Published On: Wednesday, January 25, 2012
1000 ரூபா கடனைத் திருப்பிக் கேட்டதற்கு படுகொலை

புதுக்கோட்டை அருகே கடனாகக் கொடுத்த 1000 ரூபாயைத் திருப்பிக் கேட்டதற்காக அண்ணன், தம்பியை உளியால் குத்தி படுகொலை செய்த 3 பேரை பொலிஸார் கைதுசெய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன். அவரது அண்ணன் நீலகண்டன். அவர்கள் இருவரும் சேர்ந்து அப்பகுதியில் தச்சுவேலை செய்துவந்த கார்த்திக் என்பவருக்கு கடனாக 1000 ரூபா கொடுத்துள்ளனர். ஆனால் இந்த பணத்தை கார்த்திக் திருப்பிக் கொடுக்கவில்லை.
இதனால் அய்யப்பன் தனது சித்தப்பா மகன் ரமேஷ் (26) என்பவருடன் சென்று கார்த்திக்கிடம் கடனை திருப்பிக் கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் தனது நண்பர்கள் மணிகண்டன், சண்முகம் ஆகியோருடன் சேர்ந்து அய்யப்பனையும், ரமேஷையும் உளியால் குத்தினர். இதில் மார்பு, வயிறு என பல இடங்களில் குத்துப்பட்ட அய்யப்பனும், ரமேஷும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த விராலிமலை பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் இது குறித்து வழக்குப் பதிவுசெய்து கார்த்திக், மணிகண்டன், சண்முகம் ஆகிய 3 பேரையும் கைதுசெய்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.