Published On: Friday, January 13, 2012
இந்தியா &அவுஸ்திரேலிய அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி

இந்தியா &அவுஸ்திரேலிய அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி, பெர்த் ‘வாகா’ மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
அவுஸ்திரேலிய சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்டிலும் அபாரமாக வென்று ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்க, 3வது டெஸ்ட் இன்று தொடங்குகிறது.
உலகின் வலுவான பேட்டிங் வரிசை என்று பெயர் பெற்ற இந்திய அணி, வெளிநாட்டு மைதானங்களில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து ஏமாற்றி வருகிறது. இங்கிலாந்து தொடரில் 4&0 என தோற்ற இந்தியா, இப்போது ஆஸி. மண்ணிலும் தொடர்ச்சியாக 2 டெஸ்டில் தோற்று பின்தங்கி உள்ளது. கம்பீர், சேவக் ஜோடி சிறப்பான தொடக்கத்தை தர முடியாமல் தவிப்பதும் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. சச்சின் கணிசமாக ரன் எடுத்தாலும், 100வது சர்வதேச சதத்தை எட்டும் எதிர்பார்ப்பால் கூடுதல் நெருக்கடியுடன் விளையாடி வருகிறார். லஷ்மண், கோஹ்லி, டோனி ஆட்டம் நடுவரிசையில் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த ஆண்டு அபாரமாக விளையாடிய டிராவிட்டும் இப்போது தடுமாறுவது அணியை இக்கட்டில் ஆழ்த்தியுள்ளது.
பெர்த் டெஸ்டில் கோஹ்லிக்கு பதிலாக ரோகித் ஷர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். அஷ்வினுக்கு பதிலாக ஓஜா அல்லது கூடுதலாக இன்னும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் சேர்க்கப்படவும் வாய்ப்புள்ளது. அதிவேகமான பெர்த் ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் மிகப் பெரிய சவாலை எதிர்நோக்கி உள்ளனர்.
ஆஸி. அணியில் காயம் அடைந்துள்ள பேட்டின்சனுக்கு பதிலாக மிட்செல் ஸ்டார்க் இடம் பெறலாம். ஸ்பின்னர் லியான் நீக்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸ் சேர்க்கப்படும் வாய்ப்பும் உள்ளது. இந்த போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள இந்தியாவும், தொடரை கைப்பற்ற ஆஸ்திரேலியாவும் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. போட்டி இலங்கை நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்குகிறது.