Published On: Monday, January 23, 2012
முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் விடுவிப்பு

புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்ற மற்றுமொரு தொகுதி முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் வைத்து உறவினரிடம் கையளிக்கப்பட்டனர். வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்ற 11 பெண்ளும், 62 ஆண்களுமாக மொத்தம் 73 பேர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர்.
ஏற்கனவே வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் நடைபெற்ற இது தொடர்பான வைபவங்களை அடுத்து, கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற முதலாவது வைபவம் இதுவாகும். சரணடைந்த சுமார் 12 000 முன்னாள் விடுதலைப் புலிகளில் இதுவரை 33 வைபவங்களில் 10,375 பேர் சமூகமயமாக்கல் திட்டத்தின்கீழ் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு இந்த நிகழ்வில் உரையாற்றியபோது தெரிவித்தார்.
இவர்களைத் தவிர நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆயிரம் பேர் புனர்வாழ்வு பெற்று வருவதாகவும் தெரிவித்த அவர், மேலும் 500 பேர் புனர்வாழ்வு பெறவிருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரஸ்ரீ கஜதீர தனது உரையில் புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இளைஞர் யுவதிகளின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் மட்டுமல்ல அவர்களின் அரசியல் அபிலாசாசைகளுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றார்.