரபணுச் சேர்மமாகக் கருதப்படுகின்றது. இங்கு காணப்படும் மொத்தத் தாவரப் பரம்பலில் 75 தொடக்கம் 92 வீதமான தாவரங்கள் இலங்கைக்கே உரிய தனித்துவமானவையாகும். இதற்கு மேலதிகமாக வனஜீவராசி வளங்களையும் சிங்கராஜ வனம் கொண்டுள்ளது. சிறுத்தை, உட்பட பலவிதமான முலையூட்டிகள், ஊர்வன மற்றும் ஈருடக வாழி, பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், நன்னீர் மீன்கள், மற்றும் பல்வேறு வகையைச் சேர்ந்த சிற்றுயிர்களும் இங்கு தாராளமாகவே காணப்படுகின்றன.


இலங்கைக்கே தனித்துவமான பறவைகளுக்கிடையில் வத்தரத்து மல்கொஹா, கெஹிபெல்லா, சிவப்பு தெமலிச்சா, பிட்ட எட்டிக்குகலா, புள்ளிவல் அவிச்சியா, ஹபன் குக்குலா போன்ற பல பறவைகள் இவற்றில் அடங்கும். நாட்டைப் போசித்து வளர்க்கும் கின் மற்றும் களுங்;கையின் ஆரம்ப உற்பத்திகள் சிங்கராஜ வனத்திலேயே உதயமாகின்றன. ஆண்டுமுழுவதும் மழை கிடைப்பதால் இலங்கையின் பிரதானமான நீரேந்துப் பரப்பாகவும் இது விளங்குகின்றது. காலி, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய மூன்று மாவட்டங்களை எல்லைகளாகக் கொண்டு 11.187 ஹெக்டேயராகப் படர்ந்துள்ள சிங்கராஜவனம் உலகத்தின் தலைசிறந்ததோர் இயற்கை வனமாகக் கருதப்படுகின்றது. உலக ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்ந்துள்ள சிங்கராஜவனம் விஞ்ஞானம், மற்றும் கல்விசார் நடவடிக்கைகளின் ஆய்வுப்பிரதேசமாகவும், சுற்றாடல் ஆர்வலர்கள் உட்பட அனைவரினதும் கண்கவர் உல்லாசப் புரியாகவும் தற்போது இது திகழ்கின்றது. 

எனவே, புவியினைப் பாதுகாக்கின்ற தாவரங்களை அழிக்காது அதனை மீண்டும் மீண்டும் உற்பத்தியாக்கி எதிர்கால சந்திகளும் வாழ இன்றே உயிர்ப்பல்வகைமையின் பிறப்பிடமான இயற்கை வனங்களையும், இயற்கையையும் போசித்து வாழவைத்து நாமும் வாழ்ந்து பிற உயிர்களும் வாழ புவியைப் பாதுகாப்போம். தாவரங்களை போசிப்போம். தற்போது சுனாமி ஏற்பட்டு ஏழு வருடங்கள் உருண்டோடிவிட்டன. இந்த பேரனர்த்தம் ஏற்படுவதற்கு இயற்கையை மிஞ்சி மனிதன் எழுச்சி பெற்றதுதான் காரணமா அமைகின்றது என்கின்றனர் வல்லுநர்கள். இந்நிலை மாற்றம் பெற வேண்டுமானால் இயற்கையை நாம் பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் இயற்கை எம்மைப் பாதுகாக்கும். இன்று இயற்கை அழிக்கப்பட்டு வருகின்றது. நாளைய சந்ததிகளும் இந்த உலகில் வாழ வேண்டும். எம்முடன் இந்த புவியும் அழியப் போகின்றதா என்ன?


ஆகவேதான் புவியின் சூட்டை தனித்து மக்களும் நிம்மதியாக வாழ காடுகளும், வனங்களும், சோலைகளும் இந்தப் புவியை ஆளவேண்டும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து இயற்கையை மதித்து ஒழுகும் மக்களாக நாம் வாழ முயற்சி செய்வோம்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452