Published On: Monday, January 30, 2012
24 மணித்தியாலத்திற்குள் 15 வீதி விபத்துகள்; 17 பேர் பலி

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் ஒரே நாளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 17 பேர் உயிரிழந்த சம்பவங்கள் நேற்று முதல் தடவையாக பதிவாகியுள்ளன. அண்மைக்கால வரலாற்றில் பொலிஸ் தலைமையகத்தில் பதிவு செய்யப்பட்ட நாளாந்தம் இடம்பெற்றுவரும் வாகன விபத்துச் சம்பவங்களில் ஒரேநாளில் பதிவாகிய அதிகூடிய விபத்துக்களும், உயிர்ப் பலிகளும் இதுவாகும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது; நேற்று முன்தினம் 28ஆம் திகதி அதிகாலை 6.00 மணி முதல் நேற்று 29ஆம் திகதி 6.00 மணி வரையான 24 மணி நேரத்திற்குள்ளேயே நாட்டின் பல்வேறு பகுதிகளில் 15 விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ருவன்வெல்ல, ராகம, வத்தளை, மீரிகம, நீர்கொழும்பு, கொச்சிக்கடை, எப்பாவல, குளியாப்பிட்டிய, குருநாகல், அக்குரஸ்ஸ, மாத்தறை, அஹுங்கல்ல, மஹியங்கனை மற்றும் பயாகல ஆகிய பிரதேசங்களிலேயே நேற்று அதிகாலை வரையான 24 மணிநேரத்தில் உயிர் பலிகளை ஏற்படுத்தும் வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
2012ஆம் ஆண்டு ஆரம்பித்து 29 நாட்களே கழிந்துள்ள நிலையில் இந்த வருடம் மாத்திரம் 156 வாகன விபத்துச் சம்பவங்கள் பொலிஸ் திணைக்களத்தில் பதிவாகியுள்ளன. கடந்த வருடம் முழுவதும் 2350 விபத்துக்களும், 2501 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ள நிலையில் இவ்வாண்டு தொடங்கிய 29 நாட்களில் 156 வாகன விபத்துக்கள் என்று விபத்துகளின் அதிகரிப்பை காட்டுகிறது.
நாளொன்றுக்கு 7 தொடக்கம் 10 வரையிலான விபத்துச் சம்பவங்களே இதுவரை பதிவாகி வந்துள்ளன. நேற்று முன்தினம் (28) அதிகாலை 6.00 மணி முதல் நேற்று (29) அதிகாலை வரையான 24 மணி நேரத்திற்குள் 15 விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை என்பது விபத்து சம்பவங்களின் அதிகரிப்பை காட்டுகிறது. நேற்றைய பதிவுகளின் படி ஒரேநாளில் இடம்பெற்ற விபத்துக்களின் அடிப்படையில் நாளொன்றில் ஒன்றரை மணித்தியாலயத்திற்கோர் ஒருவர் விபத்துக்களின் மூலம் உயிரிழப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வாகனங்களை செலுத்தும் சாரதி, பாதசாரிகளின் கவனமின்மை, அதிக வேகம், போதையில் வாகனங்களை செலுத்தல், வீதி போக்குவரத்து வீதி முறைகளை மீறுதல், ஆசனப் பட்டி அணியாமை போன்ற பல்வேறு காரணங்களே இதுபோன்ற உயிர் பலிகளை ஏற்படுத்தும் வகையிலான விபத்துக்களுக்கு காரணம். எனவே சகலரும் விழிப்புடன் செயற்படுவதன் மூலம் மாத்திரமே விபத்துக்களை வெகுவாக குறைக்க முடியும்.
இதேவேளை வாகனங்களை வீதிகளில் செலுத்துவதற்கான தகுதி தொடர்பில் அதிகமானவர்கள் கவனம் செலுத்துவதில்லை. இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தும் பட்சத்தில் இது போன்ற விபத்துக்களை தவிர்க்கலாம். கடந்த காலங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களின் பதிவுகளின்படி 50 வீதமான விபத்துக்களுக்கு வாகனங்களில் ஏற்படும் இயந்திரக் கோளாறுகளே காரணமாகும் என்றும் கண்டறியப்பட்டுள்ளன.
எனவே வாகனங்களின் நிலைமைகள் தொடர்பில் கவனம் செலுத்தாதவர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். களுத்துறையில் அண்மையில் இடம்பெற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை பலிகொண்ட வாகன விபத்துக்கும், பொறுப்பற்ற தன்மையும், வாகனத்தின் நிலைமையுமே காரணமாகும்.
வாகனங்களை செலுத்தும் போது உறங்குதல், மது பாவனை, புகை பிடித்தல், கையடக்க தொலைபேசிகளை பாவித்தல், ஆசனப் பட்டியல் அணியாமல் பயணித்தல் போன்றவவற்றின் பாதிப்புக்குள் தொடர்பில் வாகன ஓட்டுவதற்கான பயிற்சிகளை வழங்கும் பாடசாலைகள் விளக்கங்களை வழங்க வேண்டும் என்றார். ஒரேநாளில் இடம்பெற்ற 15 விபத்துக்களும், அதன் மூலம் உயிரிழந்தவர்களின் விபரங்கள் பின்வருமாறு;
01. ருவன்வெல்ல - லொறி, மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 68 வயதுடையவர் /யிரிழந்தார்.
02. ராகம - கார் வீதியை விட்டு விலகி மோதியதில் 62 வயதுடைய பெண் உயிரிழப்பு.
03. வத்தளை - முச்சக்கர வண்டி மோதியதில் 62 வயதுடையவர் உயிரிழப்பு
04. மீரிகம - வான் பாதசாரியுடன் மோதியதில் ஒருவர் பலி.
05. மீரிகம - வான் பாதசாரியுடன் மோதியதில் 41 வயது பாதசாரி பலி
06. நீர்கொழும்பு - பஸ் வண்டி பாதசாரியுடன் மோதியதில் 52 வயது பாதசாரி பலி.
07. கொச்சிகடை - லொறி, மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஒருவர் பலி.
08. எப்பாவல - மோட்டார் சைக்கிள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் 16,17 வயதுடைய இரு இளைஞர்கள் பலி.
09. குளியாப்பிட்டிய - லொறி பாதசாரியுடன் மோதியதில் 19 வயது இளைஞர் பலி.
10. குருநாகல் - மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகியதில் 63 வயது வயோதிபர் பலி.
11. அக்குரஸ்ஸ - வேன் மோதியதில் 79 வயது வயோதிப பெண் பலி
12. மாத்தளை - பஸ் வண்டி மோதியதில் 70 வயது வயோதிப பெண் பலி.
13. அஹுங்கல்ல - லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் 27 வயது நபர் பலி.
14. மஹியங்கனை - ட்ரெக்டர் சரிந்து விழுந்ததில் 47 வயது நபர் பலி
15. பயாகல - காருடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு சாரதிகளும் பலி.