Published On: Wednesday, January 25, 2012
மகசின் சிறைச்சாலை கலவரம் குறித்து ஆராய மூவர் கொண்ட குழு

வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்ற கலவரம் தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சர் சந்திரசிறி கஜதீர மூவர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார். நேற்றைய சம்பவத்தின் பின்னர் அமைச்சருக்கும், விசேட குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என பணிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, கிடைத்துள்ள சட்ட அதிகாரத்தை உயரிய வகையில் பயன்படுத்த வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதனூடாக சிறைச்சாலை நிர்வாகத்தை முறையாக கொண்டு செல்ல முடியும் என அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். இதேவேளை, மகசின் சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக கைதிகள் அனைவரினதும், தகவல் அடங்கிய ஆவணங்கள் முற்றாக தீக்கிரையாகி நாசமானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆவணங்கள் இருந்த கட்டிடத்திற்கும், அருகில் இருந்த களஞ்சியத்திற்கும் கைதிகள் தீவைத்தனர். இதனிடையே, மகசின் சிறைச்சாலை சம்பவம் குறித்து விசேட காவல்துறை குழுக்கள் சில தமது விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.