Published On: Tuesday, January 17, 2012
அரச நிறுவனங்களில் இன்று டெங்கு சோதனைப் பணிகள்

டெங்கு நோய் வேகமாக பரவுவதைத் தடுப்பதற்காக நேற்று முதல் நாடு பூராவும் டெங்கு தடுப்பு வாரம் ஆரம்பிக்கப்பட்டது. டெங்கு தடுப்பு வாரத்தையொட்டி நேற்று மேல் மாகாணத்திலுள்ள சகல பாடசாலை வளாகங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு பாடசாலைகளை சுத்திகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது.
இன்று சகல அரச நிறுவனங்களையும் பரிசோதனைக்குட்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. டெங்கு ஒழிப்பு வாரம் நேற்று முதல் 22ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படுகிறது. இதனையொட்டி எதுவித வைபவங்களும் நடத்த வேண்டாமென சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
2011 டிசம்பர் மாதத்தில் 4000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் டெங்கு நோயாளர்கள் தொகை அதி கரித்துள்ளது. இந்நிலையில் இந்த வருட ஆரம்ப மாதங்களில் டெங்கு நோய் தலை தூக்கும் அச்சுறுத்தல் காணப்படுவதாக அமைச்சு அறிவித்துள்ளது. எனவே டெங்கு ஒழிப்பு தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த டெங்கு ஒழிப்பு வாரம் நடத்தப்படுகிறது.
கடந்த வருடத்தில் டெங்கு நோயினால் இறந்தோர் தொகை 2010 உடன் ஒப் பிடுகையில் 20 வீத அதிகரிப்பாகும். இந்த வருட முதலிரு வாரங்களில் மாத்திரம் டெங்கு நோயினால் 7 பேர் இறந்ததோடு 674 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்ட தாக சுகாதார அமைச்சு கூறியது. கடந்த வருடம் அடையாளங் காணப்பட்ட டெங்கு நோயாளர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்திலிருந்தே கண்டுபிடிக் கப்பட்டனர். இதனால் மேல்மாகாணம் குறித்து கூடுதல் கவனம் செலுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளது.
தொடர்மழை மற்றும் நீண்ட விடுமுறை காரணமாக பாடசாலை வளாகங்களில் டெங்கு நுளம்புகள் பரவும் இடங்கள் அதிகம் காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன்படி மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் பரி சோதனைக்குட்படுத்தப்பட்டன.