Published On: Wednesday, November 02, 2011
கல்வி யுகத்தில் வாசிப்பின் முக்கியத்துவம்
மொழியில் வாசிப்பு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. மொழியின் ஆரம்பம் சைகையாகும். பின்னர் எழுத்துருவம் பெற்ற காலகட்டத்திலிருந்து வாசிப்பும் முக்கியத்துவம் பெறலாயின. எமது நாட்டு பாடசாலையின் கலைத்திட்டத்தில் 1997ஆம் ஆண்டிற்குப்பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்விச்சீர்திருத்தங்களின் மூலம் எதிர்பார்க்கப்படும் தேசிய குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்காக சில அடிப்படையான தேர்ச்சிகளை மையப்படுத்தியவாறு பாடசாலைக் கலைத்திட்டத்தில் மொழித்திறன்களை அதிகரிப்பதற்குரிய வழிவகைகள் பல வகுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதன்படி பார்க்கின்றபோது முதலாவதாக ‘தொடர்பாடல் தேர்ச்சிகள் மூலமாக எழுத்தறிவு, எண்ணறிவு, சித்திர அறிவு, தகவல் தொழில்நுட்ப தகைமை ஆகிய நான்குவகை துணைத்தொகுதிகளாக வகுக்கப்பட்டு அதில் வருகின்ற கவனமாக செவிமடுத்தல், தெளிவாகப் பேசுதல், கருத்தறிய வாசித்தல், சரியாகவும், செம்மையாகவும் எழுதுதல், பயன்தரக்கூடியவாறு கருத்துப்பரிமாற்றம் ஆகியவற்றை இத்தொடர்பாடல் தேர்ச்சியின் ஊடாக முக்கியத்துவம் பெற்றுள்ளதையும் அவதானிக்கலாம். எனவேதான் கல்வித்துறையில் குறிப்பாக ஆரம்பக்கல்வி புலத்தில் வாசிப்பின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் முகமாக மௌனமாகவாசித்தல், உரத்து வாசித்தல் என்கிற சொற்கள் கற்றல்-கற்பித்தலில் மொழிப்பாடத்தில் முக்கியத்துவம் பெற்று விளங்குவதையும் காணலாம்.
மேலும், எழுத்துக்களைக் காணும் நிலையே வாசித்தலின் ஆரம்பமாகும். கண்ணால் காணுவதை மூளையானது அறிந்து பொருளுணரும்போது வாசித்தல் அங்கே நிகழ்கின்றது. இங்கு இரு உளவியல் செயல்களான மூளை கண்ணுக்குச் சொல்லுதல், கண் மூளைக்குச் சொல்லுதல் என்பன நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அதாவது வரிவடிவத்திலுள்ள சொற்களை ஒலிவடிவமாக மாற்றி உச்சரித்தல், உறுப்புக்களும் சொற்களை நோக்குகின்ற கண்ணும் ஒத்துழைக்கின்றபோது அங்கே வாசித்தல் நடைபெறுகின்றது.
எனவே இவைகள் நடைபெறுவதற்கு உள்ளம், கண், காது, மூக்கு, நா, குரல் ஆகிய உறுப்புக்கள் அனைத்தும் ஒத்துழைக்கின்றபோதுதான் அங்கே வாசிப்பு என்னும் திறன் ஆரம்பமாகின்றது. எழுத்துக் குறியீடுகள், ஒலிக் குறியீடுகளாக மாற்றப்படுகின்றன. என்னதான் வாசிப்பு நாவிலிருந்து வெளியாகினாலும் பொருளுணர்தலோடு இணைந்த வாசிப்பே வாசித்தலாகும். எழுத்துக்களாலான சொற்கள், சொற்களாலான வாக்கியங்கள் மொழிக்கூறுகளாகின்றன. இவ்வாறு முக்கியத்துவம் பெற்றுள்ள வாசிப்பானது ஒரு பிள்ளையில் ஆரம்ப சிறுபராயத்திலிருந்து உருவாக வேண்டும்.
இன்றைய நவீன உலகில் வாசிப்புத்திறன் அருகி வருகின்றது. இதன்காரணமாக பொது அறிவுத்திறனானது மிகவும் குறைவான மட்டத்தில் காணப்படுகின்றது என்றும் இந்நிலையானது பிள்ளையின் வாசிப்புத்திறனில் ஏற்பட்டுள்ள பின்னடைவைக் காட்டுகின்றன என்கிற குற்றச்சாட்டும் கல்வியலாளர்களிடையே உண்டு. ஏனெனில் இன்றைய நவீன யுகத்தில் தொடர்பாடலின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றமை முக்கிய காரணமாக கொள்ளப்படுகின்றது. கணனித் தொடர்புகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வானொலி போன்ற ஊடகங்களின் செயற்பாடுகள் இன்று நூல்களையும், பத்திரிகைகளையும் வாசிப்பதிலிருந்து தவிர்த்து வருவதுடன், அவை வாசிப்புக்குப் போட்டியாக வலம் வருகின்ற ஊக்கிகளாகவும் காணப்படுகின்றன.
இந்நிலையினைக் கருத்திற் கொண்டு வருடந்தோறும் வாசிப்பு மீதான பற்றினை அனைவர் மத்தியிலும் ஏற்படுத்துவதற்காக ஒக்டோபர் மாதம் முழுவதும் வாசிப்பு மாதமாக கருதப்பட்டு மாணவரிடையே வாசிப்பில் ஆசை, ஆர்வத்தை ஏற்படுத்த முனைகின்ற ஒரு போக்கும் காணப்படுகின்றது. பாடசாலைகள்தோறும் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதற்காகவேண்டியே பாடசாலைகளில் வாசிப்பினை மேம்படுத்தும் நோக்குடன் பாடசாலைகள் தோறும் நூல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இத்திட்டத்திற்கு அரசு பல இலட்சங்களை ஒதுக்கி நூல்களையும், நூலகர்களையும் வழங்கியது. ஆனால் இத்திட்டம் பெயரளவில்தான் இயங்குகின்றன என்பதை பல பாடசாலைகளின் நூலகங்களைப் பார்க்கின்றபோது எண்ணத் தோன்றுகின்றது.
சில பாடசாலைகளில் நூல்கள் புழுதி படாது பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவைகள் மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. கிழிந்து போய்விடும் என்பது ஒருபுறம், நூலகத்திற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் வேறுபாடங்கள் கற்பிப்பது, மாணவர்கள் நூல்கள் கேட்டால் இல்லை என்று கூறுவது, நூலகப்பாடவேளைகளில் வேறு வேலைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவது, அதிபர்கள் இவற்றுக்கு முக்கியத்துவம் வழங்காமை, பொருத்தமற்ற இடத்தில் நூலகங்கள் அமைந்துள்ளமை போன்ற பல்வேறு தடைகள் மாணவர்களின் வாசிப்புமீதான செல்வாக்கை உடைத்தெறிந்து விடுவதால் வாசிப்பின் ஊடாக காணப்படும்; மொழியியல் மீதான பற்றை குறைக்கும் செயலாகவும் இவைகள் காணப்படுகின்றன.
எந்தவொரு பாடத்தையும் வகுப்பறையில் கற்பதற்கு வழிவகுப்பது மொழிப்பாடமாகும். மொழியில் கருத்தூண்றி வாசித்தல் மிகவும் முக்கியமாகும். மொழிப்பாடம் விளங்காதபோது ஏனைய பாடங்களைக் கற்பதும் கஷ்டமான காரியமாகிவிடும். பாடசாலையில் தரம் ஒன்றில் இணைகின்ற ஒரு சிறுபிள்ளை வீட்டில் பேசிய மொழியையே பேசும். அங்கே பலகுறைபாடுகள் தென்படும். அதனை நிவர்த்திக்கும் வகையில் மொழியின் அழகினை ஒருங்கே மாணவர்களிடம் பேசிக் காட்டவேண்டும். தெருவில், வீட்டில், உறவினர்களோடு பேசுகின்ற மொழியானது பேச்சு மொழியாகும். வாசிக்கின்றபோது இம்மொழி திருத்தமாக காணப்படும். இதனை எழுத்துமொழி என்று இதனைக் கூறுவர். இதனையே பாலாம்பாள் - (1960) பின்வருமாறு கூறுகின்றார். இலக்கணப் பிழையில்லாமல் ஆசிரியர்களும் ஏனையோர்களும் பேசுவார்களாயின் அவர்களது பேச்சைப் பிள்ளைகளும் பின்பற்றி, இலக்கணப் பிழையின்றிப் பேசப் பழகுவார்கள். நல்ல இலக்கியங்களையும் பிழையற்ற வாசகப் புத்தகங்களையும் படிக்கச் செய்வதால் திருத்தப் பேச்சு உணர்ச்சியை இளமையில் இருந்தே உண்டாக்கலாம். அதனால் பிழைபட்ட பேச்சுக்கள் பின்னர் காதில் விழும்போது இயற்கையாகவே அருவருப்புத் தோன்றும் எனக் கூறுகின்றார்.
எனவேதான் பேச்சு மொழியிலிருந்து பேச்சு மொழிக்கு மாணவர்களை அழைத்துச் செல்கின்ற ஒரு செயற்பாடு ஆசிரியர்களிடம் காணப்படவேண்டும். இன்று பாடசாலைகளில் மொழிப்பாடத்தில் பி;ன்னடைவுக்கு உள்ளாகின்ற மாணவர்கள் பலர் உள்ளனர். இவர்களை ஏனைய பாட ஆசிரியர்களும் வாசிக்கத் தெரியாதவர்களின் பட்டியலில் இட்டுச் செல்வதால் அம்மாணவன் அவமானப்பட்டு இறுதியில் கல்விக்கு வேட்டு வைக்கின்ற நிலைக்குள்ளாக்கப்படுகின்றான்.
ஆதலால்தான் ஆசிரியர்கள் மொழிப் பாடத்தில் ஆரம்ப வகுப்புக்களிலிருந்தே மாணவனுக்;கு ஆசிரியர் குறிப்பாக மொழிப்பாடத்தினை நன்கு விளங்கக்கூடிவாறு கற்பதில் வழிகாட்டப்படல் வேண்டும். ஆசிரியர் பாடத்திற்கான விடயக்கூறுகளை தெளிவாக புரிந்து கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளின் போது பொருத்தமானவாறு ஒன்றிணைந்து செயற்படுத்தல் அவசியமாகும். மொழிரீதியாக ஆரம்பப்பிரிவு வகுப்புக்களில் எதிர்பார்க்கப்படுகின்ற தேர்ச்சிகளில் பின்வரும் விடயங்கள் வாசிப்பில் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக கருதப்படுகிறது.
அதாவது கவிதை, பாடல், கதைகேட்டும் வாசித்தறிதல், பிழையின்றி உச்சரித்து உரத்துவாசித்தல், செவிமடுத்தல். பேச்சு, வாசிப்பு, எழுத்து சம்பந்தமான நற்பழக்கங்கள் பற்றியமை, எழுத்துப் பொறிமுறைகளை அனுசரித்து வாசித்தல், வாசித்தபின் கிரகித்து வெளிப்படுத்துதல், சொற்களஞ்சிய விருத்திக்காக வாசித்தல் இரசனையுடன் வாசித்தல் இவ்வாறாக தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையான வகுப்பு மாணவர்களின் நலன் கருதியதாக இவ்வகையான தேர்ச்சிகள் வாசிப்பினை முன்னிலைப்படுத்துவற்காக ஆசிரியர்களால் முன்கொண்டு செல்ல வேண்டுமென கல்விப்புலத்தினால் எதிர்பார்க்கப்படுகிறது.
நமது நாட்டில் தமிழ் மொழியானது நீண்டகாலமாகவே பாலர் முதல் பல்கலைக்கழகம் வரை போதிக்கப்பட்டு வருவதுடன் சகல பாடங்களும் தாய்மொழியிலேயேதான் கற்பிக்கப்பட்டும் வருகின்றன. இருப்பினும் மொழிப் பாடத்தில் ஒரு தெகை மாணவர்கள் பரீட்சைகளின்போது வெளிப்படுத்துகின்ற வெளிப்பாடானது, பூச்சியமட்டத்தில் காணப்படுவதானது கவலை அளிப்பனவாகவே உள்ளது. காரணங்கள் பலவாறு கூறப்பட்டாலும் ஆரம்ப வகுப்புகளின் போது கற்பித்தல் முறையிலுள்ள குறைபாடுகளும், நவீனத்துவமிக்கதான தொழில்நுட்பரீதியிலான கற்றல் - கற்பித்தலை விடுத்து, காலத்திற்குதவாத பாரம்பரிய கற்றலை மேற்கொள்வதன் பயனாக வாசிப்பு, எழுத்து போன்ற திறன்களில் இருள் சூழ்ந்த தன்மையே இன்றும் தொடர்வதாக மொழி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆகவே வாசிப்பில் கூடுதலான பலாபலன்களை பெறவேண்டுமானால் பின்வரும் நடவடிக்ககைளிலும் ஆர்வம் செலுத்துதல் அவசியமாகும். கீழ்பிரிவு மாணவர்களுக்கு கதைகூறல், பாடுதல், நடித்தல், பாவனைசெய்தல், செய்துகாட்டுதல், வாசித்தல், பேசுதல், உரையாடுதல், பரிமாறுதல், எழுதுதல், வரைதல், விளக்கங்கள் கூறுதல் போன்றவற்றை உள்ளடக்கியதான செயற்பாடுகளிலும், விளையாட்டுக்களிலும் மாணவர்களை ஈடுபடுத்துவதன் மூலம் மொழித்திறனை மேம்படுத்துவதற்கு ஆசிரியர் உதவலாம். இங்கு கற்றலின் ஊடாக மொழி பயன்படுகிறது. எனவே வாசிப்பு என்பது எழுத்தில் உள்ளவற்றை கண்களால் பார்த்து, வாயால் உச்சரித்து பொருளை உணர்ந்துவது என்பதாகும். வாசித்தல் மூலமாக சொற்களை காணுதல், உச்சரித்தல், பொருள் உணர்தல் ஆகிய மூன்று கூறுகள் உள்ளடங்குவதுடன், வாசித்தல் மாணவர்களிடையே பல்வேறு திறன்களையும் விருத்தி செய்யவும் உதவுகிறது எனலாம்.
பாடசாலைகளில் நடைபெறும் பல்வேறு புறக்கீர்த்தி நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதன் மூலம் வாசிப்புத் திறனை அதிகரிக்கச் செய்யலாம். அதாவது காலை ஆராதனையின்போது நற்சிந்தனைகள் வாசித்தல், செய்திகள் வாசித்தல், மாணவர் மன்றங்களில் மாணவர்களை பேசவும், வாசிக்கவும் ஊக்குவித்தல். இவ்வாறு அனைத்து மாணவர்களுக்கும் சந்தர்ப்பங்கள் வழங்குகின்றபோது இந்த மாணவர்கள் எதிர்காலத்தில் நல்ல பேச்சாளர்களாகவும், அறிவிப்பாளர்களாகவும், சமுதாயத்தை வழிநடாத்துகின்ற மொழி வல்லமையுடையவர்களாகவும் அமைவதற்கான அடித்தளமாகவே இவ்வாசிப்புத்துறை ஒரு உந்து சக்தியாக அமைந்துவிடுகிறது என்றால் அது மிகையாகாது. அத்துடன் வருடந்தோறும் நடைபெறுகின்ற மொழித்தின விழாக்களை பாடசாலைகள் மட்டத்தில் அனைத்து மாணவர்களும் பங்குபற்றக்கூடியவாறாக நிகழ்வுகளை ஒழுங்கு செய்து மொழியின் மகத்துவத்தை அடைவதற்கு இவைகள் பாலமாக அமைகின்றன. இதற்கு வீடும், வீட்டுச்சூழலும் உதவி நல்குதல் வேண்டும்.
வாசிப்பில் நூலகங்களின் பங்களிப்பு
கால்ஃபோர் எனும் அறிஞர் நல்ல நண்பர்களைத் தேர்தெடுத்ததற்குப் பிறகு அடுத்த நாம் தேர்ந்தெடுக்க வேண்டியது நல்ல புத்தகங்களைத்தான் எனக் கூறுகின்றார். இதன் மூலம் நான் உணர்ந்து கொள்வது நூல்களின் மகத்துவத்தையாகும். சிறந்த நூல்கள் சிறப்பான கல்வியை வழங்குவதற்கு உதவிடுகின்றன. இது எதன் மூலம் சாத்தியப்படுகிறது என்றால் வாசிப்பு மூலமேயாகும். நூலகங்கள் என்றபேரில் பட்டிதொட்டியெங்கும் பிரதேச சபைகளின் செல்வாக்குடன் அமைக்கப்படுகின்றன.
ஆனால் வாசிப்பதற்கு ஓரிருவரைத் தவிர வாசிப்பதற்கு மக்கள் வருவதும் குறைவாகவே காணப்படுகின்ற நிலையில், இந்த வாசிப்பு மாதத்திலாவது வாசிப்பின் பயன்பாட்டினை இந்த நூலகங்கள் அப்பிரதேசம் முழுவதும் அங்குவாழ் மக்களை ஊக்குவித்தல் வேண்டும். வீட்டுக்கொரு பத்திரிகை வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும். ஆசிரியர்கள் தேடல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. எத்தனைவீதமான ஆசிரியர்கள், அதிபர்கள் பத்திரிகை வாங்காது விட்டாலும் பரவாயில்லை தினசரிப் பத்திரிகை ஒன்றையாவது வாசிக்கின்றார்களா? என்றால் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களாகவே காணப்படுவர்.
பொதுவாக வாசிப்பவர்கள் வாசிக்கும் வாசகர்கள் மிகமிகக் குறைவாகவே காணப்படுகின்றமை கவலைதரும் விடயமாகும். எனவேதான் தினசரிப் பத்திரிகைகளை வாசிப்பதன் ஊடாக நாட்டு நடப்புக்களையும், உலக விவகாரங்களையும் அறிந்து கொள்ளவும், ஏனைய பலதரப்பட்ட விடயங்களை அறிந்து கொள்ளவும்; வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தல் அவசியமாகும்.
யாழ்ப்பான நூலகம் எரிப்பு
அன்று யாழ்ப்பான நூலகம் எரிக்கப்பட்டபோது தமிழ் மக்களின் உள்ளங்கள் மட்டுமன்றி மனிதாபிமானமுள்ள மனிதர்களின் உள்ளங்களும் வெந்து நொந்துபோனது. காரணம் அந்த நூலகத்தின் பயன்பாட்டினை உலகமே அறிந்து வைத்திருந்தது. அந்தளவுக்கு நூலகங்களைப் பயன்படுத்தி அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கு நூலகங்கள் பயன்படுத்தப்பட்ட காலம் மீண்டும் நமது பிரதேசங்கள் முழுவதும் உருவாக்கப்படுதல் அவசியமாகும். இன்றைய நவீன நூலகமானது மின்னியல் நிறைந்தாதகக் காணப்படுகிறது. ஏனெனில் முழு உலகமும் உள்ளங்கைளில் கொண்டுவரப்பட்டுள்ளது. இது எம்மத்தியிலும் உருவாக வேண்டும். நூலகங்கள் காலத்திற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டு நவீன ஆய்வுகூடமாக மிளிர வேண்டும். அப்போதுதான் வாசிப்பு மற்றும் அறிவுத் திறன்கள் போன்றன விருத்தி செய்யப்படுவதற்கும் இதுபோன்ற நூலகங்களின் பங்களிப்புக்கள் முக்கியத்துவம் மிக்கதாகின்றன.
நசில நூலகங்கள் அமைந்துள்ள இடங்களைப் பார்த்தால் வாசிப்பதற்கே அருவருப்பாக இருக்கும். நூலகங்களின் சுற்றாடல் அமைதி நிறைந்த இடமாக காணப்படுதல் முக்கியமாகும். ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது ஒரு நூலகம் திறக்கப்படுகின்றபோது என்கிற தத்துவங்கள் நூலகத்தின் முக்கியத்துவத்தை பறைசாற்றி நிற்கின்றன. நூலகங்களில் பலதரப்பட்ட நூல்கள் காணப்படும். ஆரம்ப வகுப்புப் பிள்ளை தொடக்கம் உயர்கல்வி கற்கும் மாணவர்கள் வரை அங்கு நிறையவே நூல்கள் காணப்படும். இதனைப் பயன்படுத்துவதற்கு சிறுபராயத்திலிருந்து நூலகங்களுடனான உறவை பேணிபாதுகாத்துவருதல் சிறந்தது. பல்கலைக்கழங்கள், கல்விக்கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள், தொழில் நுட்பக் கல்லூரிகள் மட்டுமன்றி தொழில் செய்கின்ற எந்தவொரு இடத்திலும் நூலகங்கள் காணப்படுகின்றன. இவை அந்தந்த மக்களின் அறிவுத்தாகத்தை கற்றுக் கொள்வதற்கான ஒரு பொழுது போக்காகவும் நூலகங்கள் துணைகின்றன.
ஆகவே, வாசிப்பு மாதத்திலாவது வாசிப்பின் முக்கியத்துவம் உணரப்பட்டு போட்டி நிகழ்வுகள் மற்றும் கலை கலாச்சார நிகழ்வுகளை நூலகங்கள் தோறும் தோற்;;றுவித்து அனைவரும் வாசிப்பதற்கு தூண்டும் விதத்தில் உதவிடுவதுடன், நூல்கள் வாசிப்பதன் மூலம் அறிவினை பெறுவது மாத்திரமன்றி நூல்களை நேசிக்கும் ஒரு சிந்தனையாளனாக சிறுபராயத்திலிருந்து ஊக்குவிக்கும் கருவியாகவும்; தூக்கமின்றி தவிப்பவர்கள் நூல்களை வாசிக்கின்றபோது தூங்கிவிடுகின்ற ஒரு தூக்கமாத்திரையாகவும், மன ஆறுதலை தேடுகின்றவர்களுக்கும் வாசிக்கும் நூல்கள் பயன்படுகின்றன.
சாமஸ்ரீ தேமாண்ய எஸ். எல். மன்சூர் (கல்விமானி)
அட்டாளைச்சேனை துருவம் செய்தியாளர்











