Published On: Sunday, January 22, 2012
இணையத்தளங்களுக்கு தணிக்கை இல்லை

இணையத்தள தகவல்களை தணிக்கை செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. இணையத்தள தகவல்களுக்கு கட்டுப்பாடு வேண்டும் என்ற கருத்து மீதான விவாதங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், அரசு இந்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
சமயங்களுக்கு இடையே வெறுப்பை தூண்டும் வகையிலும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும் தகவல்களை வெளியிட்டதாக கூறி கூகுள், யாஹூ, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட 21 இணையதள நிறுவனங்கள் மீது, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்திருந்த்து. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விரும்பத்தகாத தகவல்களைத் தரும் இணையதள நிறுவனங்கள் சீனாவை போல இங்கும் தடைசெய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் இணைய தளத்தில் வெளியாகும் தகவல்களை தணிக்கை செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சந்திரசேகர் கூறியுள்ளார். ஒவ்வொரு நிறுவனமும் அந்தந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இயங்கினாலே போதுமானது. எனினும், சட்டதிட்டங்களை பின்பற்றுவதை உறுதிப்படுத்த சில நடைமுறைகளை உருவாக்குவது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.