Published On: Friday, November 18, 2011
ஒரநீதி காட்டுகிறதா முஸ்லிம் காங்கிரஸ்?
(நமது செய்தியாளர்கள்)
நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மசூர் சின்னலெப்பை மற்றும் அவரது ஆதரவாளர்களையும் புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நீதி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆவணக் காப்பாளர் நியமனத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மசூர் சின்னலெப்பையின் ஆதரவாளர்கள் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலருக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஏற்பாட்டில் நீதி மன்றங்களில் ஆவணக்காப்பாளர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை அண்மையில் நீதி அமைச்சில் இடம்பெற்றது. இதில், அட்டாளைச்சேனை சார்பாக பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.எம். நஸீர் மற்றும் மு.கா. உயர்பீட உறுப்பினர் எஸ்.எல்.எம். பழீல் ஆகியோரின் சிபாரிசின் அடிப்படையில் பலர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை முக்கியஸ்தரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான மசூர் சின்னலெப்பை சார்பில் எவரும் அழைக்கப்படவில்லை. தற்போது நேர்முகப் பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் அட்டாளைச்சேனை முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளும், மசூர் சின்னலெப்பையின் ஆதரவாளர்களும் ரவூப் ஹக்கிமின் இந்த செயற்பாட்டிற்கு கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பல தியாகங்களைச் செய்த பலர் இருக்கத்தக்கதாக முக்கியஸ்தர்களின் உறவினர்களுக்கும், பணம்படைத்தவர்களுக்கும் தொழில் நியமனம் வழங்கப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ளமுடியாத செயற்பாடாகும் எனக் கூறப்படுகின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காக மத்திய குழுக்கள் இருக்கத்தக்கதாக குறிப்பிட்ட சிலரின் சிபாரிசுக்காக எவ்வாறு நியமனம் வழங்க முடியும். தேர்தல் காலத்தில் மத்தியகுழு என்று கூட்டங்களுக்கு அழைப்பழைப்பாக கடிதங்கள் அனுப்பும் மத்திய குழு தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் இந்த விடயத்தில் என்ன செய்கின்றார்களோ தெரியவில்லை. அவர்களுக்கு கௌரவம் கிடைத்தால் போதும் என்றா நினைக்கின்றார்கள்.
இந்நியமன விடயத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மசூர் சின்னலெப்பை எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளாமல் ஹக்கீம் தந்தால் மாத்திரம் எடுப்பேன் என இருந்ததாகவும் கதைகள் அடிபடுகின்றது. மக்கள் பணிக்காக அரசியலுக்கு வந்த ஒருவர் பதவியைப் பெற்றதும் மக்களை மறந்து தன்போக்கில் செயற்படுவது எந்த வகையில் நியாயமாகும்.
இது இவ்வாறிருக்க, ரவூப் ஹக்கீம் ஏன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மசூர் சின்னலெப்பையை புறக்கணித்து வருகின்றார் என்ற கேல்வியும் கட்சி ஆதரவாளர்களிடத்தில் ஏற்பட்டுள்ளது. அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தருவதாக பகிரங்கமாக வாக்குறுதி அளித்த ஹக்கீம், அதை மீறிய விடயமும் எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும்.
இதேவேளை, இந்நியமனம் வழங்களில் பணத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் கதைகள் பரவலாக அடிபடுகின்றது. கட்சிக்காக தியாகங்கள் புரிந்தவர்களை ஹக்கீம் ஒருபோதும் கவனிக்கப் போவதில்லை என்றும் மாற்று நடவடிக்கையில் தாம் இறங்கப் போவதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர்கள் நம்மிடம் கருத்துத் தெரிவித்தனர்.
அட்டாளைச்சேனையைப் பொறுத்தளவில் ஸ்ரீ.மு.கா.கட்சிக்குள் பல குத்துவெட்டுக்கள் இருப்பது கட்சியின் தலைவருக்கும், மேலிடத்திற்கும் நன்கு தெரியும். இந்த நிலையில் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இவரின் செல்வாக்கு அதிகமானது என்பதும் அனைவருக்கும் தெரியும். இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்டகால உறுப்பினராக இருந்து தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் மரணத்திற்குப் பின்னர் ஸ்ரீ.ல.மு.கா. கட்சியில் சேர்ந்து அக்கட்சிக்கும், தலைமைப்பீடத்திற்கும் விசுவாசமாக உழைத்து வருகின்ற ஒரு போராளி.
இவர் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் பல மாற்றுக் கட்சிக்காரர்களை ஓரங்கட்டி தனித்துவமான ஸ்ரீ.ல.மு.கா கட்சிக்குரிய ஆதரவாளர்களாக மாற்றியமைத்து அட்டாளைச்சேனைப் பிரதேச மக்களின் அமோக ஆதரவுடன் பிரதேச சபை தவிசாளராக தெரிவானவர். பின்னர் மாகாண சபையின் அங்கத்தவராகவும் தெரிவு செய்யப்பட்டவர். இருப்பினும் அவருக்காக கட்சியில் பாடுபட்டுழைத்த பல போராளிகள் இருக்கின்றனர். நீதியமைச்சின் கீழ் உள்ள இந்த நீதிமன்ற ஆவண உதவியாளர் பதவிக்கு அவரின் ஆதரவாளர்கள் ஒருசிலரையாவது இந்நியமனத்தில் உள்வாங்கியிருக்கலாம். இது நடைபெறாமை ஆதரவாளர்கள் மத்தியில் மிகுந்த கவலையை அளிப்பதுடன், மாகாண சபை அங்கத்தவரான மசூர் சின்னலெவ்பையை கட்சியினால் புறக்கணிப்பதுபோல் தெரிகிறது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
கடந்த பொதுத் தேர்தலின்போது கட்சியின் தலைமைப் பீடத்தினால் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் பாராளுமன்ற கதிரையை அலங்கரிக்கின்ற தேசியப் பட்டியல் உறுப்பினர் என்று நன்மாராயம் கூறப்பட்ட பின்னரும் அவர் புறக்கணிக்கப்பட்டார் என்பதும் நாடறிந்த விடயம். இனிமேலாவது கட்சியும், அதன் உயர்பீட உறுப்பினர்களும் இவ்விடயங்களில் கூடிய கரிசனை கொண்டு செயற்பட வேண்டுமெனவும் ஸ்ரீ.ல.மு.கா. கட்சியின் அட்டாளைச்சேனைப் போராளிகள் கோரிக்கையை முன்வைக்கின்றனர்.