Published On: Tuesday, December 27, 2011
காய்ச்சலையும் பொருட்படுத்தாது அன்னா உண்ணாவிரதம்

ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா வேண்டி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை துவங்கினார். அவர் இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு உண்ணாவிரதம் இருக்கிறார். காய்ச்சல் அடித்து வருகிற போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் அவர் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதன் மீது இன்று விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் அரசு கொண்டு வந்துள்ள லோக்பால் மசோதாவால் ஊழலை ஒழிக்க முடியாது என்று அன்னா தெரிவித்துள்ளார். எனவே, வலுவான லோக்பால் மசோதா வேண்டி அவர் மும்பை எம்எம்ஆர்டிஏ மைதானத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு உண்ணாவிரதம் இருக்கிறார்.
உண்ணாவிரதத்தை துவங்கும் முன்பு அவர் தனது குழுவினருடன் ஜுஹூ கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு சென்று மரியாதை செலுத்தினார். முன்னதாக ஜுஹூ கடற்கரைக்கு செல்லும்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த சம்தா தள் என்னும் கட்சி அன்னா நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகக் கூறி அவருக்கு கருப்புக் கொடி காட்டியது. பகல் 12.35 மணிக்கு அன்னா எம்எம்ஆர்டிஏ மைதானத்தை அடைந்து உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கியுள்ளார்.
இதற்கிடையே கடந்த 3 நாட்களாக் அன்னா விஷக்காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். அதனால் அவர் பலவீனமாக இருக்கின்றபோதிலும் அறிவித்தவாறு உண்ணாவிரதத்தை துவங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து வரும் 30ம் தேதி முதல் 1ம் தேதி வரை சிறை நிரப்பும் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார். இதற்காக நாடு முழுவதும் சுமார் 1.40 லட்சத்திற்கும் அதிகமானோர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.