Published On: Tuesday, January 31, 2012
சச்சின் ஓய்வு பெற்றிருக்க வேண்டும்- இம்ரான் கான்

உலக கோப்பை வென்ற கையோடு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் ஓய்வு பெற்றிருக்க வேண்டும், என, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் ஆலோசனை தெரிவித்தார்.
அஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி படுமோசமாக இழந்தது. இதையடுத்து சச்சின், டிராவிட், லட்சுமண் உள்ளிட்ட "சீனியர் வீரர்கள் விடைபெற வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
இது குறித்து இம்ரான் கான் அளித்த பேட்டி:
ஓய்வு பெறும் முடிவை எடுப்பது விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் கடினமான காரியம். இதனை மிகப் பெரும் வீரர்கள் கூட சரியான நேரத்தில் எடுத்தது கிடையாது. இந்திய அணியில் மூன்று அல்லது நான்கு வீரர்கள் ஓய்வு பெறும் முடிவை எடுக்க வேண்டியுள்ளது. சச்சினை பொறுத்தவரை, அவர் தான் சரியான நேரத்தை தேர்வு செய்ய வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து நான்கு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில், ஓய்வு பெற இயலாது. இவர், உலக கோப்பை வென்ற கையோடு விடைபெற்று இருந்தால், மிகச் சிறப்பாக இருந்திருக்கும்.
சாதனைகளுக்காக யாரும் விளையாடக் கூடாது. சாதனைகள் என்பது வெற்றியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். நான் விளையாடியவர்களில் மிகச்சிறந்த வீரர் என்றால், அது வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் தான். அவரது சாதனைகளை பார்க்க வேண்டிய அவசியமில்லை. அவருக்கு சவால்களை எதிர்கொள்ள பிடிக்கும். அதனால் தான் அசைக்க முடியாத வீரராக திகழ்ந்தார். சாதனைகள் என்பது வெறும் புள்ளிவிவரங்கள் தான். மகத்தான வீரர்களுக்கு புள்ளிவிவரம் ஒரு பொருட்டே இல்லை. இது சச்சினுக்கும் பொருந்தும். இவரை 99 சதங்கள் அல்லது 100 சதங்கள் அடித்ததன் அடிப்படையில் நான் நினைத்துப் பார்க்க போவதில்லை. ஒரு மகத்தான வீரராக தான் பார்ப்பேன்.
இவ்வாறு இம்ரான் கான் கூறினார்.