Published On: Friday, February 17, 2012
சிலாபம் மீனவர் சூட்டு சம்பவம் குறித்து சி.ஐ.டி. விசாரணை

சிலாபம் மீனவர்கள் நேற்றும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். நான்காவது நாளாகவும் நேற்று சிலாபம் மீன் சந்தை உட்பட கடற்கரை பிரதேசம் வெறிச்சோடிக் கிடந்தன. சிலாபம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதியிலுள்ள எந்தவொரு மீனவரும் கடற்றொழிலுக்காக செல்லவில்லை.
சிலாபம் கடற்கரை வீதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நகரில் இராணுவ டிரக் வண்டிகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. விசேட அதிரடிப்படைக்கு பதிலாக இராணுவத்தினரே அதிகளவு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வழமையை விட மீன் விலை வெகுவாக குறைந்து காணப்பட்டது.
துப்பாக்கி சூடு இடம் பெற்ற மகாவெல்ல பகுதியில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளில் ஈடுபட்டனர். சுமார் 25 பேரிடமிருந்து வாக்கு மூலங்கள் பெறப்பட்டன. உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் நடைபெற்று வரும் இவ் விசாரணையின் போது 4 வாள்கள், 4 இரும்பு கம்பிகள், 10 தடிகள், 80 போத்தல்கள், 06 பெட்ரோல் குண்டுகள் என்பவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.