Published On: Wednesday, November 23, 2011
அரச ஊழியர் சம்பள உயர்வு - ஒரு பார்வை
(எஸ்.எல். மன்சூர்)
திங்கட்கிழமை நாடாளுமன்றில் நிதி அமைச்சரும், அதிமேதமிகு ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷ அவர்களால் முன்வைக்கப்பட்ட 2012ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தில் பத்துவீதம் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பலர் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்திருந்தனர். சிலர் முகம் சுளித்துக் கொண்டனர்.
இன்னும் சில ஊழியர்கள் அதிகமாக திருப்தி கொள்ளவில்லை. இருந்தாலும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்கின்றார் ஒரு அரச ஊழியர். நாட்டின் இக்கட்டான சூழ்நிலையில் அரசைப் பொறுப்பெடுத்து நாட்டின் புரையோடிப்போன பயங்கரவாதத்தை வெற்றி கொண்டு உடனடியான அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்ற இன்றைய சூழ்நிலையில் இந்தச் சம்பள உயர்வும் கிடைத்தமை மிகச்சந்தோசம் தருகின்றது என்று கூறினார் ஒரு ஆசிரிய ஆலோசகர்.
உண்மையில் நாட்டின் இன்றைய காலகட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூறுவது போன்று பத்தாயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்குவதுதான் சிறப்பானதாக அமையும் என்பதில் உண்மை இல்லாமலும் இல்லை. நாளாந்தம் மலைபோல் ஏறுகின்ற பொருட்களின் விலைகள் குடும்பத்தை சமாளிப்பதற்கே போதும் போதும் என்றாகிவிடுகிறது. ஆதலால் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதுதான் அரச ஊழியர்கள் மட்டுமன்றி பொதுவாக மக்களைப் பொறுத்தளவில் நியாயமானதாகக் காணப்படுகிறது.
எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கின்றபோது அரச ஊழியர்கள் நன்றியுடையோர்களாக இருப்பர். விலைகள் குறைவடைந்தால் சம்பள உயர்வு என்பது அவசியம் இல்லை என்றே பொதுவாக யாரும் கூறுவர். மலைபோல் அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்வடைந்து செல்வதனால் வேறு பக்கம் கவனத்தை திருப்பி இணைப்புத் தொழில்களைச் செய்யவேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு அரச ஊழியர்களை திசைதிருப்பவும் செய்கிறது. இதனைத் தவிர்க்க வேண்டுமானால் அரச ஊழியர்களின் முழுமையான பங்களிப்பை அந்த நிறுவனம் பெறவேண்டுமாக இருந்தால் அவர்களது சம்பளம் அதிகரிப்பு அல்லது பொருட்களின் விலை குறைவு இடம் பெற வேண்டும் என்பதே யதார்த்தம் நடைபெறுமா?
எனவேதான் இன்றைய அரசின் வரவுசெலவுத் திட்டம் அரச ஊழியர்களுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியும், கொஞ்சம் துக்கமும் கலந்திருந்தாலும் நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கினை ஆற்றிவருகின்ற இன்றைய அரசின் திட்டங்களுக்கு அரச ஊழியர்களது பங்களிப்பு முக்கியமானது என்பதையும் கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் இவை பற்றிய சிந்தனைகளை சிரமேற் கொள்வது நலமாய் அமையும்.