Published On: Thursday, March 08, 2012
எம்.எல்.ஏ.,க்களை விலை கொடுத்து வாங்க முடியாது

(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
எங்களது எம்.எல்.ஏ.,க்களை விலை கொடுத்து யாரும் வாங்க முடியாது என, கோவையில் நேற்று நடந்த திருமண விழாவில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார். சூலூர் எம்.எல்.ஏ., தினகரன், சிந்து சரண்யா ஆகியோர் திருமணம் விஜயகாந்த் தலைமையில் சூலூர், சிந்தாமணி புதூரில் நடந்தது.
மணமக்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால், வாழ்க்கை முழுவதும் சுகமாக இருக்கும். பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டுக்கும் பெருமை சேர்ப்பவர்கள் பெண்கள். பெண்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். உறவுகளை மதித்து, மணமக்கள் வாழ வேண்டும்.தமிழகத்தில் இருக்கும் கட்சிகள் மக்களுக்கு நன்மை செய்திருந்தால், நான் கட்சி ஆரம்பித்து இருக்க மாட்டேன். அவங்க ஆட்சியிலும் சரி, இவங்க ஆட்சியிலும் சரி மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, மின்வெட்டு பிரச்னை தான் 100 நாள் ஆட்சியின் சாதனைகள். மக்கள் பிரச்னைக்காக குரல் கொடுக்க பயப்பட மாட்டேன்.
எம்.ஜி.ஆரை தவிர வேறு யாரும் நிரந்தர முதல்வராக முடியாது. என்னை சஸ்பெண்ட் செய்ததை பற்றி கவலைப்படவில்லை. மக்கள் பிரச்னைகளை பல பகுதிகளில் சென்று பேச கிடைத்த வாய்ப்பாக கருதுகிறேன். பட்ஜெட் கூட்டத் தொடரில் நான் பங்கேற்க கூடாது என்பதற்காக என்னை விலக்கியுள்ளனர்.எங்கள் எம்.எல்.ஏ.,க்களை விலை கொடுத்து யாரும் வாங்க முடியாது. அவர்கள் என்னை விட்டு செல்ல மாட்டார்கள். கொலை, கொள்ளையை தடுப்பதை விட்டு விட்டு ஆளுங்கட்சிக்கு ஆதரவாக போலீசார் செயல்படுகின்றனர். இரண்டு கட்சிகளாலும் நாட்டுக்கு எந்த நன்மையும் ஏற்பட்டதில்லை ஏற்படப் போவதுமில்லை என்று விஜயகாந்த் பேசினார்.





