Published On: Saturday, November 19, 2011
ஒரு காகம் பல நம்பிக்கை
தூங்கிய ஒர் பொழுதில்
நிர்வாணக் கனவுகளுக்கு
இடைஞ்சலாய்
கிணற்றடி வேலியில்தனித்திருந்த
நரை கலந்த ஓர் கிழட்டு
காக்கை கத்தி ஆடை
களையாமலே கனவு
முடிந்தாயிற்று
காக்கைகளின் தொன்மையான
ஜீவியத்தில் இது வரவுச்செய்தியென்று
அதன் அழுகை வந்த திசை பார்த்து
பழய கதையை
புதுமையாக சொல்லி முடித்தாள்
அம்மா
இனந்தெரியாதோரால்
இணங்காணப்பட்ட என்
அப்பனும் வெற்றிடம் நிரப்பிய
விஸயம் தெரியாமல் எழுதிப்போட்ட
வேலையும் வரப்போவதாக
ஆரூடம் சொன்னால்
அம்மா
பகல் கடத்தி
பவுடர்பூசிய சாயங்காலப்பொழுது
நிறத்தால் தனித்துவம் காடடிய
அந்த காகம்
சொண்டுசொரியத்தான்
போயிருக்கனும் போல
மின்சாரக்கம்பியில்
அதன் இறுதி அத்தியாயம்
எழுதப்பட்டிருந்தது
கிணற்றடி வேலியில்
அதன் சாவை அது முன்னறிவிப்பு
செய்திருந்தது
பாவம் அம்மா
நாளையும் எனக்கு விரசமாய்
கனவுகள் வரலாம்
ஒன்றல்ல பல நூறு காக்கைகள்
கிணற்றடி வேலியில்
ஒன்று சேர்ந்து கத்தலாம்
இப்போதெல்லாம் அம்மாவின்
நாட்கள் நம்பிக்கையோடு
மட்டுமே நகர்கிறது
- முஹம்மத் மஜீஸ்