Published On: Sunday, February 19, 2012
பிரபல பாப் பாடகி 'விட்னி' உடல் அடக்கம்

அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி விட்னி ஹுஸ்டனின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி விட்னி ஹூஸ்டன். தனது காந்த குரலால் உலகளவில் புகழ்பெற்றவர். வயது 48. நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள நெவார்க் நகரில் 1963-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி பிறந்தவர். இளம் வயதிலேயே சவுண்ட் ரெக்கார்டிங்கில் சிறந்து விளங்கியவர். அதன்பின், மாடல் அழகியாக, சினிமா நடிகையாக, பாப் பாடகியாக, தயாரிப்பாளராக அமெரிக்காவில் வலம் வந்தவர்.
ஹவ் வில் ஐ நோÕ (எனக்கு எப்படி தெரியும்) என்ற இவரது முதல் வீடியோ இசை ஆல்பம் பலரது புருவத்தையும் உயர்த்தியது. அதன்பின் அடுத்தடுத்து 7 ஆல்பங்களை குறுகிய காலத்தில் வெளியிட்டு அசத்தியவர். அத்துடன் உலகிலேயே அதிக விற்பனையான ஆல்பங்களின் பட்டியலில் இவருடையதும் சேர்ந்தது. இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றது. எம்டிவியிலும் தனது காந்த குரலால் ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.
இந்நிலையில், லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெவர்லி ஹில்ஸ் ஓட்டலில் 54-வது கிராமி விருது வழங்கும் விழா கடந்த 11-ம் தேதி நடந்தது. இதை முன்னிட்டு விட்னியின் ஆசானாக கருதப்படும் கிளிவ் டேவிஸ் என்ற இசைக் கலைஞர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் பங்கேற்க விட்னியும் வந்தார். லாஸ்ஏஞ்சல்சில் உள்ள ஒரு ஓட்டலின் 4-வது மாடியில் தங்கியிருந்த விட்னி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இந்த தகவல் பரவியதும் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். எனினும் திட்டமிட்டபடி கிராமி விருது வழங்கும் விழா நடத்தி முடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள இசைப் பிரியர்கள் விட்னியின் மறைவால் அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டனர். மறைந்த விட்னியின் உடல் பின்னர் சொந்த ஊரான நெவார்க் கொண்டு வரப்பட்டது.
இங்குள்ள சர்ச்சில் நேற்று இறுதி பிரார்த்தனை நடத்தப்பட்டது. நான்கு மணி நேரம் நடந்த பிரார்த்தனை கூட்டம், கடைசியில் விட்னியின் ஐ வில் ஆல்வேஸ் லவ் யூ என்ற பாடலுடன் நிறைவு பெற்றது. அதன்பின் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதில் விட்னியின் தாய், சகோதரிகள், குடும்பத்தினர் மற்றும் பாப் கலைஞர்கள் ஜெனிபர் ஹட்சன் உள்பட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்று விட்னிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.