Published On: Friday, December 09, 2011
கொழும்பில் நடைபெற்ற அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

நேட்டோ படையினருக்கு எதிராக கொழும்பு தெவட்டகஹா முஸ்லிம் பள்ளிவாயில் முன்பாக இன்று ஜும்மா தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இலங்கை பாகிஸ்தான் நட்புறவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா, மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா மற்றும் கொழும்பு மாநகரசபை உறுப்பினரான அசாத் சாலி உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்காவுக்கும் நேட்டோ படைகளுக்கும் எதிராக பல்வேறு வாசகங்கள் பொறித்த சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
'ஒபாமா ஒழிக', 'அமெரிக்காவின் கைப்பொம்மையான பான் கீன் மூன் ஒழிக', 'சதாம் ஹுசைன், கடாபி, பாகிஸ்தான் இராணுவம் ஆகியோரை அமெரிக்காவே கொன்றொழித்தது' போன்ற கோஷங்களையும் எழுப்பியவாறு தெவட்டகஹா பள்ளிவாயிலிலிருந்து லிப்டன் சுற்றுவட்டம் வரை பேரணியாக ஆர்ப்பாட்டம் நகர்ந்தது.
இன்று பிற்பகல் 1 மணியளவில் ஆரம்பமான இவ்வார்ப்பாட்டமானது சுமார் அரை மணித்தியாலங்கள் இடம்பெற்றது. இதனால் அப்பகுதி ஊடான போக்குவரத்து ஓரளவு பாதிக்கப்பட்டிருந்தது.




