Published On: Sunday, January 22, 2012
முத்தக்காட்சியில் மூக்குடன் மூக்கு இடிக்கவில்லை- விஜய்

நடிகை இலியானாவுடன் முத்தக்காட்சியில் நடித்தபோது, மூக்குடன் மூக்கு இடிக்க வில்லை'' என்று நடிகர் விஜய் கூறினார்.
ஷங்கர் டைரக்ஷனில், விஜய்-ஜீவா-ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று பேரும் இணைந்து நடித்து பொங்கல் வெளியீடாக வந்த படம், `நண்பன்.' இந்த படத்தில், விஜய் ஜோடியாக இலியானா நடித்து இருக்கிறார். படத்தில் விஜய்யும், இலியானாவும் மூக்குடன் மூக்கு இடிக்காமல், உதட்டில் முத்தம் கொடுக்கிற காட்சி இடம்பெற்று இருக்கிறது.
விஜய் சென்னையில் நேற்று பேட்டி அளித்தபோது இதுபற்றி கேட்கப்பட்டது. நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு விஜய் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:-`நண்பன்' படத்தில் இலியானாவுடன் முத்தக்காட்சியில் நடித்தபோது, மூக்குடன் மூக்கு இடித்ததா, இல்லையா?
பதில் (சிரித்தபடி):-நேரடியாக முத்தம் கொடுத்தால், மூக்குடன் மூக்கு இடித்து இருக்கும். கொஞ்சம் சாய்வாக கொடுத்ததால், இடிக்கவில்லை. படத்துக்கு அத்தியாவசியமாக தேவைப்பட்டதால்தான் அந்த முத்தக்காட்சி வைக்கப்பட்டது.
கேள்வி:-தொடர்ந்து இரண்டு மூன்று கதாநாயகர்களுடன் இணைந்து நடிப்பீர்களா?
பதில்:-அப்படி கதைகள் அமைந்தால், இணைந்து நடிப்பேன்.
கேள்வி:-படத்தின் உச்சக்கட்ட காட்சியில், உங்களை ஜீவாவும், ஸ்ரீகாந்தும் சேர்ந்து உதைப்பது போல் காட்டப்பட்டதே, அந்த காட்சியில் நடிக்க எப்படி சம்மதித்தீர்கள்?
பதில்:-நண்பர்கள் நீண்ட காலம் கழித்து மீண்டும் சந்திக்கிறபோது, இயல்பாக நடக்கிற விஷயம்தானே அது?
கேள்வி:-இந்திப்பட வாய்ப்பு வந்தால், நடிப்பீர்களா?
பதில்(குறும்பாக):- ஏண்ணா...நல்லாத்தானே போயிட்டிருக்கு...?
கேள்வி:-படத்தில், கல்வி முறை பற்றி காட்சி வருகிறது. நிஜவாழ்க்கையில், கல்வி முறை எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
பதில்:-எந்த துறையில் விருப்பம் இருக்கிறதோ, அந்த துறையை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்று படத்தில் கூறப்பட்டு இருந்தது. அதையேதான் நிஜவாழ்க்கைக்கும் சொல்கிறேன். உதாரணமாக என் வாழ்க்கையையே எடுத்துக் கொள்ளலாம். நான் ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு வரை நன்றாக படித்ததாக அம்மா சொல்வார்கள்.
அதன்பிறகு எங்க அப்பாவுடன் படப்பிடிப்புக்கு போக ஆரம்பித்தேன். நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. எங்க அப்பா என்னை டாக்டருக்கு படிக்க வைக்க ஆசைப்பட்டார். நான் நடிகர் ஆகிவிட்டேன். வாழ்க்கை நன்றாகவே இருக்கிறது.
கேள்வி:-உங்கள் மகன் `நண்பன்' படம் பார்த்தானா, அந்த படத்தை பற்றி அவன் என்ன சொன்னான்?
பதில்:-படம் பார்த்து விட்டான். அன்று நான் வீட்டுக்குள் நுழைந்தபோது, படத்தில் ஜீவாவும், ஸ்ரீகாந்தும் பேண்ட்டை அவிழ்த்துவிட்டு கீழே விழுந்து வணங்கியது போல், என் மகனும் விழுந்து வணங்கினான். அவன் இப்போது ஏழாம் வகுப்பு படிக்கிறான். என்னுடன் நிறைய `டிஸ்கஸ்' பண்ணுகிறான். அவனுக்கு கிரிக்கெட் மீது ரொம்ப இஷ்டம் இருக்கிறது. கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அவன் ஆசைக்கு நான் குறுக்கே நிற்கவில்லை.
கேள்வி:-இப்போது நீங்கள் நடித்துக் கொண்டிருக்கும் `துப்பாக்கி' படம் பற்றி சொல்லுங்கள்?
பதில்:-ஏ.ஆர்.முருகதாஸ் வித்தியாசமாக கதை சொல்கிறார். `துப்பாக்கி' எனக்கு வித்தியாசமான படமாக இருக்கும். இதுவரை மும்பையில் 35 நாட்கள் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. மீண்டும் அந்த படப்பிடிப்புக்காக மும்பை போக இருக்கிறேன்.
கேள்வி:-`நண்பன்' படத்தில் ஒரு சண்டை காட்சி கூட இல்லை. அதனால் உங்கள் ஹீரோயிஸம் அடிபடவில்லையா?
பதில்:-உண்மையில், `நண்பன்' படத்தில்தான் பெரிய ஹீரோயிஸம் இருந்தது. பத்து பேரை அடிப்பது மட்டும் ஹீரோயிஸம் கிடையாது.''
இவ்வாறு விஜய் கூறினார்.