Published On: Saturday, January 14, 2012
கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி இல்லை- அப்துல் கலாம்

தொலைதூர கிராமங்களுக்கும், பழங்குடியினர் பகுதிகளுக்கும் போக்குவரத்து வசதி இல்லாததுதான், அங்குள்ள மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது’ என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார். ‘‘டார்கெட் 3 பில்லியன்: புரா: ‘புதுமையான நிரந்தர வளர்ச்சிக்கு தீர்வு’ என்ற தலைப்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும், ஸ்ரீஜன் பால் சிங்கும் இணைந்து புதிய புத்தகத்தை எழுதியுள்ளனர். அதில், அப்துல் கலாம் கூறி இருப்பதாவது:
உலகிலேயே கிராம மக்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா. இங்கு 75 கோடி பேர் கிராமங்களில் வசிக்கின்றனர். இவர்களுக்கு மானியம் அளிக்காமல், தொழில்துறை மூலம் வசதிகள் செய்தி கொடுக்க வேண்டும். நகர்ப்புற வசதிகளை கிராமங்களில் செய்தால், கிராம மக்களின் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும். பிரேசில் நாட்டில் பேபியோ லூயிஸ் டி ஒலிவெரா ரோசா என்பவர் பால்மரஸ் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி செய்து கொடுத்து, சிறந்த வேளாண்மை முறைகளையும் கற்றுக் கொடுத்தார். இதனால் அந்த பகுதி செழிப்படைந்து மக்கள் நகரங்களுக்கு இடம் பெயர்வது தடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே புறநகர் பகுதியில் கடந்த 1990ம் ஆண்டு 430 ஏக்கர் பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா உட்பட எல்லா வசதிகளும் செய்யப்பட்டு மகர்பட்டா நகரம் உருவாக்கப்பட்டது. அங்கு தற்போது 35 ஆயிரம் வீடுகள் உள்ளன. 65 ஆயிரம் பேர் வேலைக்கு செல்கின்றனர். 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்கு பின் நிகோபார் தீவுக்கு சென்றேன்.
கடல் வளத்தை பொருளாதார முன்னேற்றத்துக்கு ஏன் பயன்படுத்தவில்லை என அங்குள்ள மக்களிடம் கேட்டேன். உள்ளூர் தேவை போக கூடுதலாக கிடைக்கும் மீன்களை விற்கும் வழிமுறை தெரியவில்லை என்றனர். இதுதான் அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக உள்ளது.
இந்தியாவின் இதயம் கிராமங்களில் இருக்கிறது. ஒரு டாக்டர் தனது பரிசோதனையை இதயத்திலிருந்து தொடங்குவதுபோல, புதிய செயல் திட்டங்களை இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்களில் இருந்து தொடங்க வேண்டும். நாட்டில் பெரும்பாலான தொலைதூர கிராமங்களுக்கும், பழங்குடியினர் பகுதிகளுக்கும் போக்குவரத்து வசதி இல்லாததுதான், அங்குள்ள மக்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. இவ்வாறு புத்தகத்தில் கலாம் கூறியுள்ளார்.