வடக்கு, கிழக்கில் உள்ள பெண்களின் பாதுகாப்பின்மை என்கிற தலைப்பில் வெளியான சர்வதேச நெருக்கடிக் குழுவின் (ஐ.சி.ஜி) அறிக்கையில், ஸ்ரீலங்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் விசேடமாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ்பேசும் பெண்களின் மீதான வன்முறைகள் ஆயுத மோதல்கள் முடிவடைந்ததின் பின் விளைவாக மிகவும், அதிகரித்துச் செல்வதாகவும் அந்தப் பிராந்தியத்தில் உள்ள பெண்கள் தீவிரமான பாதுகாப்பு குறைவினை எதிர்நோக்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அறிக்கை 20 டிசம்பர் 2011இல் வெளியிடப்பட்ட சர்வதேச நெருக்கடிக் குழுவின் அறிக்கை இந்தப் பிராந்தியத்திலுள்ள பெண்கள் தொடர்ந்தும் பல்வேறு பகுதியினரிடமிருந்தும் வெளிவரும் வன்முறைகளுக்கு பயந்தே வாழ்ந்து வருவதாகவும்,மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதில்தான் ஏதாவது அர்த்தம் உள்ளது என்றும் வலியுறுத்தியுள்ளது.
முந்தைய மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் உள்ள நிலைமைகளைப்பற்றி இந்த அறிக்கை எந்த அளவிற்கு துல்லியமாகச் சித்தரிக்கின்றது? இந்தப் பகுதிகளில் உள்ள பெண்களின் பாதுகாப்பு சம்பந்தமான அக்கறைகளைக் கவனிப்பதற்கு போதுமான வழி வகை செய்யப்பட்டுள்ளதா? இந்தக் கேள்விகளுக்கான சில மறுதாக்கங்களை டெய்லி மிரர் வெளிப்படுத்த முயன்றுள்ளது.
ஐ.சி.ஜியின் அறிக்கையில் பிரதானப்படுத்தியுள்ள விடயங்கள்:
- “பெண்களின் பொருளாதார பாதுகாப்பு நிலையற்றதாக உள்ளது,மற்றும் அவர்களின் பௌதீக நிலை சம்பந்தமான இயக்கங்கங்களில் சில கட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.மிகப்பெரிய அளவில் இராணுவமயமாக்கப்பட்டதும் மேலும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் அவர்களின் கட்டுப்பாட்டுக்கு மத்தியில் இருப்பதும் - முற்றிலும் சிங்கள பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த ஆண்களே பெரும்பாலும் அங்கிருப்பதாலும் - பெண்களுக்கு குறிப்பாக அவர்களின் பாதுகாப்பு தற்காக்கும் உணர்வு மற்றும் உதவி அணுகல் திறன் போன்ற விடயங்களில் சில முக்கிய பிரச்சினைகள் எழுகின்றன”.
- “இதில் உண்மை என்னவென்றால் பெண்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு இராணுவத்தினரில் தங்கியிருக்க வேண்டியுள்ளது மட்டும், அவர்களைப் பாலினம் சார்ந்த பாரிய வன்முறை அபாயத்துக்குள் தள்ளிவிட்டுவிடவில்லை, ஆனால் தங்கள் சமூகங்களுக்கிடையில் தங்கள் சொந்தத் திறமையை கட்டியெழுப்புவதற்கும் அது தடை போடுகிறது”.
- “இராணுவமயமாக்கல் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கில் அதிகாரப் பகிர்வு அல்லது உள்ளுர் குடிமக்களின் நிருவாகம் என்பதை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் மறுப்புத் தெரிவிப்பது,இந்த சிக்கலான சமுதாயத் துயரத்துக்கு நேரடியான பங்களிப்பினை வழங்குவதுடன் அது தோற்கடிக்கப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ யினரால் நடத்தப்பட்ட அடக்குமுறை ஆட்சியின் பாதச்சுவடுகளை பின்பற்றுவது போலுள்ளது”.
- “பாலியல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன என்கிற குற்றச்சாட்டுகளை அளவுக்கு அதிகமான பதில்களைக்கூறி அரசாங்கம் மறுதலித்தாலும்,அதற்குச் சாட்சியாக காணொளிப் பதிவுகளில் எல்.ரீ.ரீ.ஈயின் பெண் போராளிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களின் நிர்வாணமான இறந்த உடல்களை - அவர்களில் சிலரது கைகள் பின்புறமாகக் கட்டப்பட்ட நிலையிலுள்ளது – கையாளும் சிங்கள படை வீரர்கள் வெளிப்படுத்தும் பாலியல் கருத்துக்கள் அமைந்துள்ளன”.
- “பெண்களின் பாதுகாப்பின்மைக்கான சர்வதேசத்தின் பதில் தேவையில்லாமல் தற்போது மௌனமாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காவின் சர்வதேசப் பங்காளிகள் மட்டுமல்லாது ஐக்கிய நாடுகள் சபையும்கூட பெண்களுக்கு எதிரான தெளிவான அச்சுறுத்தல்கள் மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளைப்பற்றிப் பகிரங்கமாகப் பேசத் தவறியுள்ளதுடன் அவர்கள் அந்த இராணுவமயமாக்கப்பட்ட கட்டமைப்புக்குள் பணியாற்ற சம்மதித்திருப்பது, பாதிப்புகளை அதிகரித்துள்ளதோடு வெளிப்படைத் தன்மையினை குறைவாக்கியும் உள்ளது”.
- “அரசாங்கத்தின் பாதுகாப்பு படையினரால் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் பெண்கள் மற்றும் இளம் யுவதிகள் துன்புறுத்தலுக்கு ஆளாகி துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக வெளிவரும் அறிக்கைகள் தமிழ் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதுடன் சமூகத்தின் துன்பியல் உணர்வுகளை மேலும் ஆழமாகக் கீறி வேதனைப்படுத்துகிறது. அத்தகைய சம்பவங்கள், கதைகள் மற்றும் அதைச்சுற்றி எழுப்பப்படும் வதந்திகள் என்பனவும் எல்.ரீ.ரீ.ஈ. யுடன் ஈடுபாட்டை உண்டாக்கும் விதத்தில் தமிழர்களின் உணர்வுகளைப் பாதிப்பதோடு,ஆயுத எதிர்ப்பு கருத்துக்கும் வலிமையூட்டுகிறது.
பேராசிரியர். ராஜீவ விஜேசிங்க,எம்.பி.– நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதியின் ஆலோசகர்:
இந்த குற்றச்சாட்டுகள் வெறும் பகட்டுத் தன்மையும் மற்றும் அரசியல் ரீதியாக இராணுவத்தின்மீது குற்றம் சாட்டுவதுமாக உள்ளன, ஆனால் உண்மையில் யதார்த்த பிரச்சினை வேறு எதிலோ தங்கியுள்ளது.
இது ஸ்ரீலங்காவின் பிரச்சினைகளில் ஐ.சி.ஜி. யினது தலையிடும் தன்மைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு. ஐ.சி.ஜியின் தலைவர் கரத் இவான்ஸ், அலன் கீனன் மற்றும் அலனின் பழைய நண்பரான ரமாமணி ஆகியோர் ஒன்று சேர்ந்து ஸ்ரீலங்காமீது பாதுகாப்புக்கான பொறுப்பை பிரயோகிக்க வேண்டிய காலம் கனிந்துவிட்டது என ஆலோசனை வழங்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
ஸ்ரீலங்காவில் இனச்சுத்திகரிப்பு நடைபெறுகிறது என கரத் விளம்பியபோது, அவர் எதைக்குறிப்பிட்டு அப்படிச் சொல்கிறார் என நான் வினாவினேன்,அதற்கான விளக்கத்தை வழங்கும்படி அவர் அலன் கீனனிடம் கேட்டுக் கொண்டார் (அவர் யோசனையின்றி ஆற்றிய உரையில் தான் என்ன கூறுகிறோம் என்பதைப்பற்றிய தெளிவான எண்ணம் அவரிடம் இருக்கவில்லை). இது நடந்தது 2007இல் அதற்கு அலன் சொன்னார், 1990இல் எல்.ரீ.ரீ.ஈ முஸ்லிம்களுக்கு என்ன செய்ததோ, அதைத்தான் தான் விபரித்ததாக.
ஆனால் அந்தப் பேச்சு சமீபத்தில் நடந்தவைகளுக்கு அரசாங்கம் தான் பொறுப்பு என அவர்கள் விபரிக்கிறார்கள் என்கிற நம்பிக்கைக்கு ஒருவரை இட்டுச் செல்லும் வகையில் அமைந்திருந்தது.
பெண்கள் பாதுகாப்பு பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் பாதுகாப்பு படைகள் இதில் செய்யக்கூடியது மிகச் சொற்பமே. இந்த குற்றச்சாட்டுகள் வெறும் பகட்டுத் தன்மையும் மற்றும் அரசியல் ரீதியாக இராணுவத்தின்மீது குற்றம் சாட்டுவதுமாக உள்ளன. ஆனால் உண்மையில் யதார்த்த பிரச்சினை வேறு எதிலோ தங்கியுள்ளது. மனிக் பண்ணையில் வைத்து துஷ்பிரயோகம் நடைபெற்றது சம்பந்தமாக பாதுகாப்பு படையினர்மீது தாக்குதல்கள் நடைபெற்ற சம்பவம் பற்றி எனக்கு நினைவு படுத்தப்பட்டது, ஆனால் அந்த முறைப்பாடு உள்ளக இடம் பெயர்ந்தவர்கள் தங்களுக்குள் மேற்கொண்ட துஷ்பிரயோகம் சம்பந்தமானது. ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு இராணுவவீரர் மற்றொருவருடன் சேர்ந்து உள்ளக இடம்பெயர்ந்த பெண் ஒருவர் தங்கியிருந்த கூடாரத்துக்குள் நுழைந்து தங்கியிருந்து விட்டு பல மணித்தியாலங்கள் கழித்து வெளியேறிய சம்பவம் ஒன்றை ஐநா எங்கள் கவனத்தக்கு கொண்டுவந்தது.
ஒரு தூதுவர் என்னிடம் இராணுவத்தினரால் துஷ்பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்ட நிகழ்வுகள் எதனையும் தான் கேள்விப்படவில்லை என்றும் ஆனால் அவர்களது பிரசன்னம் பெண்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் உள்ளது எனக்கூறியதற்கு நான் இத்தகைய போர்வையின் கீழ் மேற்கொள்ளப்படும் வலியுறுத்தல்கள் உண்மையான பிரச்சனையின் கவனத்தை திசை திருப்பிவிடும், அது போர் நிலமை காரணமாக பாரிய எண்ணிக்கையிலான தனித்து வாழும் பெண்கள் உருவாகியுள்ளதால்,ப hலியியல் எண்ணத்தை நோக்கித் திரும்பும் மனப்பாங்கு சமூகத்தினுள்ளேயே உருவாவதனால் ஏற்படும் பாதிப்பு என அவருக்கு பதில் கூறினேன்.
ஒப்புதலுடன் நடைபெறும் பாலியல் நடவடிக்கைகள் மற்றும் வேண்டாத கருத்தரிப்புகள் அதிகரித்திருந்த போதிலும், மாவட்ட மட்டத்திலான நல்லிணக்க குழுக்களிடையே நடந்த ஆரம்பக் கூட்டங்களிலேயே இந்த விடயம் பற்றி நாங்கள் விரிவாக கலந்துரையாடியுள்ளோம். முழுச் சம்மதம் இல்லாவிட்டாலும்கூட அழுத்தங்களுக்கு அடிபணிந்து பாதிப்புக்குள்ளாகக் கூடிய நிலைகூட உருவாகலாம், இத்தகைய பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும். இதற்காக நாங்கள் பல மாற்று நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளோம், சமயப் பணியாளர்களின் நல் உதவிகளைப் பயன்படுத்தி பிரதேச மட்டங்களிலான அக்கறையுள்ள சமூக வேலைகள் மற்றும் ஆலோசனைகள், மற்றும் ஆதரவு குழுக்களின் வளர்ச்சி என்பனவற்றின் ஒத்திசைவான பணிகளை மேற்கொள்வதும் இதில் உட்படும். இதில் ஆலோசகர்களின் சிறப்பான பயிற்சியினைப் பயன்படுத்தி தீவிரமான பணியினை மேற்கொள்ளவேண்டும்.
துரதிருஸ்டவசமாக என்னால் அறிவுரைகளை மட்டுமே வழங்கமுடியும், எனினும் எங்களது பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டனவா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. இத்தகைய பணிகளை ஒருங்கிணைப்புச் செய்வதற்காகவும் மற்றும்உட்கட்டமைப்பு பணிகள் அமைக்கப்பட்டு வரும் வேளையில் மானிட மூலகங்களை திறமையாகக் கையாள ஒரு அமைச்சை அரசாங்கம் உருவாக்குவது பயனுள்ளதாக இருக்கும். ஆனால் சர்வதேச நெருக்கடிக் குழுவினர் வெளியிடும் ஆதாரங்கள், பேச்சுக்கள் என்பனவற்றின் அடிப்படையில் கையாளப்படும்போது இது போதுமான கவனத்தை ஈர்க்காமல், பொதுவாக இந்த அம்சம் திரும்பி வர முடியாதபடி முக்கியத்துவம் குறைந்த அங்கீகாரத்தையே பெறுகிறது.
சிறீன் சரூர் – பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின் ஒருங்கிணைப்பாளர்:
“இந்தப் பெண்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதிப்படுத்துவதும் மற்றும் இராணுவமயமாக்கல் இல்லாத ஒரு சூழ்நிலையில் அவர்கள் வாழ்வதை உறுதிப் படுத்துவதும் அரசாங்கத்தின் கடமை”
பெண்கள் கொடுத்துள்ள விலைகளில் ஒன்றாக இருப்பது நடந்து முடிந்த போரும் அதன் கொடூர விளைவுகளால் குடும்ப அங்கத்தினர்கள் மற்றும் ஆண் துணையின் இழப்புமே, அதன் காரணமாக அவர்கள் மரபுவழி குடும்பக் கட்டமைப்புக்கு வெளியே தள்ளப்பட்டதுடன் அவர்கள் மீது துஷ்பிரயோகங்கள் மேற்கொள்வதற்கான ஒரு வாய்ப்பையும் வழங்குகிறது.
வடக்கு மற்றும் கிழக்கில் குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் விரிவடைந்து வருவதால், சமூகத்தில் ஒரு பிளவு உருவாகியுள்ளது மற்றும் அந்த சமூகத்தையே முறிவடையச் செய்யும் வகையில் வழிநடத்தும் ஒருவகையான உணர்வும் உருவாகியுள்ளது.
வடக்கு மக்களின் அன்றாட வாழ்வில் இராணுவமயமாக்கல் பிரதானமான பிரச்சினையை பெண்களின் பாதுகாப்பு விடயத்தில் ஏற்படுத்தியுள்ளது, பாலியல் துஷ்பிரயோகங்கள் (விஸ்வமடு இராணுவ பாலியல் வல்லுறவு வழக்கு அதற்கு ஒரு உதாரணம்) மற்றும் அதிகரித்து வரும் பாதுகாப்பின்மை போன்றவை இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளன.
அநேகமான பெண்கள் எங்களிடம் முறையிட்டது, ஒரு வன்முறைச் சம்பவம் இடம்பெற்றால் அந்த விடயத்தை பற்றி காவல்துறையினரிடத்தில் கூட புகார் தெரிவிக்க முடியாமலுள்ளது என்று, ஏனெனில் விசேடமாக வன்னியில் இதுபோன்ற அநேக விடயங்களில் காவல்துறையினர் அந்தச் சம்பவங்களைப்பற்றி இராணுவத்தினரிடமே மேல் நடவடிக்கைகளுக்காக அனுப்புகிறார்கள் என்று. கடந்த இரண்டு வருடங்களில் பெண்களின் பாதுகாப்பு நலிவடைந்து வருகிறது என்று சொல்வது உண்மைக்கு வெகுதூரத்தில் இல்லை.அதிகரிக்கப்பட்டுள்ள இராணுவமயமாக்கல், நலிவடைந்துள்ள சட்ட விதிகள் மற்றும் தண்டனை விலக்கு என்பன இந்தப் பாதுகாப்புக் குறைவுக்கு பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளன.
வடக்கில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு,அதிகாரிகள் மற்றும் நிருவாக அங்கத்தவர்கள் (காவல்துறையினர் உட்பட) மத்தியில் அந்த வன்முறை தமிழர்களின் கலாசார நடவடிக்கையுடன் தொடர்பு பட்டுள்ளது எனும் பொதுவான ஒரு தப்பெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தப்பெண்ணம் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றுக்கு மட்டுமல்லாது பெண்களுக்கும் கூட பாரிய தீங்கினை ஏற்படுத்துகிறது.
வன்முறைகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்புக்கான காரணங்கள்:
கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்த தவறியமையும் மற்றும் சட்டம் ஒழுங்கின் சீர்குலைவும் பெண்களுக்கு காவல் நிலையங்களுக்கு செல்லுவதற்கான வழிகள் குறைவாக இருப்பதும் மற்றும் குடிமக்களின் குறிப்பாக பெண்களின் தேவைகளில் காவல்துறையினருக்கு கரிசனை இல்லை, என்கிற கருத்து உட்பட, சட்டத்தை உத்தரவாதப் படுத்துபவர்கள்மீது அவர்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்பட்டிருப்பது.
சமுதாயம் மற்றும் குடும்பம் போன்றவற்றின் சமூகக் கட்டமைப்புகள் உடைந்து போயுள்ளமை.பொருளாதார ஆதரவின்மையும் கூட பெண்களைத் தவறான வழியில் உறவுகளை ஏற்படுத்த தூண்டுகிறது மற்றும் பொருளாதார உறவுகள், அதாவது குடும்பம் போற்றுவதற்காக கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபட வைக்கிறது.
சமீபத்தில் நான் பத்திரிகைகளில் பார்த்தது,வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பெண்களின் பாதுகாப்பு பற்றிய ஐ.சி.ஜி.யின் கண்டுபிடிப்பை பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் முற்றாக மறுத்திருப்பதை,ஆனால் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட எல்.எல்.ஆர்.சி யின் அறிக்கையில் ஐ.சி.ஜியின் சில அவதானிப்புகள் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டிருக்கிறது,விசேடமாக சட்ட விதிகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தோல்வியை. எல்.எல்.ஆர்.சி. உள்ளக இடம்பெயர்ந்தவர்களின் பாதுகாப்புப் பற்றி விரிவாக விளக்குகிறது,அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள், முறையான சட்ட உத்தரவாதத்தின் தேவையை வலியுறுத்தவதோடு, மற்றும் தண்டனையிலிருந்து விலக்கு வழங்கும் கலாச்சாரத்துக்கு முடிவு கட்டும்படியும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் அதன் பரிந்துரைகளில் கூறியுள்ளது.
தங்கள் பாதுகாப்புக்கு எதுவித உத்தரவாதமும் வழங்கப்படாத போதிலும் நூற்றுக் கணக்கான பெண்கள் எல்.எல்.ஆர்.சி முன்பாக சாட்சியமளித்தார்கள்.மேலும் இப்போது அரசாங்கத்தின் கடமை அந்தப் பெண்களுக்கு நியாயத்தை உறுதிப்படுத்துவதுடன் அவர்கள் இராணுவமயமாக்கல் இல்லாத ஒருசூழலில் வாழ்வதை உறுதிப்படுத்துவதுமே.
(பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள 08 பெண்கள் அமைப்புகளை பிரதிநிதித்துவப் படுத்துகிறது.)
சாந்தி ஏ. சச்சிதானந்தம் - விழுதுகள் அமைப்பின் தலைவர்:
பெண்களின் பாதுகாப்பு பற்றிய ஐ.சி.ஜியின் அறிக்கை பொதுவாக ஸ்ரீலங்காவிலுள்ள முக்கியமாக போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களான வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பெண்கள் பொதுவாக அனுபவிக்கும் பாதுகாப்பின்மையின் அடித் தட்டுக்களை விரிவாக ஆவணப் படுத்தியுள்ளது.இந்தப் பிரச்சினை பற்றி உள்ளுர் பெண்கள் அமைப்புகள் மற்றும் இதர சிவில் சமூக அமைப்புகள் என்பனவற்றால் மேற்கொள்ளப்பட்ட உண்மையைக் கண்டறியும் பயணங்கள் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட எண்ணற்ற அறிக்கைகளை அது கோடிட்டுக் காட்டியுள்ளது.
தமிழர்களின் தேசியப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஸ்ரீலங்காவின் அரச மற்றும் குடியியல் சமூகங்களுக்குள் இன ஆட்சித் தலைமை மற்றும் இராணுவமயமாக்கல் என்பனவற்றின் கட்டமைப்பை வலுப்படுத்தி முன்னுக்கு கொண்டுவர இராணுவ அணுகுமுறையைப் பின்பற்றுவதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இந்தக் கட்டமைப்புகள் மாற்றமில்லாத நடைமுறையின்படி பெண்களைக் கட்டுப்படுத்தவும் மற்றும் அவர்கள் ஊடாக சிறுபான்மை சமூகத்தை கட்டுப்படுத்தவும் பிரதான வழிமுறையாக வன்முறையையே கையாள்கிறது. இந்த நிலையைத்தான் ஸ்ரீலங்கா அரசாங்கம் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ ஆகிய இருபகுதியினரையும் காட்சியாக்கி அந்த அறிக்கை விளக்கியுள்ளது. அதிலிருந்து ஒருவரால் உறுதி செய்யக்கூடியது யுத்தத்தை செயற்படுத்தியதன் விளைவாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இயற்கையான தன்மை தீவிரமாக மாறிவிட்டது என்பதை.
எனவே இந்த அறிக்கையில் காணப்படும் முறையான நடவடிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் என்பனவற்றை ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கண்ணோட்டத்திலுள்ள பெண்கள் பாத்திரத்தின்படி நடைமுறைப்படுத்துவதற்கும் மற்றும் மறுவாழ்வு,மறுகுடியேற்றத் திட்டங்களில் ஒரு பங்கேற்பு செயல்முறைக்கு ஏற்ப அவற்றை தயார்படுத்தவும் பாரிய உருமாற்றம் தேவைப்படுகிறது. யதார்த்தத்தில் தற்போதுள்ள நிலமைப்படி,பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் மூலம் பெண்களை மேம்படுத்தும் பணிக்கு விசேடமாக வடக்கில் அரசாங்கத்தால் தீவிர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது எதைக் காட்டுகிறது?
இந்த அறிக்கை ஸ்ரீலங்கா அரசாங்கம்,ஐநா,மற்றும் உதவி வழங்கும் சமூகத்தினர் ஆகியோரை மட்டும்தான் இலக்கு வைத்திருப்பதாக நான் கருதவில்லை. எங்கள் நாட்டில் பெண்கள் அனுபவிக்கும் இந்த நிலை,எங்களைப் போன்ற பொருட்படுத்தப்படாத அனைத்து இனங்களிலும் நடக்கும் பிரதிபலிப்பே ஆகும்.இந்த அறிக்கை ஸ்ரீலங்காவுக்கு எதிரான சதி முயற்சி என கல்லெறிந்து கலைப்பது மூலம் அதிலுள்ள உண்மைகள் மறைக்கப்பட்டுவிடலாம். இந்த நாட்டின் பிரஜைகள் என்கிற வகையில் நாங்கள் அறியவேண்டியவைகளை தேர்ந்தெடுப்பவர்களாகவும் மற்றும் நடப்பனவற்றுக்கு பொறுப்பு ஏற்பவர்களாகவும் இருக்க வேண்டும். அரசாங்கமும் ஆட்சியும் எடுக்கும் தேவையான உருமாற்றங்கள் நமது நிலையான கண்காணிப்பு மற்றும் பிற தலையீடுகள் மூலமே நடைபெறுகிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். நாம் அப்படிச் செய்வோமா?
ஸ்ரீலங்கா பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படவில்லை – அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய:
(27 ஜனவரி 2011இல் வாஷிங்டன் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் இருந்து எடுத்தாளப்பட்டது)
நான் அதை நூறு சதவீதம் மறுக்கிறேன். பெண்களின் உரிமைகள் என்று வரும்போது அதற்கு முன்னுரிமை வழங்கும் முன்னணி நாடுகளில் ஸ்ரீலங்காவும் ஒன்று.உலகின் முதல் பெண் பிரதமரைக் கொண்டிருந்த நாடு எங்கள் நாடு, மற்றும் நாட்டின் 50 விகிதமாக வேலைச் சக்தி பெண்களை உள்ளடக்கியதாகவே உள்ளது.அநேகமான தாதிமார்களும் மற்றும் ஆசிரியைகளும் பெண்களே.
இன்று எமது நாட்டின் சட்டமா அதிபர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோர் பெண்களே. முன்னாள் ஜனாதிபதியும் ஒரு பெண்மணியே,மற்றும் ஏராளமான அமைப்புகள் பெண்களாலேயே நிருவகிக்கப்பட்டு வருகின்றன. ஸ்ரீலங்காவில் பெண்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதில்லை மற்றும் பாலியல் வல்லுறவுகள், மற்றும் அது இது போன்றவை இங்கு நடைபெறுவதில்லை.சில காலங்களுக்கு முன்பும் இது சம்பந்தமாக சில வதந்திகள் எழுந்திருந்தன. ஸ்ரீலங்காவில் நாங்கள் மிகவும் ஒழுக்கமுடையவர்கள் அது எங்கள் கலாச்சாரத்தில் ஒரு பகுதி.
கலாசார பழக்க வழக்கங்கள் என்று வரும்போது ஸ்ரீலங்காவை வேறு எந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாது.எனவே என்னால் இந்த நெருக்கடி குழுவின் அறிக்கையை 100 வீதம் ஏற்றுக் கொள்ள முடியாது. எங்களுக்கு ஆதாரங்களைப் பார்க்க வேண்டிய தேவை உள்ளது. வேறு எந்த நாட்டினையும்போல உங்களால் ஒரு சில சம்பவங்களைக் காணமுடியும், மற்றும் உரிய அதிகாரிகள் அதற்குரிய நடவடிக்கைகளை நிச்சயம் எடுப்பார்கள். அது பூச்சியம் என்று நான் சொல்லவில்லை, அமெரிக்காவில்கூட பாலியல் வல்லுறவு வழக்குகள் இடம்பெற்றுள்ளன, மற்றும் ஸ்ரீலங்காவிலும் அப்படியானவர்களைக் காணமுடியும். அப்படி ஏதாவது நடந்தால் சாதாரணமாக அதற்கு உரிய நடவடிக்கைகள் அவர்கள் மேல் எடுக்கப்பட்டு விடும்.
நன்றி: டெய்லி மிரர், தேனீ