Published On: Wednesday, January 25, 2012
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாரிய நகை கடத்தல் முறியடிப்பு

பயணப்பொதி மற்றும் முழங்காலில் கட்டி மறைத்து கொண்டுவந்த சுமார் ஒரு கோடியே 25 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினர் நேற்று கைப்பற்றியுள்ளனர். நேற்று அதிகாலை 3.35க்கு சார்ஜாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய ஏயார் அரேபியாவுக்குச் சொந்தமான ஜி-9505 ரக விமானத்தில் வந்த மட்டக்களப்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடமிருந்தே இந் நகைகள் மீட்கப்பட்டதாக விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.
விமானத்திலிருந்து இறங்கிய நபர் தமது பயணப் பொதிகளுடன் பயணிகள் வெளியேறும் சிறப்பு வழிப்பாதையூடாக வெளியேறிச் சென்றுகொண்டிருந்தபோது சந்தேகத்தின் பேரில் அவரை சுங்கப் பிரிவினர் சோதனையிட்டுள்ளனர். அவரது பயணப் பொதியிலிருந்து ஒரு தொகை நகைகள் முதலில் கண்டெடுக்கப்பட்டன. அதன் பின்னர் குறித்த நபரின் காற்சட்டைப் பைக்குள் மற்றுமொரு தொகை நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் சந்தேக நபர் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது முழங்கால் பாதுகாப்புக்காக பயன்படுத்தும் கவச அங்கிக்குள் நகைகளை போட்டு காலில் அணிந்திருந்த நிலையிலும் நகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மோதிரங்கள், வளையல்கள், கைச்சங்கிலிகள், தங்கச் சங்கிலிகள் உட்பட சுமார் 2126 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டதாக சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் டி.டி.எஸ்.டி. மைக்கல் மற்றும் உதவி பணிப்பாளர் எம்.ஏ. உதயகாமினி ஆகியோர் தெரிவித்தனர். குறித்த நபர் பல தடவைகள் வெளிநாட்டுக்கு சென்று வந்துள்ளதாகவும் சுங்கத் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.