Published On: Monday, August 29, 2011
தந்தை-மகள் உறவின் உணர்ச்சிமக்க பாசப்பிணைப்பு "தெய்வத்திருமகள்"

தெய்வத்திருமகள் - விமர்சனம்

- முஹம்மட் பிறவ்ஸ்
வளர்ச்சி குன்றிய ஒரு தந்தை 5 வயது மகளை வளர்க்க முடியுமா? என்பது தான் கதைக்கரு. தந்தை-மகள் பாசத்தைப் பிழிந்து தந்திருக்கிறார்கள் தெய்வத் திருமகள் மூலமாக. எழுத்து, இயக்கம்-விஜய், தயாரிப்பு எம்.சிந்தாமணி, ரோனிஸ்க்ரூவாலா, பாடல்கள்-நா.முத்துக்குமார், இசை-ஜீ.வி.பிரகாஷ்குமார், ஒளிப்பதிவு-நீரவ்ஷா, எடிட்டிங்-அண்டனி.
"I am SAM' என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல் என்று சொல்லப்பட்டாலும், கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி வக்கிரங்களை விதைக்கின்ற தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இவ்வாறான ஆரோக்கிய சினிமாவின் வரவு தமிழ் ரசிகர்களுக்கு திருப்தியளித்திருக்கிறது. இப்படத்துக்கு "சென்சார் குழு' கூட வாழ்த்துத் தெரிவித்திருக்கின்றது.
இப்படத்தில் விக்ரம், அனுஷ்கா, அமலா பால், சந்தானம், நாசர், (புது முகம்) பேபி சாரா ஆகியோருடன் பல நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள்.
6 வயது மனநிலையுடன் மனம் குன்றிய நிலையில் இருக்கும் அப்பா வான கிருஷ்ணா (விக்ரம்) தனது 5 வயது மகளான நிலா (பேபி சாரா) மீது அதிகளவான அன்பு வைத்திருக்கிறார். கிருஷ்ணா மனநிலை குன்றியவர் என்பதால் நிலாவை அவரிடமிருந்து பலவந்தமாகப் பிரிக்கிறார் நிலாவின் தாத்தா. வக்கீலாக வரும் அனுஷ்கா நிலாவை அப்பாவான கிருஷ்ணாவுடன் சேர்க்கப் போராடுகிறார். இருவரும் சேர்ந்தார்களா என்பதுதான் கிளைமாக்ஸ்.
இப்படத்தில் அந்நியனைவிட தன்னை வருத்தி நடித்திருக்கிறார் விக்ரம். நடிப்புக்காக தன்னை வருத்திக்கொள்வதில் விக்ரமுக்கு நிகர் விக்ரமேதான். விக்ரம் வளர்ந்த குழந்தையாகவும் பேபி சாரா வளராத குழந்தையாகவும் இருப்பது படத்துக்கு பிளஸ்.
எதுவுமே தெரியாமல், தனது மகளைத் தேடியலையும் பச்சைக்குழந்தை போன்ற மனமுடைய கிருஷ்ணா, வழக்கறிஞரான அனுராதாவுடன் (அனுஷ்கா) அறிமுகமாகும் காட்சியிலே "நடிப்பு என்றால் இதுதான்'' என்று நிரூபித்திருக்கிறார். நீ யாரென்று விசாரிக்கும்போது ரொம்பவும் சிரமப்பட்டு பெயர், ஊரைச் சொல்லி "நிலா... நிலா... எனக்கு வேணும்' என்று தழுதழுத்த குரலில் கெஞ்சும்போது கூடவே அவரது கை, கால் மட்டுமல்ல சைகைகளும் மழலை பேசுகிறது. சிறுவர்கள் போலவே உடையணிந்து அதைக் கையால் இழுத்துஇழுத்து விடுவதும் யதார்த்தம்.
ஒரு கட்டத்தில் கிருஷ்ணாவின் கதையைக்கேட்ட பின்னர், நிலாவை அவருடன் சேர்க்கப்படாதபாடு படுகிறார் அனுராதா. படத்தில் இழையோடும்சோகத்தை தணிக்கவென அனுஷ்காவுடன் இருக்கும் வக்கீல் சந்தானம் நம்மை அலட்டல், "டபுள் மீனிங்' வசனம் இல்லாமல் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கிறார்.
நிலாவின் பாடசாலை அதிகாரியாக வரும் அமலா பால் அது தனது அக்காவின் குழந்தை என்று தெரிந்து காட்டுகின்ற அன்பு எம்மை அசர வைக்கிறது.
விக்ரமுக்கு இணையாக மகள் வேடத்தில் கலக்கியிருக்கிறார் குட்டி சாரா. பார்க்கும் எல்லோரும் தனது சொந்த மகளாக வைத்திருக்க ஆசைப்படும் அளவுக்கு அழகும், நடிப்பும், சுட்டித்தனமும் இருக்கிறது. அப்பாவிடம் ''அம்மா எங்கப்பா..?'' என்று கேட்க, சாமிக்கிட்ட... என்று சொல்கிறார். அப்போது, "ஏன் சாமிக்கு அம்மா இல்லையா...?'' என்று கேட்கும்போது நம் கண்களில் கண்ணீர் ததும்புகிறது. அப்பாவுடன் சைகை மொழியில் பேசும்போது எம்மை அறியாமலேயே மெய்மறந்து அவர்களுடன் ஒன்றிப்போகிறோம்.
விக்ரமின் குரலில் வரும் "கதை சொல்லப் போறன்... ஒரு கதை சொல்லப் போறன்'' பாடல் சிறுவர்களுக்கு நல்லதொரு தீனி. அதில் கிரபிக்ஸையும் கலந்து அசத்தியிருக்கிறார்கள். "விழிகளில் ஒரு வானவில்...'' பாடல் காதில் ரீங்காரமாகவும் கண்ணுக்கு விருந்தாகவும் இருக்கின்றது. இவ்விடத்தில் நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு புதுமை பேசுகிறது. வரிகளை எழுதிய நா.முத்துக்குமாரையும், இசைவழங்கிய ஜீ.வி. பிரகாஷ்குமாரையும் பாராட்டியே ஆகவேண்டும். வித்தியாசமாக எடிட்டிங்செய்த அண்டனிக்கும் ஓ போட வேண்டும்.
உணர்ச்சிபூர்வமான பல இடங்களில் பின்னணி இசை எம்மை உருகவைக்கிறது. நீதிமன்றக் காட்சிகள் வெகு யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. கடைசியில் வக்கீல் நாசரின் இறுதியான முடிவுக்காக எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்க, அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், அப்பாவும் மகளும் சைகையால் அன்பைப் பரிமாறிக்கொள்ளும் காட்சி உணர்வுள்ளதாக இருக்கிறது. நடிப்பின் யதார்த்தத்தால் அதிகமான ரசிகர்களின் கண்களில் கண்ணீர் வரவழைத்த பெருமை தெய்வத்திருமகளையே சாரும்.
குறைகள் என்று பெரிதாக எதுவும் இல்லை. என்றாலும், கதையோட்டத்தில் வேகம் போதாது. முதற்பாதியில் நாடகத்தின் வேகம் தொக்கி நிற்கின்றது. கிருஷ்ணாவின் மனைவி எதைக்கண்டு வீட்டைவிட்டு வந்து திருமணம் செய்தார் என்பது புரியாத புதிராகவே உள்ளது. மகளை கைகழுவிவிட்ட அப்பா, பேரப்பிள்ளையை மட்டும் ஏன் வலுக்கட்டாயமாக அப்பாவிடமிருந்து பிரித்தெடுக்கவேண்டும்? இந்த இடத்தில் கொஞ்சமாக சறுக்குகிறது யதார்த்தம். மின்னலின்போது பயத்தால் அனுஷ்காவை திடீரெனக் கட்டிப்பிடிக்கிறார் விக்ரம். இந்த இடத்தில் ஏன் பாடல்? கட்டிப்பிடித்தால் உடனே பாடல்தானா? தமிழ் சினிமா இன்னும் திருந்தவில்லை.
இரத்த உறவுகளின் பாசம் எந்தளவு உண்மையானது என்பதை சித்தரித்துக் காட்டியிருக்கிறது தெய்வத்திருமகள். நம் நாட்டிலும் உறவுகளைத் தொலைத்த (பிரிந்த) உள்ளங்களின் பாசத்துக்கான போராட்டத்தின் ஒரு துளியையாவது இப்படம் வெளிப்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆக மொத்தத்தில், தெய்வத்திருமகள் பாசம் + சட்டம் = கண்ணீர்
நன்றி: இருக்கிறம்