Published On: Saturday, December 10, 2011
மனித உரிமைகள் பற்றிய எண்ணக்கருக்கள்

இன்று மனித உரிமைகள் பற்றிய எண்ணக்கரு மக்களிடையே நன்கு அறியப்பட்டு வருகின்ற ஒரு விடயமாகும். நாட்டின் ஜனநாயக மரபுகளை பேணிப்பாதுகாத்து வருகின்ற ஒருநிலைமையில், பெற்றுக் கொண்டிருக்கின்ற அல்லது நடைமுறையிலுள்ள சுதந்திரத் தன்மையை அனைவரும் சுவைத்திட தனக்குள்ள உரிமைகளை யாவரும் அறிந்துகொள்வது கட்டாயமாகும். சமுதாயக் கட்டமைப்பில் பல்லின மக்களுடன் வாழும் நாம், நமக்குள்ள கடமைகள், மற்றவருக்கு நாம் செய்யும் கடமைகள், மற்றவரிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் செயற்பாடுகளை அறிவதும், சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள், சட்டதிட்டங்கள், உயிர்வாழ் உடமைகளின் பாதுகாப்பு போன்ற பல்வேறுபட்ட விடயங்களின் ஊடாக இவற்றினை அறிந்துணர்ந்து செயற்படுகின்றபோது நாட்டின் நீடித்த பொருளாதார அபிவிருத்திக்கும், சமாதான சகவாழ்வுக்கும் இட்டுச் செல்ல முடியும்.
இன்றைய காலகட்டத்தில் மனித உரிமைகள் மீறப்படுகின்ற பல சந்தர்ப்பங்களை நாம் தினமும் காண்கின்றோம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனக்குள்ள உரிமைகள் என்ன? கடமைகள் என்ன? என்பன போன்றவற்றை அறிந்திராததும் இதற்கு காரணமாக அமைகின்றது எனலாம். அந்தவகையில் பார்க்கின்றபோது உலகில் இன்று அதிகமான மனித உரிமைகள் மீறப்படுகின்ற நாடுகளின் பட்டியலில் நமது நாடும் உள்ளன என்கிற விமர்சனங்களுக்கும் மத்தியில் மனித உரிமைகளை நிலைநாட்டுவதில் அரசும், மனித உரிமைகளை ஒழுங்கமைக்கின்ற அல்லது பேணி, பாதுகாத்து வருகின்ற தேசிய, சர்வதேச அமைப்புக்கள் பலவும் ஈடுபட்டு வருகின்றபோதிலும் மீறல்கள் நடைபெற்றே வருகின்றன. அதற்குப் பல்வேறு காரணங்கள் பலராலும் கூறப்பட்டு வந்தாலும் இதனைப்பற்றிய அறிவினை ஆரம்பமுதல் பள்ளி மாணவர்களிடத்திலிருந்து சரியான முறையில் ஊட்டப்படுகின்றபோது தெளிவுபெறுகின்ற நிலையினைக் கொண்டுவரலாம் என்பது பலரின் அபிப்பிராயமாகும்.
மனிதஉரிமை என்பது?
மனித உரிமை என்பது எல்லா மனிதர்களுக்கும் அடிப்படையான உரிமைகள், சுதந்திரங்களைக் குறிக்கும். இந்த உரிமைகள் “மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் கிடைத்த அடிப்படையான விட்டுக் கொடுக்க முடியாத, மறுக்கமுடியாத சில உரிமைகளாகவும் கருதப்படுகின்றன" இனம், சாதி, நிறம், சமயம், பால், தேசியம், வயது, உடல், உள, சக்தி போன்றவற்றுக்கும் அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கின்ற இந்த அடிப்படை உரிமைகள் மனிதர்கள் சுமூகமாக, நலத்துடன் வாழ மிகவும் அவசியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மேலும் மனித உரிமைகளுள் வாழுகின்ற, கருத்தினை வெளிப்படுத்துகின்ற, சட்டத்தின்முன் சமநிலை, நகர்தல், பண்பாடு, உணவு, கல்வி போன்றவைகள் மிக முக்கியத்துவமிக்கதான உரிமைகளாகவும் காணப்படுகின்றன. அனைத்துலக நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள இக்கருக்கள் ஐக்கியநாடுகளினால் வெளிப்படுத்தப்பட்டுள்ள உலக மனித உரிமைகளின் அடிப்படையில் தெளிவாக எடுத்துரைக்கப்படுகின்றன. இதனை International Covenant on Economic, Social and Cultural Rights என்கிற உறுதியுரையிலும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு நாடுகளில் மனித உரிமைகளை வெளிப்படுத்துகின்ற அடிப்படை மனித உரிமைகளாகக் கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில் 1948ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட அனைவருக்குமான மனித உரிமைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை வழங்குவதை உள்ளடக்கி, 1979இல் UNOவின் மகளிருக்கெதிரான அனைத்து பாகுபாட்டையும் விலக்கி பொது இணக்க உடன்பாட்டை (CEDAW) நிறைவேற்றியதிலிருந்து உலக மகளிருக்கான உரிமைச் சட்டம் 1981. செப்டம்பர் 01 இலிருந்து அமுலாக்கத்தில் வந்தது. இது உலகநாடுகள் பலவும் ஏற்றுள்ள நிலையில் அமெரிக்கா மட்டும் இந்த உடன்பாட்டை ஏற்றுக் கொள்ளாதது உலகில் தன்னுடைய அராஜகத்தை நிலைநிறுத்தவும், தனக்குள்ள அதிகாரத்தை நிலைநாட்டவும், மனிதருக்குள்ள உரிமைகளில் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்;ளவும் தான் நினைத்ததை சாதிக்கவும் இந்த உரிமைகளை ஏற்றுக் கொள்ளாமை மனித உரிமைகளின் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் சமுதாயக் கட்டமைப்பை உலக மட்டத்தில் ஏற்படுத்துவதற்கு நாடுகளும், அமைப்புக்களும் அமெரிக்காவின் நிலையை எடுத்துக்கூறுவது காலத்தின் கட்டாயமாகும் என்பதில் எவ்வித ஐயமுமம் இல்லை என்றே கூறலாம்.
கல்வியின் ஊடாக மனித உரிமைகள் பற்றிய தெளிவு
நாட்டில் நடைபெறுகின்ற உரிமைமீறல்களின்போது அதிகமானவர்கள் இளைஞர்களாகவே காணப்படுகின்றனர். இவர்களுக்கு சரியான வழிகாட்டல்கள் ஆரம்பத்தில் காட்டப்பட்டிருந்தால் வழிதவறியிருக்க மாட்டார்கள். அதனைக் கருத்திற்கொண்டு இலங்கையில் 1978ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் என்;கிற அத்தியாயத்தினை உட்படுத்தியதாக மனித உரிமைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதல்தான் அரசியல் அமைப்புக்களில் இவை உறுதிப்படுத்தப்பட்டிருப்பினும் சிறியோர்களுக்கு அவர்களின் எதிர்காலநலனில் அதிக அக்கரைகொண்டு இச்சட்டங்கள் போதியளவாக கற்பிக்கப்படவில்லை அல்லது முழுமையான பாடங்களாக அமையப்பெறவில்லை என்கிற காரணங்களினால் குற்றம் இழைப்பவர்களிடம் சட்டங்களில், உரிமைகள் பற்றிய தெளிவின்மை ஒரு குறைபாடாக காணப்படுகிறது.
அந்தவகையில் பார்க்கிறபோது இப்பிராந்திய நாடுகிளுக்கிடையே பாடசாலை மட்டத்தில் மனித உரிமைகள் பற்றிய கற்கைகளை ஆரம்பித்த பெருமை நமது நாட்டுக்கே உரியது எனலாம். கடந்த 1983ஆம் ஆண்டில் மனித உரிமைகள் தொடர்பான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட போதிலும் சில பாடங்களின் ஊடாகவே கற்பிக்கப்பட்டு வந்தன. இருபிப்பினும் நாட்டின் இனப்பிரச்சினை காரணமாக ஏற்பட்டிருந்த உள்நாட்டு யுத்தகால நடவடிக்கைகளின் போதும் இவற்றின் பெறுமானம் காப்பாற்றப்பட்டே வந்துள்ளது. இருந்தாலும் பாடசாலை மட்டத்தில் மனித உரிமைகளின் எண்ணக்கரு ஆசிரியர்களிடத்திலும்சரி, வளர்ந்த மாணவர்களின் மத்தியிலும்சரி அதிகளவான கவனத்தை பெறவில்லை என்பதை தொடர்பூடங்கள் வாயிலாக வெளிவருகின்ற செய்திகளை பார்க்கிறபோது மனித உரிமைகள் பற்றிய முழுமையான பாடங்களின் அவசியம் உணரப்பட்டுள்ளது என்பதையே சுட்டிக்காட்டுகின்றன.
பாடசாலைப் பாடத்திட்டத்தில் “குடியுரிமைக் கல்வி” எனும் பாடத்தின் ஊடாக மனித உரிமைகள் எனும் எண்ணக்கருவாக்கம் பாடசாலைகளில் 2007ஆம் ஆண்டிலிருந்து அமுல்படுத்தப்பட்டு வந்தாலும் அவை சரியானவாறு மனிதஉரிமைகளின் முழுவடிவத்தை காணவில்லை என்றே கூறலாம். எவ்வாறாயினும் இவற்றின் மீதான அக்கரையின்மை முக்கியமானதோர் காரணியாகும். ஆதலால்தான் மனித உரிமைகள் பற்றிய அனைத்து விடயங்களையும் மாணவர்களுக்கு அறிவூட்டும் அவசியத்தை உணர்ந்து பல அரசார்பற்ற நிறுவனங்கள் பாடசாலை மட்டத்தில் பல்வேறு கருத்தரங்குகளை நடாத்தி வருகின்றன. அத்துடன் ஆசிரியர்களுக்கும், வளர்ந்தோருக்கும் கற்கைநெறிகளாக நடாத்தப்படுகின்றதையும் காணலாம். இருப்பினும், எதிர்கால உலகின் சவால்களை வெற்றி கொள்வதற்கான குடிமக்களை உருவாக்கும் நோக்குடன் மனித உரிமைகள் மீதான அறிவூட்டல்களை மாணவர்களுக்கு மாத்திரமன்றி ஆசிரியர்கள், அதிபர்கள், கல்விமான்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் போன்றோருக்கும் இதனை பரவச் செய்து அவர்களின் ஊடாக சமுதாயத்திற்கு எடுத்துச் செல்வதற்கான பாரிய பங்களிப்பினையும் ஏற்படுத்துவதற்கு அரசும், அரசார்பற்ற நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்குதல் வேண்டும்.
அந்தவகையில் பல்கலைக்கழக மட்டத்தில் மனித உரிமைகள் பற்றிய சான்றிதழ் மற்றும் டிப்ளோமா கற்கைகள் நடைபெற்று வந்தாலும் அவை சமுதாய மட்டத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தவி;ல்லை. அண்மையக்காலங்களில் மனித உரிமைகள் மீறப்படுகின்ற சம்பவங்கள் எங்குபார்;த்தாலும் நடைபெற்று வருகின்றன. பாடசாலைகளில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையிலான பிரச்சினைகள் நீதிமன்றவம் வரை சென்றதையும் காண்கின்றோம். சிறுவர்கள் பற்றி உரிமைகளை அறிந்திராத ஆசிரியர்களும், அதிபர்களும் அதிகம்; காணப்படுகின்றனர். மாணவர்களை எவ்வாறு கையாளுதல் வேண்டும் என்கிற மாணவர்களின் உரிமைகள் பற்றி அறிந்திரா நிலையில் தனது வசதிக்கேற்ப மாணவர்களை கையாளுகின்றனர். இது குறிப்பாக கிராமப்புறங்களில் அதிகமாகவே காணப்படுகின்றது.
மனித உரிமைகள் ஆணைக்குழு
அனைத்து மக்களும் சமவுரிமையுடன் வாழவும், அமைதியாகவும், மத ஒற்றுமையை பேணி நடக்க வேண்டிய நிலையில் மனித உரிகைளின் கண்காணிப்புக்கான ஆணைக்குழுவும் நிறுவப்பட்டு அவை தனி மனிதனது உரிமையை பாதுகாக்கும் தார்மீக கடமையாகக் கொண்டுள்ளன. உரிமைகள் மீறப்படுகின்றபோது அதனைத் தடுத்து நிறுத்தவேண்டிய கடப்பாடுகளையும் இவ்வாணைக்குழு கொண்டுள்ளது. இவ்வாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவினதும், மனித உரிமைகளுக்காக பாடுபடுகின்ற அரசார்பற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புக்கள்; பல்வேறு செயற்திட்டங்களை தீட்டி மக்களுக்கு அறிவூட்டப்பட்டு வந்தாலும் மக்கள் அனைவரையும் சென்றடையவதற்கான திட்டங்களைத் தீட்டி அமுல்படுத்துகின்றபோது அனைவரும் தங்களுக்குள்ள உரிமை, கடமைகளை அறிந்து கொள்வதற்கு வழிவகுத்துவிடும் அல்லவா?
மேலும், இந்நிறுவனங்கள் பாடசாலை மட்டத்தில் சிரேஷ்ட மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கருத்தரங்குகளையும் நடாத்தி வருகின்றன. இருப்பினும் பாடாசாலைகளில் முழுமையானவாறு பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அவை மாணவர்களுக்கு முழுப்பாடமாக கற்பிக்கப்படுகின்றபோது சட்டத்தில் ஒரு தனிமனிதது நிலை, சமுதாயத்தில் தனிதமனிதனது போக்குகள், சுதந்திரமான நிலையைத் தோற்றுவிக்க உதவும் ஆற்றலைப் பெறுவான். போராசிரியர் ஹரல்ட் ஜே. லஸ்க்கி என்பாரின் கூற்றுப்படி “மனிதன் சமூக வாழ்க்கையை செவ்வனே கொண்டு செல்ல நாளாந்தம் தேவையான நிபந்தனைகளே உரிமைகளாகும்” என்று கூறுகிறார். பாடசாலையில் கற்கின்ற ஒரு பிள்ளை நற்பிரஜையாக வாழ்வதற்கான அடிப்படையை கல்விமுறை வழங்குகிறது. அந்த அடிப்படையில் சிறந்த நற்பிரஜைக்கு சமுதாயத்தில் தனக்குள்ள உரிமைகளைப் பெற்று வாழ்வதற்கு மனித உரிமைகளின் அவசியப்பாடு தேiவாயான ஒன்றாகவே அமைந்துள்ளது.
இன்று கல்விக்கான உரிமைகள் பற்றிய மேலான கருத்துக்களின் அடிப்படையில் கட்டாயக் கல்வி வயது வரையறை செய்யப்பட்டு அனைவரும் கல்வி கற்பதற்கான உரிமைகள் வலுப்பெற்றுள்ளன. மனித வாழ்வுக்கு அவசியமான அடிப்படை உரிமைகளில் கல்விக்கான உரிமையும் ஒன்றாகும். இலங்கையின் 1978ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்பில் கல்விக்கான உரிமைகள் பற்றி வெளிப்படையானவாறு எதுவும் கூறப்படாத நிலையில் உயர் நீதிமன்றமானது அரசியல் யாப்பின் 12 (1) என்கிற உறுப்புரையில் பின்வரும் வாசகத்தை நிலை நிறுத்தி கல்விக்கான உரிமையை பேணியுள்ளது. “இச்சட்டத்தின் முன் ஆட்கள் எல்லோரும் சமமானவர்கள். அத்துடன் அவர்கள் சட்டத்தினால் சமமாகப் பாதுகாக்கப்படுவதற்கும் உரித்துடையவர்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், கல்விக்கான உரிமைகள் பற்றிய விடயத்தில் சர்வதேசமட்டத்திலான அமைப்புக்களின் வியாபகத்தன்மை காரணமாக “பாரபட்சம் காட்டாதிருத்தல், கற்பதற்கான உரிமைககள், பாதிக்கப்பட்டோர்(ஊனம், பெண்கள், அகதிகள்), சிறுபான்மையினர், பல்வேறு நிலைகளில் வழங்கவேண்டிய கல்வி, தொழிற்கல்வி, உயர்கல்வி, தொடர்கல்வி மற்றும் வளர்ந்தோர் கல்வி, ஆசிரியர் பெற்றோர்களின் உரிமைகள், பாடவிதானம்" போன்ற பல்வேறு விடயங்களின் ஊடாக கல்விக்கான உரிமைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் மாணவர்களுக்கான மற்றும் முழு சமுதாயத்திற்கான மனித உரிமைகளை நிலைநிறுத்துவதன் மூலம் கல்விக்கான உரிமைகள் உறுதிப்படுத்தப்படுகிறன.
இன்று நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளன. சுற்றாடலை அசிங்கப்படுத்துவோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றனர். இது சமுதாயத்தின் கண்ணோட்டத்தில் மனித உரிமை மீறலாகக் கொள்ளப்படுகின்றது. மற்றவருக்கு நோயை ஏற்படுத்தும் சூழ்நிலையைத் தோற்றுவித்தவர் என்ற அடிப்படையில் இம்மீறல்கள் அமைந்துள்ளன. இன்னும் வீதிகளில் நாளாந்தம் நூற்றுக்கணக்கான வீதிவிபத்துக்கள் ஏற்படுகி;ன்றன. வீதி ஒழுங்குகள் பற்றிய சரிவரத் தெரியாதவர்கள் வாகனங்களைப் பயன்படுத்துவதும், வீதியில் நின்று பேசிக்கொண்டிருப்பதும், வீதியின் ஒழுங்கு முறைகளை தெரிந்து கொள்ளாததுமே இவ்வாறான விபத்துக்களுக்கு காரணம் கூறப்படுகிறது. வீதி ஒழுங்குகளை மதித்து நடக்கின்ற மக்களை உருவாக்குவதற்கு உரிமைகள் பற்றிய கற்கைகள், விழிப்புணர்வுகள் அவசியமானதாகும்.
மேலும், மனித உரிமைகள் தொடர்பான கல்விமூலம் சமுதாயத்தில் சமாதானம், இன ஐக்கியம், இன ஒற்றுமை, சிறந்த ஜனநாயகம் மற்றும் அரசின நிர்வாக நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், பொருளாதார ரீதியில் நாட்டை முன்னேற்றும் நடவடிக்கைகளுக்கு உதவுதல், மக்களுக்கு அரசு செய்யும் கடப்பாடுகள், மக்கள் அரசுக்கும் நாட்டுக்கும் செய்யவேண்டிய கடப்பாடுகளை அறிந்து கொள்வதற்கும் அதன்படி நடந்து கொள்வதற்கும் மனித உரிமைகள் பற்றிய போதிய விளக்கங்கள் கட்டாயம் அவசியமாகின்றது என்பதையே சுட்டிக்காட்டுகின்றன. அதுமட்டுமன்றி தகவல்களை அறிந்து கொள்வதற்கான உரிமைகள் பொதுவாகவே இன்று அனைவருக்கும் தேவையான ஒன்றாக காணப்படுகின்றது. அந்தவகையில் அடிப்படையான உரிமைகள் என்கிற விடயத்தில் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள விடயங்களையும் அறிவதன் மூலம் மனித உரிமைகளின் முழுவடிவத்தையும் பிரயோசனப்படுத்தக் கூடியதாய் இருக்கும்.
இதன்படி பார்க்கின்றபோது உறுப்புரை 10இல் சிந்தனை செய்யும் சுதந்திரம். மனசாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம் மதசுதந்திரம் என்பனவும், உறுப்புரை 11இல் சித்திரவதைக்குள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம், உறுப்புரை 12இல் சமத்துவத்துக்கான உரிமை அதாவது சட்டத்தின் முன் சமமான தன்மைக்கான உரிமையும், சட்டத்தின் முன் பாதுகாப்பிற்கான உரிமையும், உறுப்புரை 13இல் எதேச்சையாகக்கைது செய்யப்படுதலும் தடுத்துவைக்கப்படாமலும் அத்துடன் தண்டிக்கப்படாமலும் இருப்பதற்கான சுதந்திரம். கடந்தகாலத்தை உள்ளடக்கும் பயனுடையனவான தண்டனைச் சட்டவாக்கங்களைத் தடைசெய்தலும், உறுப்புரை 14இல் பேச்சுச் சுதந்திரம். ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம். ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம். முயற்சி செய்வதற்கான சுதந்திரம். தடையின்றி நடமாடுவதற்கான சுதந்திரம் முதலியனபற்றியும் எடுத்துக் கூறுகின்றன.
அத்துடன் உறுப்புரை 15இல் அடிப்படைய உரிமைகள் மீதான மட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளன. இதன்படி இன சமூக, மத. சுமூகவாழ்வு. நாட்டின் அமைதி, பாதுகாப்பு போன்றன தொடர்பில் இத்தகைய மட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. உறுப்புரை 126இல் அடிப்படை உரிமைகள் பற்றிய நியாயாதிக்கமும் பிரயோகித்தலும் பற்றியும் கூறுகின்றது. எனவேதான் சமூதாயத்தின் முக்கிய கூறுகளாக காணப்படுகின்ற சமூகப்பிராணியான மனிதன் தனது அன்றாட வாழ்வை சீராக ஓட்டிச் செல்வதற்கு கல்வி மிகமிக அவசியமாகம்.
இக்கல்வியைப் பெறுவதற்கான உரிமைகளைப்பற்றியும், சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான உரிமைகள் போன்றவற்றினை கற்கின்றபோது எதிர்காலத்தின் சிற்பிகளான இன்றைய மாணவர் சமுதாயத்திடம்; நாட்டுப்பற்று, சமுதாயப்பற்று, இனரீதியான பற்றின் காரணமாக அமைதியான ஒரு சமுதாயக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு மனித உரிமைகள் பற்றிய கற்கைகள் இன்றைய காலகட்டத்தில் அவசியம் உணரப்பட்டுள்ளன. அதனை நிவர்த்திக்கும் வகையில் பாடசாலைகள் மட்டத்தில் முழுவடித்திலான பாடத்திட்டங்களை தயார்செய்து உரிமைகள்பற்றிய தெளிவை பெறுவதற்கு உதவி நிற்பது அரசினது கடமையாகும். எனவே, மனித உரிமைகள் வருடந்தோறும் நினைவுகூறப்படுவதுடன் நின்றுவிடாமல் அதன் பயன் முழு சமுதாயத்தையும் அடைந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை சமுதாய ஆர்வலர்களும், உரிமைகளுக்காக குரல்கொடுப்போரும் தனக்குள்ள சக்திகளைப் பயன்படுத்தி ஆர்வத்துடன் நிறைவேற்ற வேண்டும் என்பதே நாம் எதிர்பார்க்கின்ற விடயமாகும்.