Published On: Monday, January 23, 2012
சிறுநீரக கோளாறா? இதைப் படிங்க!

*மனிதனின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உடலில் இருந்து பெரும்பான்மையான கழிவுகளை வெளியேற்றும் வேலையை சிறுநீரகங்கள் செய்கின்றன. ஏதாவது காரணத்தால் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டு வேலையை செய்ய முடியாமல் பழுதாகி போனால், உடல் கழிவு நீர் தேங்கிய குட்டை போல் மாறிவிடும். அடுக்கடுக்கான நோய்கள் நம்மைத் தாக்க துவங்கும். இதனால் சிறுநீரகங்கள் பழுதுபடாமல் பாதுகாப்பது மிகவும் முக்கியம் என்கிறார் டாக்டர் சசிக்குமார். அவர் கூறியதாவது:
*சிறுநீரகம் பழுதடைந்து விட்டால் வெளியேற்றப்படாத கழிவு நீர் உடலின் கால், முகம், கை மட்டுமில்லாமல் உள் உறுப்புகளான நுரையீரல், இதயம் போன்றவற்றை சுற்றியுள்ள சவ்வுகளிலும் தேங்கத் துவங்கும். இதனால் மூச்சுவிடுவதில் சிரமம், நடக்க முடியாத நிலை, அமைதியின்மை போன்ற பிரச்னைகள் வரும்.
*அடுத்து மூளையில் பாதிப்பு, ரத்தத்தில் அதிக உப்பு சேர்வதால் ‘யுரீமிக் கோமாÕ என்ற நினைவிழக்கும் நிலை ஆகியவை ஏற்படும். சிறுநீரகம் பழுதுபட துவங்கியதும் கை, கால் வீக்கம், கட்டுப்படாத உயர் ரத்தஅழுத்தம், மூச்சுவாங்குதல், தலைவலி, உடல் சோர்வுடன் குளிர் காய்ச்சல், சிலருக்கு வாந்தி மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும்.
*இது போன்ற பிரச்னை உள்ளவர்கள் உடனடியாக ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். சர்க்கரை நோயாளிகளில் முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு இந்த பாதிப்பு வரும் வாய்ப்பு அதிகம். உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ள நோயாளிகள், வலி நிவாரணி மாத்திரையை அடிக்கடி பயன்படுத்துபவர்கள், கெமிக்கல் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், மருத்துவரின் ஆலோசனை இன்றி மருந்து எடுத்துக் கொள்பவர்கள், குறைவாக தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், அடிக்கடி உண்ணாவிரதம் இருப்பவர்களை சிறுநீரகப் பிரச்னை வெகு எளிதில் தாக்குகிறது.
*இதற்கு எந்த சிகிச்சையும் மேற்கொள்ளாத பட்சத்தில் ரத்தத்தில் உப்பின் அளவு அதிகரிக்கும். ரத்தத்தில் உப்பின் அளவு 7 மில்லி கிராமைவிட அதிகரிக்கும்போது அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுகிறது. சிறுநீரகம் செயல் இழந்து விட்டால் ரத்தம் சுத்திகரிக்கப்படாமல் அசுத்தமாக இருக்கும்.
*தேவையற்ற நீரின் அளவு ரத்தத்தில் அதிகரிக்கும். இந்நிலையில் ரத்தத்தை செயற்கை முறையில் சுத்திகரிக்கும் டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுகிறது. ஒருமுறை டயாலிசிஸ் செய்தால் 2 நாட்கள் மட்டுமே சுத்தமான ரத்தம் நீடிக்கும்.
*இதனால் வாரத்தில் இரண்டு நாட்கள் டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இதற்கு மாற்று வழியே கிடையாது என்பது மறுக்க முடியாத உண்மை. இதனால் சிறுநீரகம் கெட்ட பின் மருத்துவம் செய்வதைவிட கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். ஆரம்ப நிலையில் கண்டறிந்து மருத்துவம் செய்தால் பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்கலாம்.