Published On: Sunday, February 12, 2012
அமெரிக்க போர்க்குற்ற தூதுவரின் இலங்கை வருகை
அமெரிக்கா வின் கவனம் இலங்கை மீது குவிக்கப் பட்டிருப்பதற்கு அடையாளமாக அந்நாட்டின் முக்கிய ராஜதந்திரிகளின் இலங்கைக்கான விஜயங்கள் கருதப்படுகிறது. அமெரிக்காவின் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்பான உதவிச் செயலாளர் மரி ஒட்டே, அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் ஆகியோர் இலங்கைக்காக விஜயங்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான விசேட தூதுவர் ஸ்டீவன் ராப் இலங்கைக்கான விஜயமொன்றை தற்போது மேற்கொண்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ளதொரு நிலையில் அமெரிகக உயர் அதிகாரிகளின் இலங்கை விஜயமானது குறிப்பிடத்தக்கதாக அமைகிறது.
ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்புடைய பல அதிகாரிகள் இலங்கைக்கு விஜயங்களை மேற்கொள்ள முன்னர் திட்டமிட்டபோது அவற்றை இலங்கை அரசாங்கமானது தடுத்து நிறுத்தியது. ஐக்கிய நாடுகள் சபையின் சில உயர் அதிகாரிகள் இலங்கைக்கு வர முயன்றபோது, அவர்களுக்கு விசா வழங்குவதைகூட இலங்கை அரசாங்கம் இழுத்தடித்து வந்தமையும் நமக்கு ஞாபகமிருக்கலாம். இருந்தபோதும் அமெரிக்கா உயர் அதிகாரிகளின் இலங்கை விஜயங்களை இலங்கை அரசாங்கத்தினால் தடுத்துநிறுத்த முடியாமல் போய்விட்டது. உலகளவில் அமெரிக்கா செலுத்திவரும் ஆதிக்கமே இதற்கு காரணமாகவும் அமைகிறது.
அந்தவகையில் தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆமெரிக்காவின் போர்க்குற்ற விவகாரங்களுக்காக விசேட தூதுவர் ஸ்டீவன் ராப் மிகமுக்கியமானவராக கருதப்படுகிறார். இலங்கை அரசாங்கப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற யுத்தத்தின் போதான மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விபரங்களை நேரடியாக திரட்டுவதற்காகவே இவர் இலங்கை வந்திருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்துடன் நேரடித் தொடர்புபட்டு, அதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடமிருந்து ஸ்டீவன் ராப், நேரடியாகவே வாக்கு மூலங்களையும் பெற்றுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு கடந்த புதன்கிழமை சென்றுள்ள அமெரிக்காவின் போர்க் குற்ற விவகாரங்களுக்காக விசேட தூதுவர் ஸ்டீவன் ராப், அங்கு இரண்டு நாட்கள் தங்கி நிலைமைகளை அவதானித்தும் இருக்கிறார்.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம், அங்கு நிலவும் சூழ்நிலைகள் குறித்து கேட்டறிந்துள்ள அவர், காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்கள், மாவட்ட சனத்தொகை, உயர் பாதுகாப்பு வலயங்கள், கன்னிவெடி அகற்றல், யுத்தத்தில் பாதிப்படைந்த மக்களின் நிலவரம், அங்கவீனர்கள் நிலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றியும் கலந்துரையாடியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தின் வலிகாமம், வடமராட்சி போன்ற பகுதிகளுக்கும் சென்றுள்ள விசேட தூதுவர் ஸ்டீவன் ராப், அங்கு பொது மக்களை கண்டு கலந்துரையாடியும் உள்ளார். அத்துடன் இறுதி யுத்தம் நடைபெற்ற முல்லைத்தீவு பிரதேசங்களுக்கு கடந்த வியாழக்கிழமை சென்றுள்ள ஸ்டீவன் ராப், அங்கு யுத்தத்தில் நேரடியாக பாதிக்கப்பட்ட பொது மக்களை கண்டு கலந்துரையாடியுள்ளார்.
முல்லைத்தீவு, செல்வபுரம் யூதா தேவாலயத்தில் ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கதறி அழுதவாறு தமது வேதனைகளையும் துயரங்களையும் எடுத்துக்கூறினர். யுத்தம் நடைபெற்றபோது முல்லைத்தீவில் ஏராளமானோர் காணாமல் போயினர். யுத்தம் நிறைவடைந்த பின்னர் எமது பிள்ளைகளையும் கணவன்மாரையும் படையினரிடம் நாங்களாகவே ஒப்படைத்தோம். ஆனால், இவ்வாறு காணாமல் போனோர், கையளிக்கப்பட்டோர் தொடர்பில் இதுவரை எதுவித தகவல்களும் இல்லையென்று பெண்கள் பலர் முறையிட்டனர்.
நாங்கள் மூன்று வகையில் பாதிப்புகளை எதிர்நோக்கினோம். 1990ஆம் ஆண்டு யுத்தம், அதற்குப் பின்னர் 2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தம், பின்னர் இறுதி யுத்தம். இவ்வாறு பெரும் அழிவுகளை எதிர்நோக்கிய நிலையில் நாங்கள் தற்போது மீளக்குடியமர்த்தப்பட்ட போதிலும் அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்தித் தரப்படவில்லையென்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.
யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் எமது பிரதேசங்களில் இராணுவ அடக்குமுறைகளும் அட்டூழியங்களும் தொடர்கின்றன. வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு சோதனைகள் இடம்பெறுகின்றன. பெண்கள் தினமும் துன்புறுத்தப்படுகிறார்கள். இவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த நிலை தொடருமாயின் நாம் குடும்பங்களுடன் சேர்ந்து தற்கொலை செய்ய வேண்டிய நிலையே ஏற்படும் என்று முல்லைத்தீவு பகுதி மக்கள் அமெரிக்காவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான விசேட தூதுவர் ரப்பிடம் தமது வேதனைகளைக் கொட்டித் தீர்த்துள்ளனர். முல்லைத்தீவு மக்கள் விடயத்தில் அமெரிக்கா தலையிட்டு உரிய தீர்வைப் பெற்றுத் தரவேண்டுமென்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வெளிநாட்டு பிரதிநிதி ஒருவரிடம் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் ஓரளவு வெளிப்படையாக பேசிய சம்பவம் இதுவென்பதாலும், அமெரிக்க ராஜாங்க துறையில உலக குற்றவியல் நீதி விவகாரங்களுக்கான அலுவலகத்தைச் சேர்ந்த சிறப்புத் தூதரின் பொது மக்களுடனான இந்த சந்திப்பு முக்கியத்துவமிக்கதாகவே கருதப்படுகிறது.
மேலும் ஸ்டீவன் ராப், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனையும் சந்தித்துப் பேசியுள்ளார். இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள் பற்றி இதன்போது பேச்சு நடத்தப்பட்டதாக கூறியுள்ள சம்பந்தன், இலங்கை யுத்தத்தில் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களும், மனித உரிமைச் சட்டங்களும் மீறப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேசத்தின் கேள்விகள் சிலவற்றுக்கு தாம் இதன்போது பதிலளித்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது அமெரிக்க சிறப்புத் தூதுவரிடம் கருத்துக்களை விளக்கியதாகவும், அதன் ஒரு வெளிப்பாடாகவே சர்வதேச பிரதிநிதிகளுடன் பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, அமெரிக்க உயர் அதிகாரி ஸ்டீவன் ராப்பின் இலங்கை விஜயமானது எவ்வித அழுத்தங்களையும் கொண்டதாக அமையவில்லையென இலங்கை வெளியுறவு அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தற்போதைய நிலவரங்களை அறிந்துகொள்ளவே அமெரிக்க அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதாகவும், இலங்கையின் நடைமுறை கொள்கைளுக்கு இவை வலுசேர்க்குமெனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ள அமுனுகம, பல்வேறு சக்திகள் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும் குற்றமும் சுமத்தியுள்ளார்.
அதேநேரம், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகள் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அமெரிக்க அதிகாரிகளின் இலங்கை விஜயமானது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளமை உண்மையோகும்.
அமெரிக்க உயர் அதிகாரிகள் இலங்கைக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு அறிக்கையொன்றை தயாரிப்பதற்காகவே இலங்கைவந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருப்பதாகவும் சில தரப்புகள் வாதிடுகின்றன.
மற்றும் சிலர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் சாரம்சங்களை இலங்கை அரசாங்கத்திற்கு விளக்கிக் கூறுவதற்காகவே அமெரிக்க உயர் அதிகாரிகளின் இலங்கை விஜயம் மேற்கொண்டதாகவும் குறிப்பிடுகின்றனர். அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதி வதிவிட பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிககாவின் நியூயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போர்க்குற்ற நட்டஈட்டு வழங்கு தள்ளுபடிச் செய்யப்பட்டுள்ளது.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பின்னர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் புலிகளின் தளபதி கேணல் ரமேஸின் மனைவி வத்சலாதேவி உள்ளிட்ட மூவர், மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவிடமிருந்து நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இதுதொடர்பில் சவீந்திர சில்வாவுக்கு நீதிமன்றம் அழைப்பாணையும் விடுத்திருந்தது.
எனினும், ஐ.நா.வுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பயணியாற்றும் தனக்கு இராஜதந்திர பாதுகாப்பு உரிமை உள்ளது என்று தனது சட்டத்தரணி மூலமாக நீநிமன்றத்தில் வாதாடியிருந்தார். இந்நிலையில் இராஜதந்திர விலக்கு கொண்டுள்ள சவீந்திர சில்வாவை விசாரிக்க தமக்கு அதிகாரம் இல்லையென்று கூறி நியூயோர்க் தெற்கு மாவட்ட நீதிபதி ஜே.போல் ஒட்கேன் இந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டார்.
இவ்வாறானதொரு நிலையில் இலங்கைக்கு எதிராக அல்லது ஆட்சியாளர்களுக்கு எதிராக வெளிநாட்டு நீதிமன்றஙகளில் வழக்குத் தாக்கல் செய்வதும், அதில் வெற்றி பெறுவதும் எதிர்காலங்களில் கடினமானதாக அமையும் போலவே தென்படுகிறது எனலாம்.
யுத்தக் குற்றச்சாட்டிலிருந்து சவீந்திர சில்வா விடுதலை பெற்றுள்ள நிலையில், அமெரிக்காவின் போர்க் குற்ற விவகாரங்களுக்கான விசேட தூதுவர் ஸ்டீவன் ராப்பும், இலங்கை வரவிருக்கும் ஏனைய அமெரிக்க உயர் அதிகாரிகளும் தாம் சேகரிக்கவுள்ள விடயங்களை வைத்துக்கொண்டு இலங்கைக்கு எதிராக எத்தகைய நகர்வுகளை, அழுத்தங்களை மேற்கொள்ளப் போகின்றனர் என்பது எதிர்வரும் நாட்களில் ஆர்வத்திற்குரிய விடயங்கள் என்றுகூறலாம்.