Published On: Tuesday, September 06, 2011
மூவரையும் தூக்கிலிருந்து தப்புவிக்க சண்முகத்தின் தூக்கு மரணம்

- ரிஷி

“வழக்கின் விசாரணையே முழுமையாக முடிவடையாத நிலையில், அதில் சம்மந்தப்பட்ட மூவருக்கு ஏன் தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்? என்ற கேள்வியும், “விசாரணையை முதலில் முடியுங்கள், அதன்பின்னரும் இந்த மூவரும் தூக்குத் தண்டனை பெறக்கூடிய வகையில் குற்றம் செய்தவர்களா என்று பார்க்கலாம் என்ற வாதமும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படலாம். இதற்குக் காரணம், இந்த வழக்கில் சில loose ends உள்ளன. விசாரணையை முடிக்காமல் இன்னமும் வைத்திருப்பதன் காரணமும் அதுதான்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரையும் மரணத்தில் இருந்து காப்பாற்றும் முயற்சியில் தமிழகம் எங்கும் போராட்டங்கள் ஒருபக்கமாக நடக்க, தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து கருணை மனுவை ஏற்றுக் கொள்ள வைக்கும் முயற்சிகள் மற்றொரு பக்கமாக நடக்க, மூன்றாவது பக்கமாக நடைபெறும் முயற்சிகள்தான், உயர் நீதிமன்றம் மூலமாக நடைபெறத் தொடங்கியுள்ளன.
உயர் நீதிமன்றத்தில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜராகியுள்ளார் ‘இந்தியாவின் மிகத் திறமைசாலியான வக்கீல்’ என்று கருதப்படும் ராம் ஜெத்மலானி. உயர் நீதிமன்றத்தில் அவருடைய வாதம் காரணமாக, மூவருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட முடியாமல் 8 வாரங்களுக்கு தடையுத்தரவு போட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
8 வாரங்களுக்குப் பின் என்ன நடக்கும்?
ராம் ஜெத்மலானி இந்த வழக்கில் தீவிரமாக இறங்கவுள்ளார் என்று தெரியவருகின்றது. நீதித்துறை வட்டாரங்களில் ராம் ஜெத்மலானி பற்றி ஹிந்தியில் பிரபலமான கூற்று ஒன்று உண்டு. “ஒரு வழக்கில் இவர் நுழைந்தால், வழக்கின் இறுதி துரும்பைக்கூட எடுத்து பல் குத்தாமல் விடமாட்டார்” என்பதே அது!
அப்படியான ஒருவரிடம், loose ends காரணமாக, முழுமையாக விசாரணை முடிவடையாத வழக்கு ஒன்றில் மூவருக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்ட வழக்கு வந்திருக்கிறது. “விசாரணையை முதலில் முழுமையாக முடியுங்கள் பார்க்கலாம்” என்று அவர் வாதம் செய்யத் தொடங்கினால், ராஜிவ் காந்தி கொலை வழக்கில், மீண்டும் பழைய சம்பவங்கள் கிளறப்படும் சாத்தியம் ஏற்படும்.
வழக்கிலுள்ள loose endsல் ஒன்று, சந்திராசாமி, சுப்ரமணியம் சுவாமி ஆகிய இருவரும் முழுமையாக விசாரிக்கப்படாதது. மற்றையது, கோடியக்கரை (கோடிக்கரை என்றும் சொல்வார்கள்) சண்முகம் பற்றியது. இவர் ராஜிவ் கொலையைக் கையாண்ட புலனாய்வுக் குழுவினரால் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, இறந்து போனார். ராஜிவ் கொலை வழக்கு விசாரணையின்போது, அவரது மரணம் பற்றி அடக்கி வாசிக்கப்பட்டது.
இந்த இரு விவகாரங்களுமே மீண்டும் கிளறப்படலாம். மறு விசாரணை அல்லது விசாரணையின் தொடர்ச்சியை நடத்துமாறு ராம் ஜெத்மலானி கோரலாம்.
ராஜிவ் கொலை வழக்கை விசாரிப்பதற்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஜெயின் கமிஷன், “சந்திரா சாமி, சுப்ரமணியன் சுவாமி ஆகிய இருவரையுமே நாம் விசாரிக்க வேண்டியிருக்கிறது. விசாரணைக்கு அவர்கள் போதிய ஒத்துழைப்பை தரவில்லை என்று கூறியிருந்தது. இது ஜெயின் கமிஷன் அறிக்கையில் பதிவாகியுள்ளது.
ஜெயின் கமிஷனின் இந்தக் கூற்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலதிக விசாரணைக்காக என்றே புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு, அதற்கு ‘பல்முனைநோக்கு புலன் விசாரணை குழு’ என்று பெயரும் வைத்தார்கள். இந்த குழு 15 வருடங்களுக்கு மேலாக இயங்கியும், சுப்ரமணியன் சுவாமியையும், சந்திரா சாமியையும் இன்றுவரை விசாரிக்கவில்லை.
ஆனால், அதே நேரத்தில் இந்த இருவருக்கும் ராஜிவ் காந்தியின் கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என்று குற்றம் சுமத்தும் வாக்குமூலங்கள், ஜெயின் கமிஷன் அறிக்கையில் பதிவாகியுள்ளதை இன்றும் காணலாம்.
ஜெயின் கமிஷன் விசாரணையின்போது, சுப்ரமணியன் சுவாமியிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி, “ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு புலன்விசாரணைகூட முறையாகத் தொடங்கப்படாத நேரத்தில், ‘இந்தக் கொலையைச் செய்தது விடுதலைப் புலிகள்தான் என்று உங்களால் எப்படி அறிவிக்க முடிந்தது? அந்த விஷயம் உங்களுக்கு எப்படி தெரிய வந்தது?”
இதற்கு அவர் கொடுத்துள்ள பதில், “எனக்கு ஸ்ரீலங்காவில் இருந்து ஒருவர் தகவல் கொடுத்தார் என்பதுதான்.
சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது, 1990-91ல் மத்திய அரசில் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் சுப்ரமணியன் சுவாமி. அதாவது, ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட நேரத்தில் இவர்தான் இந்தியாவின் சட்ட அமைச்சர். அப்படியான முக்கிய பொறுப்பிலுள்ள ஒருவர், இந்தியாவின் முன்னாள பிரதமர் கொல்லப்பட்ட உடனே, புலனாய்வுகூட தொடங்கும் முன், ‘இந்தக் கொலையைச் செய்தது விடுதலைப் புலிகள்தான்’ என்று அறிவிக்கிறார்.
ஒரு நாட்டின் சட்டத்துறை அமைச்சரே இப்படியொரு அவசர அறிவிப்பை வெளியிட வேண்டுமானால், அவருக்கு ‘ஸ்ரீலங்காவில் இருந்து தகவல் கொடுத்தவர்’ எவ்வளவு நம்பிக்கைக்குரிய நபராக இருக்க வேண்டும்!
ஜெயின் கமிஷன் விசாரணையில், “உங்களுக்கு ஸ்ரீலங்காவிலிருந்து தகவல் கொடுத்த நபர் யார்?” என்று கேட்கப்பட்டபோது, அதற்கு சுப்ரமணியன் சுவாமியின் பதில் – மௌனம்!
இதையடுத்தே, “சுப்ரமணியன் சுவாமி விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு தரவில்லை” என்று ஜெயின் கமிஷன் கூறி, ‘பல்முனைநோக்கு புலன் விசாரணை குழு’ ஒன்றை அமைத்தது. அதன் விசாரணை இன்னமும் முடிவடையவில்லை.
இரண்டாவது விவகாரம், கோடியக்கரை சண்முகத்தின் சந்தேகத்துக்குரிய மரணம்! (ராஜிவ் காந்தி கொலையைப் புலனாய்வு செய்த சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வுக்குழு, இந்த மரணத்தை தற்கொலை என்கிறது)
சந்தேகத்துக்குரிய இந்த மரணம் பற்றி மிக விரிவாக விறுவிறுப்பு.காம் வாராவாரம் வெளியிடும் ‘ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை’ தொடரின் சில அத்தியாயங்களில் இடம்பெறவுள்ளதால், அதைப்பற்றி சுருக்கமாக தருகிறோம்.
கோடியக்கரை சண்முகம் ஒரு வர்த்தகர் என்று சொல்லப்பட்டாலும், அவரது பிரதான தொழில் கடத்தல்தான். தமிழகத்தின் வேதாரண்யம் கடற்கரைப் பகுதியிலிருந்து ஸ்ரீலங்காவின் மன்னார் பகுதிக்கு படகுகள் மூலம் பொருட்கள் கடத்துவதே இவரது வழக்கம்.
இந்தப் பகுதியில், விடுதலைப்புலிகளும் மற்றைய இயக்கத்தினரும் ஆயுதங்கள், எரிபொருள், மற்றும் வெறு பொருட்களைக் கடத்துவது அதிகமாகவே, ஒரு கட்டத்தில் சண்முகம் அந்தக் கடத்தல்களின் இந்திய முகவராக மாத்திரம் இயங்கத் தொடங்கினார். அதாவது இந்திய சைடில்தான் இவரது நடவடிக்கைகள் இருந்தன.
சுருக்கமாகச் சொன்னால், சண்முகத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இருந்த தொடர்பு, வேதாரண்யம் பகுதியில் ஒன்றும் ரகசியமல்ல. ராஜிவ் கொல்லப்பட்டபின் தொடங்கிய புலனாய்வின்போது, சில தடயங்கள் புலனாய்வுக் குழுவை வேதாரண்யம்வரை இழுத்துச் சென்றன.
1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி இரவு, ராஜிவ் காந்தி குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். புலனாய்வுக்குழு ஹெலிகொப்டர் மூலம் வேதாரண்யம் போய் இறங்கியது, ஜூலை 18-ம் திகதி.
இவர்கள் போய் இறங்கியது முருகன் (தற்போது தூக்குத் தண்டனை பெற்றுள்ளவர்) வேதாரண்யத்தில் விட்டு வந்திருந்த சூட்கேஸ் ஒன்றைக் கைப்பற்றுவதற்கு! அந்த சூட்கேஸ் சண்முகத்திடம் இருந்தது என்பதே இவர்களுக்கு கிடைத்த தகவல்.
விஷயம் தமிழக காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டு சண்முகத்தைப் பிடித்துக் கொடுக்குமாறு கோரப்பட்டதில், சண்முகம் ஜூலை 17ஆம் திகதி தமிழக பொலீசாரிடம் சரணடைந்திருந்தார். சென்னை கொண்டு செல்லப்பட்ட சண்முகத்தை விசாரித்தபோது, விடுதலைப்புலிகள் வேதாரண்யத்தில் புதைத்து வைத்திருந்த ஆயுதங்கள். வெடிப்பொருட்கள் மற்றும் ஒயர்லெஸ் செட்கள் இருக்குமிடம் அவருக்கு தெரியும் என்பதைக் கண்டுகொண்டது புலனாய்வுக்குழு.
இதனால், 18ஆம் தேதி அவரையும் வேதாரண்யம் அழைத்துச் சென்றிருந்தது புலனாய்வுக்குழு.
அவர் அடையாளம் காட்டிய இடத்தைத் தோண்டிப் பார்த்ததில், புலிகள் புதைத்து வைத்திருந்த பொருட்கள் அகப்பட்டன. 121 பெட்டிகளில் சக்தி வாய்ந்த வெடிபொருள்கள், 66 டிரம்கள், பிளாஸ்டிக் கேன்களில் பெட்றோல், டீசல் மற்றும் ஜப்பான் தயாரிப்பான ஒயர்லெஸ் சாதனம் ஆகியவை எடுக்கப்பட்டதாக பதிவாகியுள்ளது. அதெல்லாம் முடிய, 19ம் தேதி இரவாகிவிட்டது.
அதன்பின், சண்முகத்தை வேதாரண்யத்தில் உள்ள ஆய்வு மாளிகைக்கு (இன்ஸ்பெக்ஷன் பங்களா) அழைத்துச் சென்று, மேலும் விசாரணை நடத்தியது புலனாய்வுக்குழு. வேதாரண்யம் ஆய்வு மாளிகையில் இரு அறைகள் இருந்தன. ஓர் அறையில் புலனாய்வுக் குழுவின் மூத்த அதிகாரிகள் இருவர் இருந்தனர். மற்றொரு அறையில் ஒரு டி.எஸ்.பி., 3 போலிஸ் இன்ஸ்பெக்டர்கள் இருந்தனர். உள்ளூர் பொலீசார் இருவர் இவர்களுக்கு உதவியாக இருந்தனர்.
உயரதிகாரிகள் உட்பட, மொத்தம் 8 பேர்.
விசாரணையை முடித்துக்கொண்ட புலனாய்வு மூத்த அதிகாரி, தனது உதவிக்கு இருந்த பொலிஸ்காரர்களை அழைத்து, சண்முகத்தைக் கைவிலங்கிட்டு உள்ளூர் பொலீஸ் நிலையத்தில் வைத்திருக்குமாறு கூறினார். அதற்கு முன்னதாக, சண்முகம் இரவு உணவு சாப்பிட வேண்டியிருந்தது. அவருக்கு ஆய்வு மாளிகையிலேயே உணலு தருவித்துக் கொடுக்கப்பட்டது. அப்போது 19ம் தேதி இரவு 9 மணி.
உணவு உண்டபின் கை கழுவுவதற்காகச் சென்றார் சண்முகம். அவருடன் ஒரு போலிசும் இருந்தார். சண்முகம் திடீரெனப் பின் கதவை திறந்துகொண்டு இருளில் தப்பி ஓடினார் என்று கூறப்படுகிறது. ஓடும்போது, தனது வேட்டியையும், சட்டையையும் கழற்றி எறிந்துவிட்டு ஓடினார் என்று புலனாய்வு ரிப்போர்ட் கூறுகிறது (கடத்தல்காரர்கள் இரவில் கடற்கரையோரமாக கடத்தில் தொழில் செய்யும்போது, வெள்ளை வேட்டி. சட்டை அணிய மாட்டார்கள். இருளில் ஆட்களைக் காட்டிக் கொடுத்துவிடும் என்பதால் இந்தப் பழக்கம்)
புலனாய்வுக் குழு உயரதிகாரிகள் ஓடிச்சென்று பார்த்தபோது, வெளியே சண்முகம் கழற்றி எறிந்துவிட்டு ஓடிய வேட்டியும், சட்டையும் மாத்திரமே கிடைத்தன என்றும் சி.பி.ஐ. ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.
அன்றிரவு முழுவதும், வேதாரண்யம் பகுதி முழுவதையும் துருவித் துருவி தேடினார்கள். உள்ளூர் பொலீசாரையும், கரையோரக் கடமையில் இருந்த மத்திய பாதுகாப்பு பொலீஸ் படையினரையும் தேடுதலில் ஈடுபடுத்தினர்.
மறுநாள், ஜூலை 20ஆம் தேதி காலையில், இன்ஸ்பெக்ஷன் பங்களா அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிலிடப்பட்டுத் தொங்கிக் கொண்டிருந்தது சண்முகத்தின் உடல்! அவரது காலடியில் கிடந்தது என்ன தெரியுமா?
லுங்கி! தூக்கு போடப்பட்ட அவரது உடலில் இருந்து அவிழ்ந்து விழுந்த லுங்கி!!
வேட்டி, சட்டையைக் கழட்டி எறிந்துவிட்டு ஓடியவருக்கு, அணிவதற்கு எப்படி லுங்கி கிடைத்து அணிந்தார்? தூக்கு மாட்ட கயிறு கிடைத்தது எப்படி? இந்தக் கேள்விக்கு பதில் கிடையாது.
சென்னையிலிருந்து வேதாரண்யம் கொண்டு வரப்பட்டபோது, சி.பி.ஐ. புலனாய்வுக் குழுவுடன் ஒத்துழைத்து, விடுதலைப் புலிகளின் பொருட்கள் புதைத்து வைத்த இடத்தையும் துல்லியமாகக் காட்டிக் கொடுத்துவிட்டு, இரவு உணவையும் முடித்த பின்னர், 8 பேர் இருந்த வீட்டிலிருந்து தப்பியோடி, அந்த வீட்டுக்கு வெளியேயுள்ள மரத்திலேயே தற்கொலை செய்து கொள்வது, அவ்வளவு நம்பும்படியாக இல்லையே!
ஜூலை 21ஆம் திகதி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ், ‘பொலீஸ் காவலில் மரணமா? தற்கொலையா?’ என்று கேள்வி எழுப்பி இருந்தது. ஜூலை 22ம் திகதி ஹிந்து ஆங்கில நாளிதழ், ‘சிறப்புப் புலனாய்வுப்படையின் புலன் விசாரணையில் பின்னடைவு’ எனக் கூறியது . ஜூலை 23ம் திகதி டெக்கான் ஹெரால்ட், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, அதன் தலைவர் அப்போதைய நரசிம்மராவ் தலைமையில் கூடி, ராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணையை சிறப்புப் புலனாய்வுப்படை கையாளும் விதத்தைக் கடுமையாகச் சாடியதாக செய்தி வெளியிட்டது.
ஆனால், இறுதி விசாரணையின்போது நீதிமன்றத்தில் இந்த விவகாரம் அன்டர்-பிளே பண்ணி பெரிதாக்கவில்லை.
இது நடைபெற்ற காலப்பகுதியில், ராஜ்யசபா எம்.பி. ஒருவர், நாடாளுமன்றத்தில் இதுபற்றிப் பேசியதை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது சி.பி.ஐ. அவர் அப்படி என்ன பேசினார்?
டில்லி திஹார் சிறையிலிருந்து சார்லஸ் சோப்ராஜ் தப்பியது உட்பட, காவலிலிருந்து கைதிகள் தப்பிய பல்வேறு சம்பவங்களை அவர் சுட்டிக்காட்டினார். “நமது நாகரிகமான சட்டம் காரணமாகத்தான், கைதிகளால் தப்பிச்செல்ல முடிகிறது. இது அவ்வப்போது நடப்பதைத் தடுப்பது சுலபமல்ல” என்றார்.
“ஆற்றலும் அனுபவமும் வாய்ந்த ‘அவரே’ சொல்லிவிட்டார், இதெல்லாம் (காவலில் இருந்து தப்புவது) சகஜம்தான்” என்றது சி.பி.ஐ. அதன்பின், கோடியக்கரை சண்முகத்தின் மரணம், ராஜிவ் கொலை விசாரணையில் பெரிய விவகாரம் ஆக்கப்படவில்லை.
சரி, சி.பி.ஐ. ஆற்றலும் அனுபவமும் வாய்ந்த ‘அவரே’ சொல்லிவிட்டார் என்று சிலாகித்த அந்த நாளைய ராஜ்யசபா எம்.பி. யார் தெரியுமா?
ராம் ஜெத்மலானி! தற்போது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரையும் காப்பாற்ற வந்திருக்கும் அதே வக்கீல் ராம் ஜெத்மலானி!!
அவர், தனது வாதத்தில் இந்த விவகாரத்தையும் எடுத்துக் கொள்ளலாம் என்று நாம் கூறுவதன் காரணம், இப்போது புரிகிறதா?