Published On: Thursday, March 08, 2012
கல்முனை மாநகர முதல்வர் காரியாலயத்தில் மகளிர்தின கலந்துரையாடல்

(நப்றிஸ்)
சுமார் 1500 பெண்கள் சேர்ந்து தமது உரிமைக்காக குரல் கொடுக்கும் நிலையை ஏற்படுத்தியதன் விளைவே இன்று நாம் மார்ச் 8ஆம் திகதி அனுஸ்டிக்கின்ற இந்த மகளிர் தினமாகும். இத்தினத்திலே எமது நாட்டில் மட்டுமல்லாது இப்பிரதேச பெண்களின் உரிமை, சமத்துவம் என்பன கிடைக்கப் பெறவும் ஆண்களுடன் தாங்களும் சமமானவர்கள் என்ற நிலையில் வாழ்வதற்கும் எதிர்காலத்தில் அவர்களுடைய தேவைகள் செவ்வனே நிறைவேற்றப்படவும் முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளேன் என கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முதல்வரின் தலைமையில், சாய்ந்தமருது பிரதேச மகளிர் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு செவ்வாய்க்கிழமை முதல்வரின் சாய்ந்தமருது காரியாலயத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்நிகழ்வில், கல்முனை மாநகரசபை ஐ.தே.க. உறுப்பினர் எம்.நபார், தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா றிஸ்வி, முதல்வரின் ஆலோசகர் ஏ.பீர்முஹம்மட் உட்பட சாய்ந்தமருது பிரதேசத்தின் பல்வேறு பெண்கள் அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்களும் கலந்து கொண்டனர்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், எமது பெண்களின் தேவைகள் பலவற்றை நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே நிறைவேற்றிக் கொடுத்துள்ளேன். எதிர்காலத்திலும் அவ்வாறான எனது சேவை தொடரும். பல்வேறு நெருக்குதல்களுக்கும், சவால்களுக்கும் மத்தியிலேயே இவ்வாறான சேவைகளை நான் இன்று செய்துவருகிறேன்.
பெண்கள் ஒரு பாரிய சக்தி என்பதை கருத்தில் கொண்டே சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது. தனி ஒரு பெண்ணால் இத்தினம் ஏற்படுத்தப்படுத்தப்படவில்லை. பெண்களை மதிக்கின்ற அளவுக்கு நாம் எல்லா விடயங்களிலும் முன்னேற்றமடைய வேண்டும். அதற்காக ஒற்றுமையாக நாம் செயற்பட வேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.