Published On: Wednesday, December 28, 2011
பதவி விலகப் போவதில்லை: சர்தாரி திட்டவட்டம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவின் நான்காவது ஆண்டு நினைவு நாளில், மக்களிடையே பேசிய அதிபர் ஆசிப் அலி சர்தாரி, ஜனநாயக அமைப்புகளுக்கு எதிரான அனைத்துச் சதிகளையும் முறியடிக்கும்படி, மக்களைக் கேட்டுக் கொண்டார்.
கடந்த 2007, டிசம்பர் 27ம் தேதி, ராவல்பிண்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பெனசிர் புட்டோ, தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். சிந்து மாகாணத்தின் நவ்தரோ நகர் அருகில் உள்ள கர்ஹி குதா பக்ஷ் என்ற கிராமத்தில், புட்டோ குடும்பத்தினரின் சமாதிகள் உள்ளன. அங்கு தான் பெனசிர் புட்டோவும் புதைக்கப்பட்டார்.
வரலாறு படைப்போம்: நேற்று அங்கு சென்று, தன் மனைவி பெனசிருக்கு அஞ்சலி செலுத்திய அதிபர் சர்தாரி, மக்களிடையே பேசியதாவது: பாக்., அரசு, வரலாற்றை உருவாக்குவதற்காக அமைந்தது. தினசரி பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளை உருவாக்குவதற்காக, அந்த அரசு செயல்படவில்லை. ஜனநாயகத்தைக் காப்பது தான், பெனசிருக்கு நாம் அஞ்சலி செலுத்தும் முறை. ஜனநாயக அமைப்புகளுக்கு எதிரான அனைத்துச் சதிகளையும், மக்கள் முறியடிக்க வேண்டும். அரசின் 80 சதவீத இலக்குகளை, தற்போது முடித்து விட்டோம்.
அதிபர் கட்டுப்பாட்டில் கோர்ட்: அரசின் கட்டுப்பாட்டின் கீழ், கோர்ட்டுகளும் வர வேண்டும் என்பதுதான் எனது ஆசை. எனது கட்சியினர், இனி ஊடகங்களுடன் நெருங்கிப் பழக வேண்டாம். அவர்கள் கட்சிகளுக்குள் சண்டை மூட்டி விடுகின்றனர். இவ்வாறு சர்தாரி பேசினார். தனது இந்தப் பேச்சின் மூலம், எவ்வித வதந்திக்கும் பயப்பட்டு, தான் பதவி விலகப் போவதில்லை என்பதை, திட்டவட்டமாக சர்தாரி தெரிவித்துள்ளார்.
சட்ட வரையறைக்குள்...: இக்கூட்டத்தில், பிரதமர் யூசுப் ரசா கிலானி பேசியதாவது: அனைத்து அமைப்புகளும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் வரையறைக்குள் இயங்க வேண்டும். சட்ட வரையறைக்குள் செயல்படுவதில், இந்த அமைப்புகளுக்குள் எவ்வித பிரச்னையும் வரக் கூடாது. பிரதமருக்கும் அதிபருக்கும் இடையில் மோதலை உருவாக்க, முயற்சிகள் நடந்தன. அதையடுத்து, பிரதமர், நீதித் துறையை விமர்சித்ததாக, சண்டை மூட்டி விடப் பார்த்தனர். இரு முயற்சிகளும் தோல்வி அடைந்துவிட்டன.
வதந்திகள் தோல்வி: இப்போது, ராணுவத் தளபதி கயானி மற்றும் ஐ.எஸ்.ஐ., தலைவர் பாஷா ஆகியோரை, நான் பதவி நீக்கம் செய்யப் போவதாக, வதந்திகள் கிளம்பியுள்ளன. அரசியல் அமைப்புச் சட்டத்திற்குள் செயல்படும் வரை, எந்தப் பிரச்னையும் இருக்காது. மீறினால், அபாயமான விளைவுகள் நேரிடும். இம்ரான்கானின் கட்சி சந்தர்ப்பவாதிகளின் கூட்டணி. உண்மையான தொண்டர்கள் கட்சியில் இருப்பர். அங்கு செல்பவர்கள், சுயநலவாதிகள். இவ்வாறு கிலானி தெரிவித்தார்.