Published On: Friday, January 13, 2012
இந்தியா முதல் இன்னிங்ஸில் 161 ரன்களுக்கு சுருண்டது

இன்று பெர்த்தில் தொடங்கிய இந்தியா, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் படு மோசமாக விளையாடி 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பெர்த்தில் இன்று தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற அவுஸ்திரேலிய இந்தியாவை பேட் செய்யப் பணித்தது. களமிறங்கிய இந்தியா அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. வழக்கம் போல துவக்க ஆட்டக்காரர்களாக கம்பிர், ஷேவாக் களமிறங்கினார்கள்.
ஆனால், ஆட்டத்தின் 4வது ஓவரில் ஷேவாக் ரன் கணக்கை துவக்காமலேயே களத்தில் இருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து சிறிது நேரத்தில் டிராவிட் 9 ரன்களில் வெளியேறினார். 100வது சதம் அடிக்க முடியாமல் பல மாதங்களாக தவித்து வரும் சச்சின் இந்த முறை 15 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அவரை தொடர்ந்து சற்றுநேரம் நிலை நின்ற கம்பீர் 31 ரன்களில் வெளியேறினார். நீண்டநேரம் களத்தில் இருந்து ஆறுதல் அளித்த விராத் கோஹ்லி 44 ரன்களுக்கு அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
அவரை தொடர்ந்து லட்சுமன் 31 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர் டோணி (12) பொறுப்புடன் விளையாடவில்லை. வினய் குமார் (5), ஜாகிர்கான்(2), இஷாந்த் சர்மா(3), உமேஷ் யாதவ் (4) என்று வரிசையாக 9 ரன்கள் இடைவெளியில் 4 விக்கெட்கள் சரிந்தன. ஆஸ்திரேலியா தரப்பில் பென்ஹில்பென்ஹஸ் 4 விக்கெட்களும், பீட்டர் சிடில் 3 விக்கெட்களும், மிட்செல் ஸ்டார்ச் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். அவுஸ்திரேலிய தனது முதல் இன்னிங்சை அதிரடியாகத் தொடங்கியது.