Published On: Monday, September 19, 2011
அழிந்துவரும் மருதமுனை நெசவுத் தொழில்

புதியதொரு தலைமுறை இல்லாமல் அழிந்திடுமா மருதமுனையின் நெசவுத் தொழில் (ஒரு நேரடி ரிப்போர்ட்)
- முஹம்மட் பிறவ்ஸ்
அம்பாறை மாவட்டத்தின் முகவெற்றிலை என அழைக்கப்படும் கல்முனை மாநகரிலிருந்து வடக்கே 2.3 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பிரதேசமே மருதமுனை. ஒவ்வொரு இடத்துக்கும் தனியானதொரு அடையாளம் இருக்கும். அதுபோல கிழக்கு மாகாணத்தில் நெசவுத் தொழிலுக்குப் பெயர்போன இடம்தான் மருதமுனை.
கடந்த சுனாமி அனர்த்தத்தில் இலங்கையில் பாரியளவிலான அழிவுகளைச் சந்தித்ததும் இக்கிராமம்தான். இங்கு நெசவுத் தொழிலானது ஆங்கிலேயர் காலத்திலிருந்து இன்றுவரை இருந்துவருகின்ற ஒரு புராதனமிக்க கைத்தொழிலாகும். மருதமுனையில் நெய்யப்பட்ட சாரம் அல்லது உடுதுணிகள் என்றால் இலங்கை மட்டுமல்ல சர்வதேசத்தில்கூட இதற்கென தனியானதொரு கிராக்கி இருக்கின்றது. மக்கள் இங்குள்ள பொருட்களை அதிக விலைகொடுத்து வாங்க முன்வருகிறார்கள்.
நெசவுத்தொழிலின் இன்றையநிலை பற்றி அறி வதற்கு அண்மையில் மருதமுனைக்குச் சென்றேன். அங்கு நெசவுத்துறையில் பாண்டித்தியம் பெற்ற 59 வயதான ஒஸனாரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரது பரம்பரை 1932 இலிருந்து இத்தொழிலைச் செய்துவருகின்றது. ஒஸனாரிடம் அவரது தொழிலைப் பற்றிக்கேட்டபோது;
"நான் சாரம், சேர்ட் துணி, சாரி, மேசைச்சீலை, தலையாணி உறை, பெட்சீட், கால் தட்டி எண்டு பல உற்பத்திகளச் செய்றன். நாங்க இங்க நூல் வாங்குறது எண்டா, வாங்கி விக்கிறவங்க கிட்டத்தான் வாங்குறம். 2:80 என்கிற நூல் 1650 ரூபாக்கு தாறாங்க. அதுக்கு டை பண்ணி (சாயம் போட்டு) எடுக்க எல்லாமாச்சேர்ந்து 2200 ரூபா ஒரு கிலோவுக்கு செலவாகும். இங்க பொதுவா யூஸ் பண்ணுறது Homt என்கிற நூல்தான். பொறகு அந்த நூலைச் சுத்தியெடுத்து கைத்தறியில் போட்டு காலாலும் கையாலும்தான் தறியடிக்கவேணும். அதுல நமக்கு வேண்டிய மாதிரி டிசைனைப் போட்டுக்கலாம்.
என்கிட்ட 23 கைத்தறி (hand loom) இருக்கி. ஆனா, வேலக்கி ஆக்கள் இல்ல. சுனாமிக்குப் பொறகு, வேல செஞ்ச ஆக்களெல்லாம் மத்த மத்த வேலக்கி சம்பளம் காணாதெண்டு போயிட்டாங்க. அதுக்குப்பொறகு இந்த வேலக்கி இன்னொரு தலைமுறை வருது இல்ல. வறிய நாடுகளுக்கு எங்கட சாமானக் குடுத்தா கூட சம்பளம் குடுக்க ஏலா. செல்வந்த நாடு எண்டா, நல்ல சம்பளம் குடுக்கலாம். உதாரணத்துக்கு நோர்வேக்கு ஒரு "சேர்ட்' செஞ்சி குடுத்தா 8 ஆயிரம் ரூபா தருவாங்க' என்றார்.
சர்வதேசத்திலேயே இவர்களது உற்பத்திகளுக்கு அதிகளவான சந்தை வாய்ப்புகள் இருப்பதாகவும் போதியளவான மனிதவளம் இல்லாமையால் அவர்கள் கேட்கின்ற தொகையை தன்னால் உற்பத்தி செய்யமுடியால் போய்விட்டதாகவும் கூறி நொந்து கொண்டார்.
"இதுக்குள்ள புதிய இளம் பிள்ளயல் வாறங்க இல்ல. இப்ப இரிக்கிறவங்க கைத்தொழில் எண்டா, அத கௌரவக் குறச்சலாத்தான் நெனக்கிறாங்க. இதுல நல்ல எதிர்காலம் இருக்கு. ஆனா, யாரும் முன்வாறாங்க இல்ல. இந்த தலைமுறையோடயே இந்தத் தொழில் நின்டாலும் ஆச்சரியப்பட ஏலா. நானும் திருக்கோவில், விநாயகபுரம், சத்துருக் கொண்டான் எண்டு பல இடங்களுக்கும் பிள்ளயலுக்கு ரெயினிங்க குடுத்தேன். ஆனா, அங்க மூலப்பொருள் எடுக்குற வசதி இல்ல. அதுகள் இங்கதான் வரவேண்டிக் கெடக்கு. அதால அந்தத்தொழில் இங்கயோடயே நிக்குது. அவங்களுக்கும் ஆர்வம் குறஞ்சி போச்சி' என்று தனது ஆதங்கத்தை எம்மிடம் கொட்டித்தீர்த்தார்.
என்னிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே அவரது கைத்தறி இயந்திரங்களை அறிமுகப்படுத்தினார். அந்நேரத்தில் அவரிடம் வேலைசெய்கின்றவர்கள் வேலை முடித்துவிட்டு வீடு சென்றுவிட்டார்கள். அவர்களுக்கு நாட் சம்பளம் இல்லாமல், உற்பத்திகளுக்கே கூலி கொடுப்பதால் அதிகநேரம் இருப்பதில்லை. ஆரம்பகாலத்தில் பயன்படுத்திய தறிவகைகளையும் அங்கு காணக்கூடியதாக இருந்தது. வேலைசெய்கின்ற அனைத்து கைத்தறிகளையும் தானே சுயமாக உரு வாக்கியதாகக் கூறும்போது வியந்து போனேன்.
அவர் இத்தொழிலின் சந்தைப்படுத்தல் பற்றிக் கூறும்போது; "நான் 850 ரூபாக்கு கொம்பனிக்கு சாரம் குடுக்குறன். அவங்க அத 1300 ரூபாக்கு விக்கிறாங்க. சுனாமிக்கு முதல்ல இலங்க அரசாங் கத்துக்கு வருசம் ஒண்டுக்கு ரெண்டாயிரம் சாரிகள் 13 லெச்சம் ரூபாக்கு நான் குடுத்து வந்தன். இப்ப சாமா னுக்கு வில கூட. ஆனா, அவங்க அதே விலைக்கி கேக்குறதால நான் இப்ப குடுக்கிறதில்ல. என்கிட்ட 4 ஆம்புளயலும் 6 பொம்புளயலும் வேல செய்றாங்க. அவங்களுக்கு தறியடிக்குறதுக்கு 1 மீற்றருக்கு 75 ரூபா குடுக்கிறன்' என்றார்.
இவரது அனுபவம், கலைத்திறன் போன்றவற்றால் நோர்வே, இந்தியா போன்ற வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளார். அங்கு இவர் விசேடமான பல பயிற்சிகள், தொழில்நுட்பங்கள், தொழில்விருத்திகளையும் பெற்றுக்கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாது இலங் கையில் நடைபெற்ற பல கைத்தொழில் கண்காட்சிகளில் இவருக்குப் பல விருதுகளும் சான்றிதழ்களும் கிடைத்துள்ளன.
இலங்கை அரசாங்கம் நூலை இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக இறக்குமதி செய்து நியாயமான விலைக்கு தரவேண்டும் என்று பொதுவானதொரு கைத்தறியாளர் என்றவகையில் கேட்டுக்கொண்டார். மருதமுனையில் நெசவுத்தொழிலை அழியவிடாமல் பாதுகாக்க பல பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறார் ஒஸனார். ஆகவே, இதன் பெறுமதியை உணர்ந்து நெசவுத் தொழிலை மருதமுனை மட்டு மல்லாது நாடுபூராவும் ஊக்குவிக்கவேண்டியது கட்டாயமானது.
நன்றி: இருக்கிறம்