Published On: Friday, February 03, 2012
சுதந்திரத்திற்காக முன்னின்ற தலைவர்களை மறவோம்

எஸ்.எல்.மன்சூர் (கல்விமானி)
சுதந்திர இலங்கை இன்று 64ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றது. இன்றைய நாளை நினைவுகூறும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரத்தின் முழுச்சுவாசத்தையும் வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் நிலையில் தேசிய வைபவம் பழம்பெரும் நகரான அநுராதபுரத்தில் நாட்டின் தலைவர் அதிமேதகு ஜனாதிபதி தலைமையில் மிகவும் கோலாகலமாக இடம்பெறுகின்றது. இந்தச் சுதந்திரத்தைப் பெறுவதற்காக அன்று பல்லாயிரக்கணக்கான உயிர்களும், உடமைகளும் தியாகம் செய்யப்பட்டுள்ளதையும் இந்நாளில் நினைகூறவேண்டும்.
இரத்தம் சிந்தாப்புரட்சி மூலம் அகிம்சா மூர்த்தி அண்ணல் காந்தியவர்கள் இந்தியாவின் விடுதலைநோக்கிய பயணத்தில் மக்களை ஒன்றுதிரட்டிய வரலாறுகளின் பின்னணியில் இந்தியாவுக்கான சுதந்திரம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இலங்கைக்கும் சுதந்திரத்தை வழங்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குள் பிரித்தானிய பேரரசு தள்ளப்பட்டிருந்தாலும் இதற்காக பாடுபட்ட மூவின மக்களையும் அக்காலத் தலைவர்களையும் இலங்கை மாதாவின் பிள்ளைகளான நாம் இக்கால கட்டத்தில் நினைவுகூறுவதும் கட்டாயமாகும்.
இலங்கைக்கு சுதந்திரமான சுவாசக் காற்று வெறுமனே கிடைத்ததொன்றல்ல. நாட்டின் பற்றுருதிமிக்க பல்லாயிரக்கணக்கான வீரர்களினது தியாகத்தின் பின்னணியில் விளைந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. நாட்டின் சுதேசிகளின் ஆட்சிகளைத் தொடர்ந்து இலங்கையின் அமைவிடத்தின் முக்கியத்துவம் ஏகாதிபத்தியத்திற்கு வித்திட்டது எனலாம்.
1505ஆம் ஆண்டிலிருந்து வெளிநாட்டினரின் ஆதிக்கத்தின்கீழ் இருந்துவந்த எமது சின்னஞ்சிறு நாட்டை அவர்கள் தத்தமது தேவைகருதி பயன்படுத்தி வந்திருந்தனர். நாட்டின் அபிவிருத்தியில் கவனம் கொள்ளாது அவர்களது நலனை முன்னிலைப்படுத்தியே ஒவ்வொரு திட்டத்தையும் ஆரம்பித்திருந்தனர். அதனால் ஒவ்வொரு சந்தர்ப்;பத்திலும் உள்நாட்டு மக்கள் கிளர்ந்தெழுந்தனர். அவர்களால் வெற்றிபெற முடியவில்லை.
தோற்றுப்போன அடிமை சாசனத்தின் கீழ் எம்மக்கள் சுமார் 443 ஆண்டுகள் வெளிநாட்டினரின் கட்டுப்பாட்டினுள் இருந்தபோது சுதந்திரத்தை அடைவதில், தாய் நாட்டுக்காக போராடிய வகையில் இந்நாட்டு மக்கள் எல்லோரும் இன, மத பேதமற்ற ஒரேதாய் பிள்ளைகள்போன்று ஒற்றுமையுடன் தமது எதிர்ப்பைக் காட்டியமையினால் 1948.02.04ஆம் திகதி எம்மை நாம் ஆளும் நிலைக்கு வந்தது. வளம் கொழித்த நாட்டை சீரழித்து வெறுமையுடன் ஒப்புவித்திருந்தது மட்டுமன்றி, அந்நியர்கள் பிரித்தாளும் தந்திரத்தின் வெளிப்பாடாக சமயரீதியான குழப்பங்களுக்கு தூபமிட்டு இனங்களுக்கிடையிலான இடைவெளியை அதிகரிப்பதில் வெற்றியும் கண்டனர்.
ஏகாதிபத்தியவாதிகளோ ஒற்றுமைப்பட்டிருந்த மக்களிடையே குழப்பங்களை விளைவித்தனர். உதாரணமாக 1915ஆம் ஆண்டில் சிங்கள – முஸ்லிம் கலவரத்தைக் குறிப்பிடலாம். அன்றைய தலைவர்கள் மிகவும் நிதானமாக நடந்து கொண்டதால் இக்கலவரம் பின்னர் அடங்கிப்போனது. இந்நாட்டு மக்கள் சமயரீதியான கருத்துக்களையும், சமயத்திற்குள் உட்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இருப்பினும் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. அநகாரிக தர்மபால, ஆறுமுக நாவலர், அறிஞர் சித்தி லெவ்வை, வாபிச்சி மரைக்கார் போன்றோர் தங்களது சமரீதியான நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்தி, தத்தமது மார்க்கத்தை வளர்தெடுப்பதில் கங்கஙனம் கட்டிக்கொண்டு சமூகத்தின் ஏகபோகத் தலைவர்களாக இருந்து கொண்டு ஆங்கிலேயருக்கு அடிபணியாது நடந்து கொண்டனர்.
மத்தியதர வர்க்கத்தினரின் ஏகபோக உரிமையாக இருந்துவந்த அக்கால ஆங்கிலக்கல்வி முறையிலமைந்த நடவடிக்கைகள் இனரீதியான பிளவுகளுக்கும், பிரிவுகளுக்கும் வித்திட வழிவகுத்திருந்தமையினால், சமயப்பற்றுடன் தாம் கற்ற கல்வி மூலமாக இவர்களே பின்நாளில் தலைவர்களாக உருவாக்கம் பெற்றனர். ஒன்றுபட்ட இலங்கையினைப் பெறுவதில் பெரும்பான்மையினருடனும், அவர்களது தலமைகளுடன் சிறப்பான வழிகாட்டலுடனும் சிறுபாண்மைத் தலைமைகள் நல்லுறவு பூண்டிருந்ததை வரலாறுகள் எடுத்தியம்புகின்றன.
அதன் அடிப்படையில் சமய ரீதியான கல்விக்கு முக்கியத்துவம் வழங்கிய நிலையில் அன்றைய தலைவர்கள் சமயரீதியான சித்தாந்தங்களை தம்மினத்தாரிடையே ஊட்ட முற்பட்டு அதில் வெற்றியும் கண்டனர். ஆங்கிலக்கல்வியின் மோகம் காரணமாக நாட்டுப்பற்றாளர்கள் குறைந்து கொண்டுவருகின்றனரோ என்கிற அச்சத்தின் மத்தியில் நாட்டுப்பற்றாளர்களை உருவாக்கும் நோக்குடன் கல்விரீதியான மதசார்பு கொள்கையை கடைப்பிடிக்கத் தொடங்கினர்.
அந்தவகையில் சமூதாய நலனில் அக்கரைகொண்ட தலைவர்களாக ஹென்ரி ஸ்டீல் ஒல்கொட், அநாகரிக தர்மபால, குணாநந்த தேரர், ஸ்ரீ ஆறுமுக நாவலர், சேர் பொன்னம்பலம் இராமநாதன், அறிஞர் சித்திலெவ்பை, கொடைவள்ளல் வாப்பிச்சி மரைக்கார், அப்துர் றகுமான், ஓராபிபாஷா, அப்துல் அஸீஸ், சேர் ராசிக் பரீத், டாக்டர்கலீல், எம்.எஸ் காரியப்பர், லத்தீப் சின்னலெவ்பை போன்றோர்கள் கல்வி ரீதியான மறுமலர்ச்சிக்குரிய வழிவகைகளை ஏற்படுத்தி அதன்பக்கம் தான் சார்ந்த சமுதாயத்திற்கு உதவி நின்றனர்.
மட்டுமன்றி தேசிய விடுதலை நோக்கிய பயணத்தில் பல்வேறு இயக்கங்கள் ஊடாக தலைவர்கள் பலர் தங்களது பங்களிப்பினை நல்கியிருந்தனர். மத்தியதர வர்க்கத்தினரிடம் காணப்பட்ட செல்வச் செழிப்பு மற்றும் கல்வியறிவு போன்றவற்றை பயன்படுத்தி அரசியல் பலத்தைக் கைக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்தத் தொடங்கியதன் விளைவு இயங்கங்கள் வளர்ச்சி பெறலாயின. அந்தவகையில் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டதன் காரணமாக 1893ஆம் ஆண்டில் அச்சகத் தொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது போராட்ட வடிவத்திற்கு இவர்களின் பக்கத்துணையாக மத்தியதர வர்த்தினரின் ஆதரவு காணப்பட்டது. இதன் பின்னணியில் இடதுசாரி தலைவர்கள் பாரியளவிலான பங்களிப்பினையும் நல்கியிருந்தனர்.
தேசிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதன் பிற்பாடு சமயரீதியான விழிப்புணர்வுகள் மேம்படலாயின. பௌத்த, இந்து, இஸ்லாமிய சமயரீதியான மறுமலர்;ச்சிக்கு மத்தியதர வர்க்கத்தினரின் கல்வியும் செல்வமும் பக்கபலமாய் அமைந்திருந்தன. இக்கால கட்டங்களில் பத்திரிகைகள் ஊடாக நாட்டின் விடுதலைக்கு வித்திடவும் காரணியாய் அமைந்திருந்தன. அந்தவகையில் 1864இல் லக்மினி கிரண, பஹண, அருனோதய, 1866இல் ஞானார்த்த பிரதீபய, 1880இல் சரசவி சந்தேஷய, 1902இல் சிங்கள ஜாதிய, 1888இல் இந்து சாதனம், 1909இல் தினமின, 1930இல் வீரகேசரி, 1931இல் தினகரன், அறிஞர் சித்திலெப்பையின் முஸ்லிம் நேசன், ஞானதீபம் போன்ற பத்திரிகைகள் வெளியாகி தேசிய விடுதலைக்கு வழிவிடக் கோரிநின்றதையும் இதன்பின்னணியில் இயங்கிய மத்தியதர வர்க்கத்தினரையும் மறந்துவிடலாகாது எனலாம்.
தேசிய மறுமலர்ச்சி இயக்கத்தினரால் கலாசார மறுமலர்;ச்சிக்கும் அப்பால் அரசியல் சீர்திருத்தங்களுக்கான போராட்டங்களும் கைக்கொள்ளத் தொடங்கின. தேசிய மது ஒழிப்பு இயக்கத்தின் ஊடாக தேசிய தலைவர்களான டி. எஸ் சேனநாயக்க, எப்ஆர். சேனநாயக்க, அநாகரிக தர்மபால, எட்மன் ஹேவாவிதாரண, சேர் டிபி. ஜயதிலக, டபிள்யு ஏ.சில்வா, பியதாஸ சிரசேன, ஆத்தர்.வி. தியெஸ் போன்றோர்கள் மதுபாவனைக்கு எதிரான பிரசங்கிகளாக தமது போராட்ட வடிவத்தை முன்கொண்டு சென்றனர். பிரித்தானிய ஆட்சியாளர்கள் கதிகலங்கும் அளவுக்கு இவ்வியக்கத் தலைவர்கள் போராட்டத்தின் ஊடாக தேசியத்தலைவர்களாக மாற்றம் பெற்றுக் கொள்ளவும், பின்னர் தேச விடுதலைக்கும் வெளிப்படையான ஆதரவையும் நல்கினர்.
தெளிவில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி சிங்கள முஸ்லீம் கலவரத்தை சாதகமாக ஆங்கிலேயர் பார்க்கத் தலைப்பட்டனர். அந்தவேளையில் 1919ஆம் ஆண்டில் இலங்கைத் தேசிய சங்கத்தை ஆரம்பித்திருந்த திருவாளர் பொன்னம்பலம் அருணாச்சலம் வீரப் பெருந்தகைப் பட்டத்தையும் பெற்று தேசிய விடுதலைக்கு வித்திட்ட மாமனிதராவார். இவரது நாட்டுப்பற்றின் விளைவு, தேச விடுதலையின் ஒருவடிவமாக பின்னர் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத் தேசிய காங்கிரஸின் முதலவாது தலைவருமாகத் திகழ்கின்றார். இங்கு அனைவரும் ஒன்றினைந்து சுதந்திரத்திற்கான போராட்டங்களில் சேர் வைத்தியலிங்கம் துரைசாமி, முத்துக் குமாரசாமி போன்றோர்கள் சுதந்திர வேட்கையில் ஈடுபடலாயினர்.
பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் அரசியல் பின்னணியில் பல முஸ்லீம் தலைவர்கள் சுதந்திரத்திற்கான போராட்டங்களிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். “ஆங்கிலக் கல்வியானது சமயத்திற்கு முரணானது” என்கிற வாதம் அக்கால முஸ்லிம்கள் மத்தியில் வலுப்பெற்றிருந்தபோது கல்வியின் மூலமாக சமுதாயம் உயர்வடைவதன் அவசியத்தை பல முஸ்லிம் தலைவர்களுடன் இணைந்து சட்டசபையிலும் வெளியிலும் கலாநிதி ரீபி. ஜாயா அவர்கள் செயல்திறனான பங்களிப்பை நல்கினார்.
1914ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட “சிலோன் ரிவீவ்” என்கிற சஞ்சிகை வாயிலாக எழுதிய கடிதம் முஸ்லீம்களின் கல்விக்கு அவர்கொடுத்த ஒத்தடமாகவே இன்றும் பார்க்கப்படுகிறது. கொழும்பு சாஹிறாவின் அதிபராக இருந்து செய்தவைகள் முஸ்லீம் சமூகம் மட்டுமன்றி ஏனைய சமூகத்தினரும் மறக்காதுள்ளமை பெருமை தரும் விடயமாகும். இதன் மூலம் நாட்டுப்பற்றாளர்களும், தலைசிறந்த தலைவர்களும், கல்விமான்களும் உருவாகக் காரணமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு அரசியல் பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டுக்காகவும் உழைத்து படிப்படியாக நாட்டின் சுதந்திரத்திற்கு இத்தலைவர்கள் வழிகோலி நின்றனர். சுதந்திரப் போராட்டத்தின் விளைவு அரசியல் சீர்திருத்தங்கள் பலவும் உருவாக்கப்பட ஏதுவாக அமைந்திருந்தன. 1921ஆம் ஆண்டின் “மனிங் யாப்பு சீர்திருத்தத்தைத் தொடர்ந்து 1931ஆம் ஆண்டில் டொனமூர் சீர்திருத்தத்தின் விளைவாக சர்வஜன வாக்களிப்பு உரிமை வழங்கப்படலாயிற்று. இவ்வாக்குரிமையின் பயன் இலங்கையின் சுதந்திரத்திற்;கான வழி மிக இலகுவாகத் திறக்கப்பட்டது எனலாம்.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அரச நிருவாகச் சிக்கல்கள்கள், அதிகாரத் தன்மை, அமைச்சு நியமனம், வாக்குரிமை போன்ற இன்னோரன்ன விடயங்கள் காரணமாக தேசியத் தலைவர்கள் ஒன்றினைந்து போரட்டங்களை நடாத்தினர். இதன் விளைவு சோல்பரி பிரபு அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட “சோல்பரி யாப்பு – 1947” இல் உருவாக்கப்பட்டு நாட்டின் சுதந்திரத்திற்கான கதவு திறக்கப்படும் நேரம் அண்மித்திருந்தன. 1947ஆகஸ்டில் நடைபெற்ற தேர்தலின் பிரகாரம் முதலவாது பிரதமராக கௌரவ டி.எஸ். சேனநாயக்க அவர்களும், ஆளுநராக சேர் ஒலிவர் குணதிலகவும் இலங்கையர்களாக அன்று நியமனம் பெற்றனர்.
இவ்வாறாக பல்வேறு தலைவர்கள் ஒன்றிணைந்து பெற்ற சுதந்திரம் கிடைத்ததன் பிற்பாடு பிரித்தாளும் தன்மைகளும், தந்திரங்களும் எப்படியோ எம்மில் வந்துவிட்டது. ஒற்றுமை ஓடிமறைந்துவிட்டது. சமாதானம் எங்கோ பறந்துவிட்டது. ஒரு இனம் இன்னோர் இனத்தை சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதை நினைக்கின்றபோது சுதந்திரம் ஏன் கிடைத்தது என்கிற நினைவுகளும் தோன்றுகின்றன. இவைகள் அனைத்தும் சுதந்திரத்திற்கு முன்னர் இருந்திருக்கவில்லை. நாடும், நாட்டுப்பற்றுமிக்கவர்களாகவும் இருந்த இலங்கை மாதாவின் பிள்ளைகளை பிரித்தாட வைத்தவர்கள் யார்? என்கிற கேள்விகள் எம்மில் எழாமலில்லை. இன்றைய இலங்கையின் சுபீட்சத்திற்கு பல தலைவர்கள் பாடுபட்டு உழைத்திருக்கின்றனர். அவர்களின் வழியில் நாடும் நாமும் உழைத்திடுதல் அவசியமாகும்.
கடந்காலங்களில் இனங்களுக்கிடையிலான பிணக்குள் உருவாகுவதற்கு பலர் காரணமாக அமைந்திருந்தனர். குறிப்பாக ஆட்சியாளர்கள் உண்மையான மனிதாபின அடிப்படையில் தனக்குள்ள சுதந்திரம் மற்றவருக்கும் வழங்கப்படவேண்டும் என்பதை மறந்து போனதன் விளைவு தம்மை தாமே ஆளவேண்டும் என்கிற வேட்கை தலைக்கேறி இறுதியில் தனித்தாளும் நிலைக்கு தள்ளபடுவதற்கு பின்நாளில் வந்த ஆட்சியாளர்களில் சிலர் காரணமாக அமைந்திருந்தனர் என்பதுதான் உண்மையாகும். சுதந்திரவேட்டையில் ஆர்வம் கொண்டெழுந்த ஒரு மக்கள் கூட்டம் அந்த மக்கள் சார்பான போராட்டங்களை முன்னெடுத்தனர். இறுதியில் போராட்டங்களும், மீண்டும் சுதந்திரத்தின் அவசியம் தேவையான ஒன்றாக மாறிக் கொண்டதூன் புதுமையாகும்.
அன்று அனைவரும் பாடுபட்டு கிடைக்கப்பெற்ற சுதந்திரத்தை சரியான முறையில் கொண்டாடுவதற்குக்கூட இனவெறி தலைக்கேறிய சம்பவங்கள் பல்வேறு காலகட்டங்களில் தலைதூக்கின. இவ்வாறு ஆண்டான் அடிமைச் சமுதாயம் ஒழிக்கப்பட்டும் மீண்டும் தலை தூக்கியதன் விளைவு நாட்டுக்குள் போராட்டம் முப்பதுக்கும் மேற்பட்ட வருடங்கள் ஆயுதத்துடன் கலந்து இறுதியில் முள்ளி வாய்க்காலில் சங்கமித்திருந்த. தற்போது ஓரளவு அமைதியான நாடாக மிளிர்கின்றது. இருப்பினும் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தின் தாகம் அனைவரையும் சென்றடையவில்லை என்பதுடன், இதன் மர்ம முடிச்சுக்களுக்கு தீர்வாக முன்வைக்கப்படும் திட்டங்களும், கொள்கைகளும் மீண்டும் சுதந்திரத்தின் தாகத்தை தீர்த்துக் கொண்டால் அதுவே உண்மையான சுதந்திரமாகும்.
அதேவேளை இந்த அமைதியும், சாந்தமும், ஒற்றுமையும், இனங்களுக்கிடையிலான சுதந்திரப்பிணைப்பும் எம் மத்தியில் நீண்டு நிலைக்கவேண்டும். அதற்கு உரித்துடையோர்கள் முன்னிலை கொடுக்க வேண்டும். அப்போதுதான் சந்தேகம் என்கிற நோய் இல்லாமல் விலகும். மனித்துவம், மனித தர்மம் தலைத்தோங்கும். சுதந்திர இலங்கையின் சுதந்திர புருஷர்களாக நாம் வாழ்ந்து அடுத்துவரும் சந்ததிகளிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும். புண்ணியம் பெற்ற இப்பூமி எம்மை ஒன்றாக வாழவைக்கும் என்கிற மனோபாவம் ஆட்சியாளர்களிடமும், மக்களிடமும் காணப்படவேண்டும்.
அன்றைய தலைவர்கள் கட்டிக்காத்த ஒற்றுமை, விழுமியங்கள் தொடர்ந்துவந்த அரசியல் பரிமாற்றங்கள் காரணமாக சுதந்திர இலங்கையில் இனக்குரோதங்கள், சமயரீதியான பார்வைகள், சந்தேகங்கள் போன்றன குழிதோன்றிப் புதைப்பதற்கு வழிவகுத்த அரசியல் வங்குரோத்து நிலையை தொடரா வண்ணம் ஒற்றுமைமிக்க சமூதாயத்தைக் கட்டியெழுப்ப இன்றைய அரசில்வாதிகள் மட்டுமன்றி சமூகத் தலைவர்களும் தங்களுக்கிடையேயுள்ள பேதங்களை மறந்து பெற்ற சுதந்திரத்தை கட்டிக் காக்கவேண்டிய அவசியத்தை உணர்ந்து கொள்ள வேண்டிய காலம் கணிந்துள்ளதை ஏற்று நடப்பதற்கு அன்றைய தலைவர்கள் காட்டிய வழிகளை பின்பற்றுதல் அவசியமாகும்.
அண்மைக்கால அரசியல் போக்குகள் சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் சமூக ஒற்றுமைகளை குலைக்கின்ற செயற்பாடுகளைத் தவிர்த்து ஒற்றுமைப்பட்ட இலங்கையில் ஒவ்வொரு சமூகத்தின் பொறுப்புக்களையும் கடமைகளையும் உணர்ந்து செயற்பட அனைவரும் உறுதிபூணும் நிலை வருகின்ற அந்நாளே உண்மையான சுதந்திரநாளாகக் கொள்ளலாமா என்ன?
பிரபல அறிஞர் ஹ_மாயூன் கபீர் சுதந்திரம் பற்றி இவ்வாறு கூறுகின்றார். அதாவது “சுதந்திரமான சூழ்நிலையில் அல்லாது மனிதன் உண்மையான, முழுமையான வளர்ச்சியை அடையமுடியாது. நாட்டிலுள்ள அனைத்து வகுப்பினருக்குமே சுதந்திரமும் சம நியாயமும் கிடைக்க வேண்டும்” என்று கூறுவதன் மூலம் அனைத்து மக்களுக்கும் உண்மையான சுதந்திரத்தின் சுவாசக் காற்று கிடைக்காது விட்டால் அது பூரணத்துவமிக்க வளர்ச்சிக்கு தடைதானே!





