Published On: Sunday, March 11, 2012
இலங்கைத் தமிழர்களுக்காக அரை மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தவரே கருணாநிதி


(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
இலங்கையில் போரின் போது தமிழர்களுக்கு ஏதும் செய்யாமல் அரைமணி நேரம் உண்ணாவிரதம் மட்டுமே மேற்கொண்டவர் திமுக தலைவர் கருணாநிதி என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் சாடினார். நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில், பா.ம.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பங்கேற்று பேசியதாவது;
முல்லைப்பெரியாறு அணை உள்ளிட்ட பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுத்தது திமுக, அதிமுக கட்சிகள்தான். இலங்கையில் போரின்போது, மத்திய அரசில் பங்கு வகித்தும் ஒன்றுமே செய்யாமல் அரை மணி நேரம் மட்டும் உண்ணாவிரதம் மேற்கொண்டவர் கருணாநிதி.
அவர், தற்போது இலங்கை போர்க்குற்றத்தைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு மத்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும். மனித உரிமைகளை மீறும் வகையில் இலங்கை இராணுவம் செயல்பட்டுள்ளது. அதற்கு போர்க் காட்சிகளே சான்று என்று கூறுகிறார். அவர் எப்போதெல்லாம் ஆட்சியை விட்டு இறக்கப்படுகிறாரோ அப்பொதெல்லாம் அவருக்கு திராவிடம், மொழிபற்று அதிகரித்து விடுகிறது என்றார் அவர்.