Published On: Friday, September 09, 2011
தெரிந்தே ஊக்க மருந்து பாவனை

எனக்குத் தெரிந்து சில வீராங்கனைகள் தடை செய்யப்பட்டவை என்பது தெரிந்தும் கூட சில ஊக்க மருந்துகளை சாப்பிடுவதை நான் பார்த்திருக்கிறேன். இது தவறு. இப்போது தேவையில்லாமல் நாட்டுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளனர் இந்த வீராங்கனைகள் என்று சாடியுள்ளார் இந்தியாவின் பேட்மிண்டன் சாம்பியன் சாய்னா நெஹ்வால்,.
இந்திய தடகள வீராங்கனைகள் சிலர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளை சாப்பிட்டு இப்போது பெரும் சிக்கலில் மாட்டியுள்ளனர். இதுகுறித்து சாய்னா கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
எனக்குத் தெரிந்து பல தடகள வீராங்கனைகள், பளு தூக்கும் வீராங்கனைகள், தடை செய்யப்பட்டவை என்று தெரிந்தும் சில ஊக்க மருந்துகளை சாப்பிட்டுள்ளனர். அதை என்னிடமே கூட அவர்கள் கூறியுள்ளனர்.
இவை மருந்துக் கடைகளிலேயே கிடைப்பதாக கூறுகிறார்கள். அது குறித்து எனக்குத் தெரியாது. நான் அவற்றை ஒருபோதும் தொட்டதே இல்லை.
நாம் சாப்பிடும் மருந்துகள் என்ன என்பதை முதலில் விளையாட்டில் ஈடுபட்டிருப்போர் தெளிவாக தெரிந்து வைத்திருப்பது அவசியம் பயிற்சியாளரே கொடுத்தால் கூட அது என்ன என்பதை அறிந்த பிறகுதான் சாப்பிட வேண்டும். பயிற்சியாளர் எதைக் கொடுத்தாலும் வாங்கி சாப்பிடுவது தவறு.
எனக்கு காய்ச்சல் வந்தால் உடனடியாக நான் என்ன மருந்து சாப்பிட வேண்டும் என்பதை டாக்டர்களிடமும், எனது உடல் நல பயிற்சியாளரிடமும் தெளிவாக கேட்டு, தடை செய்யப்பட்ட மருந்துகள் அதில் இருக்கிறதா என்பதை அறிந்த பிறகுதான் சாபப்பிடுவேன். நமக்குத் தெரியாமல் கூட ஊக்க மருந்துகளை நாம் உட் கொண்டு விடக் கூடாது. இதில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த வீராங்கனைகள் தாங்கள் வாங்கிய பதக்கங்களை திருப்பிக் கொடுக்க வேண்டிய துரதிர்ஷ்ட நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது பரிதாபத்துக்குரியது. ஊக்க மருந்துகளை கண்காணிக்கும் வாடா அமைப்பின் விதிமுறைகள் அனைவருக்கும் தெரியும். அவர்களின் இணையதளத்திற்குப் போய் பார்த்தால் எவை எவை தடை செய்யப்பட்டவை என்பதை அழகாக தெரிந்து கொள்ளலாம். அதைக் கூட தெரிந்து கொள்ளாமல் இந்த வீராங்கனைகள் இருந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.
அதேசமயம், நமது வீராங்கனைகள் பலர் படிப்பறிவு இல்லாதவர்கள். எனவே பயிற்சியாளர்கள் சொல்வதை அப்படியே கேட்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றார் சாய்னா.