Published On: Saturday, January 14, 2012
ஏழு ஆண்டுகளுக்கு பின் ஒரே பிரிவில் ரோஜர் பெடரர், நடால்

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், ஏழு ஆண்டுகளுக்கு பின் ஒரே பிரிவில் ரோஜர் பெடரர், நடால் இடம் பெற்றுள்ளனர்.
கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 16ம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் துவங்குகிறது.
இதற்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கும் வீரர்கள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, முதல் சுற்றில் விளையாட உள்ளனர். முதல் பிரிவில் நடப்பு சாம்பியன் மற்றும் "நம்பர்-1' வீரர் செர்பியாவின் ஜோகோவிச் இடம் பெற்றுள்ளார். இரண்டாவது பிரிவில் முர்ரே இடம் பெற்றுள்ளார். மூன்றாவது மற்றும் நான்காவது பிரிவில் 16 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயின் வீரர் நடால் இடம் பெற்றுள்ளனர்.
இதற்கு முன் கடந்த 2005ம் ஆண்டு நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் பெடரர், நடால் இருவரும் ஒரே பிரிவில் விளையாடினர். ஏழு ஆண்டுகள் பின் இவர்கள் இருவரும் ஒரே பிரிவில் விளையாட உள்ளனர்.
அரையிறுதி வாய்ப்பு:
ஒரு வேளை "டாப்-4' வீரர்களும் காலிறுதியில் வெற்றி பெறும் பட்சத்தில், அரையிறுதியில் ஜோகோவிச், முர்ரேவையும், நடால், பெடரரையும் எதிர் கொள்வர்.
கடந்த ஆண்டு (2011) மட்டும், மூன்று கிராண்ட்ஸ்லாம், ஐந்து மாஸ்டர் பட்டங்களை வென்றுள்ள செர்பியாவின் ஜோகோவிச் முதல் சுற்றில், இத்தாலியின் லாரன்சியை சந்திக்க உள்ளார்.
இது குறித்து ஜோகோவிச் கூறுகையில்,""கடந்த ஆறு வருடங்களாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்று வருகிறேன். போட்டி துவங்குவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன் தான் வருவேன். ஆனால் இந்த முறை ஒரு வாரத்திற்கு முன்பாகவே வந்து விட்டேன். இது இங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற உதவியாக இருக்கும்,'' என்றார்.
கடின சுற்றில் சானியா
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் முதல் சுற்றில், இந்திய வீராங்கனை சானியா மிர்சா (105வது இடம்), தரவரிசைப் பட்டியலில் 48வது இடத்தில் இருக்கும் பல்கேரியாவின் பிரோன்கோவாவை எதிர் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஜூனியர் பிரிவில் சென்னை வீரர்
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின், ஜூனியர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாட, சென்னையை சேர்ந்த ராம்குமார் ராமநாதன் "வைல்டு கார்டு' முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.