Published On: Monday, November 21, 2011
கல்௦வியற் கல்லூரி நேர்முகத்தேர்வு - 2012
(முஹம்மட் பிறவ்ஸ்)
மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியில் 2012 கல்வியாண்டுக்கான புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வுகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இதன் முதற் கட்டமாக இம்மாதம் 18,19,20,21 ஆகிய தினங்களில் புதிய மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வுகள் மட்டக்களப்பு தேசிய கல்வியல் கல்லூரியில் நடைபெற்றன.
இதன் அடுத்தகட்டமாக இம்மாதம் 26ஆம் திகதி திருகோணமலை சண்முகா வித்தியாலயத்திலும், டிசம்பர் 03ஆம் திகதி வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியிலும், டிசம்பர் 5,6 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியிலும், டிசம்பர் 13ஆம் திகதி கொழும்பு அல்-ஹுசைன் வித்தியாலயத்திலும் நேர்முகத் தேர்வுகள் நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி பாக்கியராஜா எமது துருவம் இணையத்தளத்துக்கு பிரத்தியேகமாகத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்வியற் கல்லூரியில் 2012 கல்வியாண்டுக்காக கணிதம், விஞ்ஞானம், சமூகக் கல்வி, தொழில்நுட்பம், சித்திரம் ஆகிய பாடங்களுக்கே புதிய மாணவர்களை அனுமதியளிப்பதாக கல்லூரியின் பீடாதிபதி மேலும் தெரிவித்தார்.
அத்துடன் தற்போது இலங்கை தபால் திணைக்களத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் கொழும்பு மத்திய தபால் பரிமாற்று நிலையத்தில் மாத்திரம் 16 இலட்சம் கடிதங்கள் தேங்கிக்கிடக்கின்றன. கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பிராந்திய தபால் சேவைகளும் செயலிழந்துள்ள நிலையில் காணப்படுகின்றது. இதனால் நேர்முகத்தேர்வுக்கான கடிதங்கள் உரிய தினங்களில் கிடைக்கப்பெறமாட்டாது என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, மேற்குறிப்பிட்ட தினங்களுக்குள் விண்ணப்பித்த மாணவர்களுக்கு நேர்முகத்தேர்வுக்கான கடிதங்கள் கிடைக்காவிட்டால் மட்டக்களப்பு கல்வியற் கல்லூரியின் 065-2247527, 065-2247737 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.