Published On: Friday, November 18, 2011
வாவிக்குள் கார் பாய்ந்து இருவர் படுகாயம்
(கலாநெஞ்சன்)
நீர்கொழும்பு ஹெமில்டன் வாவியில் கார் ஒன்று விழுந்ததில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 11.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பு ஏத்துக்கால பிரதேசத்தில் உள்ள ஹோட்டல்கள் அமைந்துள்ள பகுதியிலிருந்து பெரியமுல்ல பிரதேசத்தை நோக்கி அதிக வேகத்தில் வந்த கார் ஒன்றே கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் கட்டு மதிலை உடைத்துக் கொண்டு ஹெமில்டன் வாவியில் விழுந்துள்ளது .
இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றபோது பிரதேசத்தில் கடுமையாக மழை பெய்து கொண்டிருந்ததால் வீதியில் நீர் தேங்கியிருந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் காயமடைந்த 18 முதல் 19 வயதுடைய நான்கு இளைஞர்களும் ஒரு யுவதியும் பிரதேச மக்களால் காப்பாற்றப்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். படுகாயமடைந்துள்ள இளைஞர் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவருகிறது.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கந்தானை மற்றும் நாகொட பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் நால்வரும் யுவதி ஒருவரும் நீர்கொழும்பு ஏத்துக்கால பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றுக்கு வந்துவிட்டு இரவு வீடு திரும்பிச் செல்லும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவர்களில் கடுங்காயத்திற்கு உள்ளான இருவர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இன்று அதிகாலை கொழும்பு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
ரகித்த கிஹான் மற்றும் சத்துரங்க என்ற 19 வயதுடைய இளைஞர்களே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களாவர். இவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவருகிறது. ஹெமில்டன் வாவியில் விழுந்த கார் இன்று முற்பகல் வெளியே எடுக்கப்பட்டது.