Published On: Monday, January 23, 2012
அப்துல் கலாம் இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், அணுசக்தி விஞ்ஞானியுமான அப்துல் கலாம் இன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். முற்பகல் விமானம் மூலம் யாழ்ப்பாணம் சென்றடையும் இவர் முற்பகல் 11.45 மணிமுதல் 12.45 மணிவரை யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். இங்கு ‘மனங்களின் ஒற்றுமை’ எனும் தலைப்பில் இவர் சிறப்புச் சொற்பொழிவாற்றவுள்ளார்.
அதன் பின்னர் பிற்பகல் 12.45 மணிக்கு யாழ் டில்கோ ஹோட்டலில் மதியபோசன விருந்துப சாரத்தில் கலந்து கொள்ளவிருக்கும் அவர், குறிப்பிடப்பட்ட சிலருடன் உத்தியோகபூர்வமற்ற சந்திப்பிலும் கலந்துகொள்ளவுள்ளார். இதனைத் தொடர்ந்து பிற்பகல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பிரார்த்தனை மண்டபத்தின் பெயர்ப்பலகையைத் திரைநீக்கம் செய்து வைக்க விருப் பதுடன், அப்பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடவுள்ளார். அதன் பின்னர் ‘அறிவுச் சமூகத்தின் பிறப்பு’ எனும் தலைப்பில் அங்கு சிறப்புரையாற்றவுள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள துணைத்தூதரகம் அறி வித்துள்ளது.