Published On: Sunday, February 26, 2012
கல்முனை சாப்புச்சட்டம் இரு சமூகங்களையும் வேறுபடுத்துகிறது

கல்முனையில் சாப்புச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமையும் தமிழர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் எனத் தீர்மானித்திருப்பது இரு சமூகங்களை தொடர்ந்தும் பிரித்து வைப்பதற்கு ஏதுவாக இருப்பதுடன் இன ஐக்கியத்திற்கும் ஊறுவிளைவிப்பதாகவும் உள்ளதாக கல்முனை வர்த்தக சம்மேளனம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேற்படி விடயம் தொடர்பாக கல்முனை வர்த்தக சம்மேளனத்தின் சார்பில் அதன் தலைவர் எஸ்.எம்.ஏ.கரீம், தவிசாளர் யூ.எல்.எம்.பஸீர் ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
கல்முனை மாநகரில் வர்த்தகம் புரிந்துவந்த சகல வர்த்தகர்களும் பன்னெடுங்காலமாக கல்முனை பகுதியின் நிலைமையைப் புரிந்து ஒற்றுமையைப்பேணி பாதுகாத்து வெள்ளிக்கிழமையினை விடுமுறை தினமாக ஏற்று சாப்புச்சட்ட ஒழுங்கு விதிகளை நன்கு மதித்து செயற்பட்டு வந்துள்ளனர். விடயம் இவ்வாறிருக்க ஒருசில வர்த்தகர்களின் தனிப்பட்ட வேண்டுகோளை நிறைவேற்றுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் துணைபோயிருப்பது மிகவும் வேதனைக்குரியதும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயமுமாகும்.
சாப்புச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துகின்ற விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு மு.கா. தலைமையும், த.தே.கூ. தலைமையும் தமிழ் வர்த்தகர்களுடன் கலந்துரையாடிய வேளை, முஸ்லிம் வர்த்தகர்கள் அழைக்கப்படாமையானது தேர்தல் காலங்களில் முஸ்லிம்களின் தலைநகரம் என நாமம் சூட்டப்பட்ட பட்டினத்தின் முஸ்லிம் வர்த்தகர்கள் அழைக்கப்படாமல் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது எந்த வகையில் நியாயமாகும்.
நீண்டகாலமாக கல்முனை வர்த்தகசம் மேளனம், கல்முனை வர்த்தக சங்கம், ஐக்கிய வணிகர் அமைப்பு (தமிழ் வர்த்தகர் சங்கம்), சாய்ந்தமருது, மருதமுனை வர்த்தக சங்கங்களின் தலைவர், செயலாளர்களை உள்ளடக்கியதாக கல்முனை மாநகரசபையில் செயற்பட்டுவரும் அரச, தனியார் செயற்குழு கூட்டத்தில் பல வருடங்களாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் நிமித்தமே அரசாங்க விதிகள், நிதி நடைமுறைகளைப் பேணியதாக 19 கடைகளிற்கும் திறந்த கேள்விப்பத்திரம் கோரப்பட்டு ஆகக்கூடிய கேள்வித் தொகை சமர்ப்பித்தவர்களுக்கு கடைகளை வழங்குவதற்கு கேள்விச் சபை தீர்மானித்து உறுப்பினர்களின் மாதாந்த சபை அமர்வின்போது உறுதிப்படுத்தப்பட்டு திறப்புகள் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட இறுதிநேரத்தில் தீர்மானத்தினை கைவிடக்கோரியிருப்பது எந்தவகையில் நியாயமாகும். பகிரங்கமாக தினசரிப் பத்திரிகையிலும், விளம்பரப் பலகைகளிலும் விளம்பரப்படுத்தப்பட்டபோது தீர்மானத்தை மாற்றுமாறு கோரிக்கை விடுத்தவர்கள் எங்கிருந்தார்கள்?
தமிழர்களுக்கு 05 கடைகளும் முஸ்லிம்களுக்கு மிகுதி கடைகளும் வழங்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தினை மு.கா., த.தே.கூ. தலைமைகள் கையெழுத்திட்டு மாநகரசபைக்கு எழுத்துமூலம் வழங்குவார்களா? இவ்வாறு கல்முனையில் மாத்திரம் இன ரீதியாகநோக்கப்படுகின்ற அதேவேளை மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் போன்ற நகரங்களில் முஸ்லிம்களின் பங்குகள் என்ன என்பது தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு எது என்பதை தெளிவுபடுத்துமா? அதேபோன்று மு.கா. தலைவர், கல்முனைக்கு வெளியில் கூட்டமைப்புடன் பேசி முஸ்லிம்களின் இன விகிதாசாரத்தை உறுதிப்படுத்துவாரா? மேற்படிவிடயங்களில் இரண்டு கட்சித் தலைவர்களும் தீர்க்கதரிசனமானதும் தீர்க்கமானதுமான முடிவினை எடுக்கவேண்டும் என வர்த்தக சம்மேளனம் பெரிதும் விரும்புகின்றது.
மிகவும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கல்முனை மாநகரஅபிவிருத்தித் திட்டமானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் மரணத்தோடு எதுவித முன்னெடுப்புக்களுமின்றி கிடப்பில் கிடப்பதானது முஸ்லிம்களின் வர்த்தக தலைநகரும், தென்கிழக்கின் முகவெற்றிலையுமான கல்முனையினை வேண்டுமென்றே திட்டமிட்டுப் புறக்கணிக்கும் செயலாகவே எமது சம்மேளனம் பார்க்கின்றது. முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து கல்முனை மாநகருக்கான அபிவிருத்தித் திட்டத்தினை தயார் செய்தபோது அதனை அப்போது தடுத்து நிறுத்தியவர்களும் இதே தமிழ் கூட்டமைப்பினர் என்பதனை நாம் மறந்துவிடவில்லை.
கிழக்கில் முக்கிய நகரங்களான திருகோணமலை, மட்டக்களப்பு, காத்தான்குடி, அக்கரைப்பற்று, அம்பாரை என அனைத்து நகரங்களுமே அவ்வப்பிரதேச அரசியல் வாதிகளால் திட்டமிடப்பட்டு அபிவிருத்தி செய்யப்படுகின்றபொழுது அபிவிருத்திக்காக நீண்டகாலமாக ஏங்கும் கல்முனை நகர் மாத்திரம் ஏன் புறக்கணிக்கப்படகின்றது. கல்முனை நகர அபிவிருத்திக்காக மு.கா. தலைமை இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள்தான் என்ன?
கல்முனைக்கு கிழக்குமாகாண ஆளுனரின் வருகையின் மூலம் சுமார் 350 மில்லியனுக்கு மேற்பட்ட தொகையிலான அபிவிருத்திகளை பெறக்கூடிய சந்தர்ப்பம் இருந்தும் அரசியல் குத்துவெட்டுக் காரணமாக அதனை தடுத்திருப்பதானது கல்முனையின் அபிவிருத்தியை மேலும் பின்கொண்டு செல்லவே வழிவகுத்துள்ளது. எனவே, இது விடயத்தில் இனிவரும் காலங்களிலாவது பொருத்தமான முடிவுகளை எடுக்க சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் முன்வரவேண்டும்” இவ்வாறு கல்முனை வர்த்தக சம்மேளனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கல்முனை வர்த்தக சம்மேளனம்