Published On: Sunday, February 12, 2012
அடிபடுவார்களா இந்தியா? ; அவுஸ்திரேலியாவுடன் மோதல்

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இன்று இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் தங்கள் இரண்டாவது போட்டியில் மோதுகின்றன. கடந்த போட்டியில் இலங்கையை வீழ்த்திய உற்சாகத்தில் இருக்கும் இந்திய அணி, இன்று அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு அடி கொடுக்க முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 4 என, மொத்தம் 8 போட்டியில் விளையாடும். இதுவரை அனைத்து அணிகளும் 2 போட்டியில் மோதியுள்ள நிலையில், ஆஸ்திரேலியா (9 புள்ளி), இந்தியா (4) முதல் இரு இடத்தில் உள்ளன.
இன்று அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடக்கும் தொடரின் 5வது லீக் போட்டியில், இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இரண்டாவது முறையாக மோதுகின்றன. கடந்த போட்டியில் இலங்கையை வீழ்த்திய இந்திய அணி உற்சாகத்தில் உள்ளது.
இருப்பினும் இந்திய அணியின் துவக்கம் இன்னும் சரியாக அமையவில்லை. டெஸ்ட், "டுவென்டி-20' மற்றும் இரு ஒருநாள் போட்டிகள் என, மொத்தம் 12 இன்னிங்சில், ஒரு முறை கூட இந்திய அணியின் துவக்க ஜோடி, 50 ரன்களை தாண்டவில்லை.
இங்குள்ள மைதானங்கள் பெரியது என்பதை இன்னும் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். இதுவரை கிடைத்த தோல்விகளில் இருந்து பாடம் கற்க மறுக்கின்றனர். பவுண்டரி, சிக்சருக்கு ஆசைப்பட்டு தேவையில்லாத "ஷாட்டுகளால்' விக்கெட்டுகளை பறி கொடுக்கின்றனர்.
இதனால், நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல், வெற்றிக்கு தேவையான ரன்களை எடுக்க முடியாமல் தடுமாறுகின்றனர். இன்றாவது இவர்கள் திருந்துவார்களா என்பதை பார்க்க வேண்டும்.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தர, "சீனியர்கள்' சுழற்சி முறையில் ஓய்வு என்ற "பாலிசி'யில் சச்சின் சிக்கமாட்டார் என்று தெரிகிறது. இவருக்கு ஆதரவு அதிகம் இருப்பதால் காம்பிர் அல்லது சேவக் வெளியில் உட்கார நேரிடலாம். "மிடில் ஆர்டரில்' விராத் கோஹ்லி தவிர, ரெய்னா, ரோகித் சர்மா ஆகியோர் தொடர்ந்து கிடைத்த வாய்ப்பை வீணடிக்கின்றனர். பின்வரிசையில் கேப்டன் தோனி, "ஆல் ரவுண்டர்' ஜடேஜா ஆறுதல் தர காத்திருக்கின்றனர்.
இரண்டு சுழல்:
இன்று இந்திய அணி தலா 2 வேகப்பந்து, சுழற் பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் என்று தெரிகிறது. இதனால் பிரவீண் குமாருடன், ஜாகிர் கான் அல்லது வினய் குமாரில் ஒருவர் தான் இடம் பெறலாம். பெர்த் போட்டியில் கலக்கிய அஷ்வினுடன், ராகுல் சர்மா அணிக்கு திரும்புகிறார்.
யாருக்கு இடம்:
ஆஸ்திரேலிய அணியில் வார்னர், மாத்யூ வேட் வழக்கம் போல அதிரடி காட்டுவார்கள். "மிடில் ஆர்டரில்' பாண்டிங் ஏமாற்றம் தொடருமா என்று தெரிய வில்லை. மைக்கேல் ஹசிக்குப் பதில் வந்துள்ள மிட்சல் மார்ஷ் அல்லது பீட்டர் பாரஸ்ட் இருவரில் ஒருவருக்கு இன்று வாய்ப்பு உண்டு. கேப்டன் மைக்கேல் கிளார்க், டேவிட் ஹசியும் இந்தியாவுக்கு மீண்டும் தொல்லையாக இருக்கலாம்.
ஹில்பெனாஸ் இல்லை:
பிரட் லீக்குப் பதில் இடம் பெற்ற ஹில்பெனாஸ் இன்று விளையாட மாட்டார் என்று தெரிகிறது. மற்றபடி ஸ்டார்க், ஹாரிஸ், மெக்கே கூட்டணி எதிர்பார்ப்புக்கு மாறாக நன்றாகவே செயல்படுகின்றனர். சுழலில் தோகர்டியும் நம்பிக்கை தருகிறார். தவிர, "பார்ட் டைம்' பவுலர் டேவிட் ஹசியும் ஜொலிக்கலாம்.
மைக்கேல் ஹசி "ஓய்வு'
இன்றைய போட்டியில் சீனியர் வீரர் மைக்கேல் ஹசிக்கு, 36, ஓய்வு தரப்பட்டு, டெஸ்ட் தொடரில் சொதப்பிய ஷான் மார்ஷ் சகோதரர் மிட்சல் மார்ஷ், 20, மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் கிளார்க் தனது "டுவிட்டரில்' வெளியிட்ட செய்தியில்,"" மைக்கேல் ஹசி இன்று ஓய்வு எடுப்பார். அடுத்து சிட்னி போட்டியில் மீண்டும் களமிறங்குவார்,'' என்றார்.
அணி விவரம்: கிளார்க் (கேப்டன்), கிறிஸ்டியன், தோகர்டி, ஹாரிஸ், டேவிட் ஹசி, மிட்சல் மார்ஷ் அல்லது பாரஸ்ட், மெக்கே, பாண்டிங், ஸ்டார்க், வேட், வார்னர்.
வெற்றி அதிகம்
அடிலெய்டில் இந்திய அணி இதுவரை 11 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் 6 ல் இந்திய அணி வென்றது. 5 ல் தோற்றுள்ளது.
* ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பங்கேற்ற 4 போட்டிகளிலும் இங்கு இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.
* கடைசியாக இந்திய அணி இங்கு விளையாடிய 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்றுள்ளது.
* இங்கு அதிகபட்சமாக இந்திய அணி, ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 280/7 (2004) ரன்கள் எடுத்தது.
மழை வருமா
இன்று போட்டி நடக்கும் அடிலெய்டில் வானம் சற்று மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்சம் 25, குறைந்தபட்சம் 13 டிகிரி செல்சியசாக வெப்பநிலை இருக்கும். மழை வர வாய்ப்பு இல்லை.