Published On: Monday, January 23, 2012
காற்சட்டை அணிவதற்கு பெண்கள் ஆர்ப்பாட்டம்

காற்சட்டை அணிவதற்கு உரிமை வேண்டும் என்று கோரி மலாவியின் பிளண்டயர் நகரில் சுமார் மூவாயிரம் பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். தெருவில் உள்ள கடைக்காரர்கள் காற்சட்டைகள் அல்லது குட்டைப் பாவாடைகள் அணிந்து வரும் பெண்களின் ஆடைகளைக் களைந்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதன் பின்னணியில் இந்த போராட்டம் நடந்திருக்கிறது.பெண்களுக்கு அவர்களுக்குரிய உடைகளை தாமே தேர்வு செய்யும் உரிமை இருக்கிறது என்று மலாவியின் அதிபரான பிங்கு வா முத்தரிக்கா வியாழனன்று பிரகடனம் செய்திருந்தார்.
ஹஸ்டிங்ஸ் பண்டா அவர்கள் அதிபராக இருந்த காலத்தில் பெண்கள் காற்சட்டைகளை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் 1994இல் அந்தச் சட்டம் நீக்கப்பட்டது. ஆபிரிக்காவைப் பொறுத்தவரை பொருத்தமற்ற ஆடைகளை அணிகிறார்கள் என்று கூறி, பெண்களுக்கு எதிராக வன்செயல்கள் இடம்பெறுவது, கடுமையான அழுத்தங்கள் அல்லது பொருளாதார சீர்குலைவு ஏற்படும் காலகட்டங்களில் அதிகரித்து காணப்பட்டுவந்துள்ளது.
உதாரணமாக கென்யாவில் மூன்று வருடங்களுக்கு முன்னதாக தேர்தலுக்கு பின்னர் நடந்த வன்செயல்களின் போது கிக்கியூ பழங்குடியினரின் மதக்குழுவினரான முங்கிகிகள் தமது கோபங்களை பெண்களின் மீதே திருப்பியிருந்தனர். காற்சட்டைகளுடன் நடமாடுபவர்களை தாக்கிய அவர்கள், அவர்களை கட்டாயமாக நீண்ட ஆடைகளை அல்லது பாவாடைகளை அணியச் செய்தனர்.
அத்தகைய ஆடைகள் கிக்கியூ கலாச்சாரத்துக்கு எதிரானது என்று அவர்கள் கூறினார்கள். சிம்பாப்வேயில் பொருளாதார நெருக்கடி காலத்தின் போது, ஜீன்ஸ் பாண்டுகளை அணிந்த பெண்கள் மீது குற்றக்குழுக்கள் தாக்குதல் நடத்தின. ஜீன்ஸ் போன்ற ஆடைகள் மேற்கத்தைய கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக அவர்கள் கூறினார்கள்.
தென்னாபிரிக்காவில், 2007இல் டேர்பனுக்கு அருகே உள்ள ஒரு கிராமிய நகரியத்தில் உள்ள இளைஞர்கள், அங்கிருக்கும் பெண்கள் எல்லாரும் பாவாடைகள் மற்ற ஆடைகளை அணிய வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், காற்சட்டை அணிந்த ஒரு பெண்ணை தாக்கி, அவரது காற்சட்டையை களைந்து, அவரை நிர்வாணமாக்கி, அவருடைய குடிசையை எரித்தனர். பொதுவாகவே பழமைவாத சிந்தனைகளைக் கொண்டதாகக் கருதப்படும் சர்வாதிகார ஆட்சிகளின் போது பெண்கள் துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள்.
உதாரணமாக, நைஜீரியாவில் இராணுவ ஆட்சிக்காலத்தின்போது, கோர்ட்டு சூட்டு அணிந்த பெண்கள் கூட்டங்களுக்கு சென்ற வேளைகளில் தாக்கப்பட்டார்கள். அதேபோல, உகண்டாவில் இராணுவ தலைவரான இடி அமீன் அவர்கள், பெண்கள் குட்டைப் பாவாடைகள் அணிவதற்கு தடை விதித்ததுடன், அவர்கள் நீண்ட ஆடைகளை அல்லது மக்சிகள் எனப்படுகின்ற கழுத்து முதல் பாதம் வரை மறைக்கின்ற ஆடைகளை அணிய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இத்தகைய அடக்குமுறைகள் ஏதோ ஒரு மதத்துக்கு அல்லது கலாச்சாரத்துக்கு மாத்திரம் உரியது என்று தோன்றவில்லை. 2004 இல் கென்யாவில் பெரும்பாலும் முஸ்லிம்கள் வாழும் துறைமுக நகரான மொம்பசாவில், குட்டைப் பாவாடைகள் மற்றும் ஹொட்பாண்டுகள் எனப்படுகின்ற பின்புறம் தெரியும் வகையிலான காற்சட்டைகளை பெண்கள் அணியக்கூடாது என்று தெருக்களில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அப்படியாக அணிபவர்கள் நடுத்தெருவில் வைத்து ஆடை களையப்படுவார்கள் என்றும் அந்த பிரசுரங்கள் மிரட்டியிருந்தன.