Published On: Sunday, November 20, 2011
நோர்வேயின் "அமைதிக்கான அடமானங்கள்"
(ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்)
1997 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையில் நோர்வே மேற்கொண்ட சமாதான முயற்சி குறித்த 208 பக்கங்கள் கொண்ட மதிப்பீட்டு அறிக்கையை அமைதிக்கான அடமானங்கள்
(Pawns of Peace) என்ற தலைப்பில், நோராட் அமைப்பு கடந்தவாரம் ஒஸ்லோவில் வெளியிட்டிருந்தது.
நாமும் கடந்தவாரம் அந்த அறிக்கை குறித்தும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் பற்றியும் விரிவாக ஆராய்ந்திருந்த நிலையில் இவ்வாரம் அந்த மதிப்பீட்டு அறிக்கை குறித்தான பிரதிபலிப்புகளை ஆராய்வதே இந்தக்கட்டுரயின் நோக்கமாகும்.
இலங்கையில் நோர்வே மேற்கொண்ட சமாதான முயற்சிகள் தோல்வியடைந்தமை குறித்து அறிக்கை வெளியானவுடன் அதுதொடர்பில் முதலில் விடுதலைப் புலிகள் சார்பில் கருத்துக்களை வெளியிட்டவர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரென தன்னைக் கூறிக்கொள்ளும் வீ.ருத்திரகுமாரன் ஆவார். புலிகள் அன்று அரசாங்கத் தரப்புடன் மேற்கொண்ட பேச்சுக்களில் புலிகள் தரப்பில் கலந்துகொண்டவர்களில் இவரும் ஒருவர்.
சர்வதேச செய்தி நிறுவனமொன்றுக்கும், அமெரிககாவில் நடைபெற்ற தமிழர் சார்பு நிகழ்வொன்றிலும் கலந்துகொண்டு உரையாற்றியுள்ள ருத்திரகுமாரன், சமாதான முயற்சிகள் தோல்வியடைந்தமைக்கு புலிகள்தான் காரணமென்ற குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
புலிகள் இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுக்களில் உளச்சுத்தியுடன் ஈடுபட்டனர். பேச்சுக்கள் நடைபெற்ற காலப்பகுதியில் புலிகள் அமைப்பை சர்வதேசம் பயங்கரவாத என்ற கண்ணாடி ஊடாக நோக்கியது. பேச்சுக்கள் தோல்வியடைந்தமைக்கு சர்வதேச சமூகமே காரணமாகும்.
அரசாங்கத்துடன் புலிகள் மேற்கொண்ட பேச்சுக்களில் புலிகள் தரப்பானது, பல விட்டுக்கொடுப்புகளை மேற்கொண்டது. போர்நிறுத்த மீறல்களில் அரசாங்கப் படைகளே ஈடுபட்டனர் என்றும் அவர் உறுதிபட கூறியுள்ளார்.
அதேவேளை இலங்கையில் நோர்வேயின் சமாதான முயற்சிகள் ஏன் தோல்வியடைந்தன என்ற மதிப்பீட்டு அறிக்கை வெளியானவுடன் அதுதொடர்பில் கருத்துவெளியிட்டிருந்த இலங்கை அரசாங்கத்தின் மூத்த அமைச்சரொருவர், இவ்வறிக்கை இறைமையுள்ள அரசாங்கமொன்றுக்கு களங்கத்தை ஏற்படுத்தக் கூடியதென்றும், எனவே தமது உத்தியோகபூர்வ எதிர்ப்பை நோர்வே அரசுக்கும், மதிப்பீட்டை நடத்திய நோராட் அமைப்புக்கும் அறியப்படுத்துவொமென்று தெரிவித்திருந்தார்.
இருந்தபோதும் மதிப்பீட்டு அறிக்கை குறித்து இந்தக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்வரை இலங்கை அரசாங்கத்திடமிருந்து உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
அதேநேரம் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய ராஜபக்ஷ இந்த மதிப்பீட்டு அறிக்கை குறித்த தமது பிரதிபிலிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பொதுவாக கோத்தபய ராஜபக்ஷவின் பிரதிபலிப்பை இலங்கை அரசாங்கத்தின் பிரதிபலிப்பாகவும் இங்கு நாம் நோக்கமுடியும்.
"அமைதிக்கான அடமானங்கள்" என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இலங்கையில் தோற்றுப்போன நோர்வேயின் சமாதான முயற்சிகள் தொடர்பாக கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,
நேட்டோவிடமிருந்தும், இந்தியாவின் றோ புலனாய்வு பிரிவினரிமிருந்தும் இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினர், விடுதலைப் புலிகள் மற்றுமொரு போருக்கு தயாராகின்றனர் என்ற தகவலை பெற்றுக்கொண்டுள்ளனர். இதனை ஒஸ்லோ ஒப்புக்கொண்டுள்ளது. இருந்தும் போர்நிறுத்த கண்காணிப்பாளர்களுக்கு புலிகள் போருக்கு தயாராகும் விடயம் தெரியாமல் போனது ஆச்சரியமளிக்கிறது.
எனவே, புலிகள் சமாதான பேச்சுக்களில் பஙகுகொண்ட சமயமே போருக்கும் தயாராகின்றனர் என்ற விபரம் போர்நிறுத்த கண்காணிப்பாளர்களுக்கு தெரியாமல் போயிருக்கமுடியாது. சமாதான முயற்சிகள் குருட்டுத்தனமாக வழிநடத்தியது நிலைமைகள் மோசமடைவதற்கு காரணமாகவிட்டது.
இந்தியாவின் றோ மட்டுமே உரிய வழிமுறைகளில் அணுகியதாகவும், ஆனாலும் அவர்களை தம்மால் முழுமையாக நம்பமுடியவில்லை என்றும் நேட்டோவின் புலனாய்வு அறிக்கைகளை மட்டுமே உறுதிசெய்ய முடிந்தது என்றும் இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழு தலைவர் கூறியதாக மதிப்பீட்டு அறிக்கை சொல்கிறது. றோவினை நோர்வேக்காரர் நம்பாவிட்டாலும் அவர்கள் றோ அதிகாரிகளுடன் உயர்மட்ட சந்திப்புகளை நடத்தியுள்ளனர் என்றும் கோத்தபய ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் நோர்வேயின் மதிபீட்டு அறிக்கையானது சமாதான முயற்சிகளில் ஏற்பட்ட தோல்விகளை மட்டுமே சுட்டிக்காட்டுகிறது. புலிகளை இராணுவ ரீதியாக மட்டுமெ தோற்கடிக்க வேண்டியிருந்தது. தீவிரவாதப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணமுடியும் என்று சர்வதேச சமூகம் நம்பியது எனக்கு ஆச்சரியத்தை தருகிறது.
பேச்சுக்களில் பங்கெடுக்க இலங்கை இராணுவத்தினருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டநிலையில், நோர்வே இராணுவ வல்லுனர்கள் படைச்செயற்பாடுகளை குறுக்கிக்கொள்ளும் இராணுவ நுட்பக்கூறுகளில் தொடர்புபட்டிருந்தனர். அந்தவகையில் முழுமையான செய்ற்பாடுகள் குறித்தும், குறிப்பாக இராணுவ மற்றும் புலனாய்வு அம்சங்கள் பற்றியும் மீளாய்வு செய்யப்படவேண்டிய அவசியத்தை நோர்வேயின் அறிக்கை வெளிப்படுத்துவதாகவும் கோத்தபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்,
மேலும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் மதிப்பீட்டு அறிக்கை குறித்து ஆராய்ந்து கொண்டிருப்பதாவும், இதுதொடர்பில் ஆராய்ந்தபின்னரே கருத்துக்கூற முடியுமெனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அரசாங்கத்தில் ஹெல உறுமய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, மதிப்பீட்டு அறிக்கையிலிருந்து இந்தியாவின் இரணட்டை முகத்தை அறிந்துகொள்ள முடிவதாக விமர்சித்துள்ளார்.
அதேவேளை இந்தியாவின் மதிப்பீட்டு அறிக்கையின் பல இடங்களில் இலங்கையில் நோர்வே மேற்கொண்ட சமாதான முயற்சியும், போர்நிறுத்தமும் உடைந்துபோக இந்தியாவின் றோ அமைப்பே காரணமென குற்றம் சுமத்தப்பட்டு நிலையில் மறுபுறம் இந்தியாவின் ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்திற்கு நோர்வேயின் சர்வதேச விவகார அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் வழங்கியுள்ள செவ்வியிலும் இந்தியாவின் றோவை குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் இதுவரை வெளியே வந்திராத சில இரகசியத் தகவல்களையும் எரிக் சொல்ஹெய்ம் போட்டுடைத்துள்ளார். 2002 ஆம் ஆண்டு போர்நிறுத்த உடனபாட்டுக்கு முன்னர் விடுதலைப் புலிகளும், இந்தியாவும் இரகசியமாக சந்திததாகவும் இதில் கலந்துகொண்டவர்கள் யார் மற்றும் எற்கு அந்தச்சந்திப்பு நடைபெற்றது என்ற விபரங்களை தாம் பகிரங்கப்படுத்த விரும்பவில்லையெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இது உண்மையானதாக இருக்குமாயின் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியை விடுதலைப் புலிகள் படுகொலை செய்தபின்னும், 1992 இல் விடுதலைப் புலிகளை இந்தியா தடைசெய்த பின்னரும் இருதரப்பினரும் இவ்வாறு சந்தித்துக் கொண்டமையும் முதற்தடவையாக இருந்திருக்கவேண்டும்.
அதேவேளை நோர்வேயின் மதிப்பீட்டு அறிக்கை குறித்து இந்திய அரசாங்கத்திடமிருந்து எத்தகைய பிரதிபலிப்புகளும் வெளிவராத நிலையில, விடுதலைத் சிறுத்தைகள் கட்சியானது நோர்வேயில் வெளியாகியுள்ள மதிப்பீட்டு அறிக்கையை அடிப்படையாககொண்டு தமது கட்சியின் பிராந்திய கூட்டத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது.
அதாவது, நோர்வே வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் இந்திய மத்தியரசு தமிழர் விரோதப் போக்கை கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பில் மத்தியரசு உரியமுறையில் பதிலளிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை சிங்கள கடும்போக்குவாத பத்திரிகையான திவயின நோர்வேயின் மதிப்பீட்டு அறிக்கை தொடர்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நோர்வே தயாரித்துள்ள இந்த அறிக்கைக்கு இலங்கையர்களும் உதவியுள்ளனர். இலங்கையில் செயற்படும் சில அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்த மதிப்பீட்டு அறிக்கை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். இருந்தபோதும் அறிக்கையை தயாரித்தவர்கள் இலங்கை படைத்துறையினரிடமிருந்து எவ்வித வாக்குமூலங்களையும் பெற்றுக்கொள்ளவிலையென விமர்சித்துள்ளது.
இங்கு மற்றுமொரு விடயமும் குறிப்பிட்டு கூறக் கூடியதாகவுள்ளது. தற்போது அரசாங்கத் தரப்பில் உள்ள மிலிந்த மொரகொட போர்நிறுத்த ஒப்பந்தம் அமுலிலிருந்த காலப்பகுதியில் நோர்வேயிடமிருந்து 60 மில்லியன் நோர்வே குரோனர்களை பெற்றுள்ளதாக மதீப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிலவேளை மிலிந்த மொரகொட தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் இருப்பாராயின் அவருக்கெதிராக ஆளும்தரப்பு போர்க்கொடியே தூக்கியிருக்கும். இன்றைய இலங்கை அரசியலின் கோமாளித்தனத்தை இந்த சம்பவமொன்றின் மூலமே நாம் எடைபோடமுடியும்.
இலங்கையில் நோர்வே மேற்கொண்ட சமாதான முயற்சி குறித்த மதிப்பீட்டு அறிக்கை குறித்த பரந்துபட்ட பிரதிபலிப்புகளை நாம் நோக்குமிடத்து அவற்றிலிருந்து மூன்று முக்கிய விடயங்கள் தெளிவாகிறது.
1- இலங்கை அரசாங்கமானது நோர்வே மற்றும் போர்நிறுத்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டவர்களை குற்றம் சுமத்துகிறது.
2- விடுதலைப் புலிகள் அமைப்பானது சர்வதேச சமூகத்தை குற்றம் சுமத்துகிறது.
3- சமாதான ஏற்பாட்டாளரான நோர்வேயானது இந்தியாவையும், அதன் உளவு அமைப்பான றோவையும் குற்றம் சுமத்துகிறது.
அகமொத்ததில் 1997ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையில் நோர்வே மேற்கொண்ட சமாதான முயற்சி குறித்த மதிப்பீட்டு அறிக்கையை ஒவ்வொருவரும் மற்றவர் மீது திசை திருப்பிவிடுவதற்கும், குற்றம் சுமத்துவதற்குமே பயன்படுத்துகின்றனர். மதிப்பீட்டு அறிக்கையிலிருந்து எவரும் பாடத்தைக் கற்றுக் கொண்டிருப்பதாகவோ அல்லது பாடத்தை கற்றுக்கொள்ள் போவதாகவோ தெரியவில்லை.