Published On: Thursday, February 23, 2012
சென்னையில் 5 வங்கி கொள்ளையர்களுக்கு சூடு
(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
சென்னையில் வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்ட 5 வடமாநில கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற சென்னை காவல்துறையினர் மீது கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். அவர்களுடனான மோதலில் 5 கொள்ளையர்களும் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சென்னையில் கடந்த இரு வாரங்களில் இரண்டு வங்கிகளில் துப்பாக்கி முனையில் லட்சக்கணக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை கும்பலைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.இந்த நிலையில், வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் வங்கிக் கொள்ளையர்கள் இருப்பதாக தகவல் அறிந்த காவல்துறையினர் அவர்கள் குடியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். இந்த நிலையில், கொள்ளையர்கள் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து காவல்துறையினரும் திருப்பிச் சுட்டதில் 5 கொள்ளையர்களும் உயிரிழந்தனர்.வீட்டில் கட்டுக்கட்டாக பணம்அவர்களது வீடுகளில் கட்டுக்கட்டாக பணமும், ஆயுதங்களும் இருந்ததாக செய்திகள் கூறுகின்றன. இந்த கொள்ளைச் சம்பவத்தில் வேறு யாரேனும் தொடர்புடையவர்கள் இருக்கிறார்களா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். என்கவுண்டரில் கொல்லப்பட்ட 5 கொள்ளையர்களின் உடல்களும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிரேச பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்த காவல்துறையினர் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்கள் சென்னை வேளச்சேரியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கி வந்துள்ளனர்.
இவர்கள் கொள்ளையர்கள் என்று அப்பகுதியில் வசிக்கும் எவருக்கும் இதுவரை சந்தேகம் வரவில்லை. என்கவுண்டர் நடந்த பிறகுதான் பலருக்கும் இவர்கள் பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது.முதல் கட்ட விசாரணையில் சுட்டுக் கொல்லப்பட்ட கொள்ளையர்கள் 5 பேரும் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. கொள்ளையர்களின் பெயர்கள் வினோத்குமார், வினாய்குமார், ஹரீஷ்பிரசாத், சசிகரே, அபேகுமார் என்பதாகும்.
இவர்கள் நேற்று இரவே தமிழகத்தில் இருந்து பீகாருக்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது. வீட்டு உரிமையாளரிடம் வாடகை பாக்கியை கொடுத்து விட்டு இன்று இரவோடு கிளம்பி விடுகிறோம் என்று கூறியுள்ளனர். அப்போதுதான் வீட்டு உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், டிவியில் கொள்ளையர்களின் வீடியோ படம் ஒளிபரப்பானதும், அவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தாகக் கூறப்படுகிறது.
எஸ்.ஆர்.எம் கல்லூரியில் விசாரணை: கொள்ளை கும்பல் தலைவன் சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவன் என்பதும் தெரியவந்துள்ளது. கொள்ளை கும்பல் தலைவனின் மற்ற கூட்டாளி பற்றி அறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் மாணவர் சிலரை விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். கும்பலின் தலைவன் தங்கள் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் மாணவன் என்பதால் மாணவர்கள் பீதியடைந்துள்ளனர். கொள்ளையர்கள் பற்றி அறிய எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் நிர்வாகிகளையும் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் என்கவுண்டரில் ஒரே நேரத்தில் 5 பேர் சுட்டுக்கொல்லப்படுவது இதுவே முதல் முறையாகும். தமிழ்நாடு போலீஸ் இதற்கு முன் 2002ல் பெங்களூரில் 5 பேரை கொன்றது. பெங்களூரில் தீவிரவாதி இமாம் அலி உட்பட 5 பேர் 2002ல் சுட்டுக்கொல்லப்பட்டனர். தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நடந்துள்ள மிகப்பெரிய என்கவுண்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2010ல் திண்டுக்கல் பாண்டி உட்பட 2 பேர் நீலாங்கரையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட 5 பேர் யார் யார் என்ற அடையாளம் தெரியவந்துள்ளது. வினோத் குமார், வினய் பிரசாத், ஹரீஷ் குமார், அபே குமார் ஆகியோர் பீகாரை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. ஐந்தாவது நபரான சரிகரே மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
என்கவுண்டர் நடந்த வீட்டில் இருந்து 14 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் பயன்படுத்திய 7 துப்பாக்கிகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். எஞ்சிய பணத்தை கைப்பற்ற தேவைப்படின் எஸ்.ஆர்.எம் கல்லூரி விடுதிகளில் சோதனை நடத்தப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கொள்ளையர்களின் கூட்டாளி வேறு யாரேனும் உள்ளனரா என தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருகிறது. கொள்ளையரின் டைரியில் உள்ள முகவரியிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வேறு யாருக்காவது பணத்தை பங்கிட்டு கொடுத்தார்களா அல்லது கொள்ளையிட்ட பணத்தை உல்லாசமாக செலவிட்டார்களா என்றும் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
வங்கி கொள்ளையர் சென்னை வேளச்சேரியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ரகசிய தகவலின் பேரில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை போலீசார் சுற்றி வளைத்தனர். வீட்டுக்குள் இருந்த கொள்ளையர்களை வெளியே வருமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் போலிசாரை நோக்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதால் சண்டை மூண்டது. பொதுமக்களை தாக்கபோவதாகவும் கொள்ளையர் மிரட்டியதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர். கொள்ளையர் சுட்டதில் ஆய்வாளர் 2 பேருக்கு குண்டடிப்பட்டதால் போலீசார் பதிலடி கொடுத்தனர். ஒரு மணிநேரம் நீடித்த இந்த சண்டையில் கொள்ளையர்கள் 5 பேரும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
கொள்ளையர்கள் 3 மாதங்களாக வேளச்சேரியில் வீடு எடுத்து தங்கியிருந்தனர். கொள்ளையரின் வீடு ஏ.எல்.முதலி தெருவில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பாகும். 3 மாடிகள் கொண்ட குடியிருப்பின் தரை தளத்தில் கொள்ளையர்கள் குடியிருந்தனர். ரூ.20,000 அட்வான்ஸ், ரூ.5,000 வாடகை கொடுத்து டிசம்பரில் குடிபுகுந்தனர். கொள்ளையர்கள் 5 பேரும் கல்லூரி மாணவர்கள் என வேளச்சேரி மக்களிடம் கூறி வந்தனர். கொள்ளையர்களுக்கு வீடு கொடுத்தவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் வெளியிட்ட சி.சி.டி.வி உருவத்தை பார்த்து கொள்ளையர்கள் அடையாளம் தெரியவந்தனர். சந்தேகத்தின் பேரில் ஒருவர் காவல்துறை உயர் அதிகாரிக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். போலீசார் விசாரித்ததில் கொள்ளையர்கள் பற்றி வந்த தகவல்கள் உண்மை என உறுதியானது. பீகாரை சேர்ந்த 4 பேரும் தமது மாநிலத்தில் கள்ளத்துப்பாக்கியை வாங்கி வந்தனர். வங்கி அதிகாரியை மிரட்ட பயன்படுத்திய துப்பாக்கி மூலம் போலீசாரை சுட்டனர்.துப்பாக்கி குண்டுகளும் பீகாரில் இருந்து வாங்கிவரப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
குண்டடிப்பட்ட ஆய்வாளர்கள் 2 பேரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆய்வாளார்கள் கிறிஸ்டியன் ஜெயசீலி (துரைப்பாக்கம்), ரவி (தேனாம்பேட்டை) ஆகியோர் காயமடைந்துள்ளனர். கொள்ளையர்கள் சுட்டதில் ஜெயசீலிக்கு இடது கையிலும், ரவிக்கு இடுப்பிலும் குண்டு காயம் ஏற்பட்டுள்ளது.