Published On: Thursday, January 26, 2012
இன்று இந்தியாவின் 63ஆவது குடியரசு தினம்

இந்திய நாட்டின் 63ஆவது குடியரசு தினம் இன்று சென்னையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆளுநர் கே.ரோசய்யா கொடியேற்றி அணிவகுப்பைப் பார்வையிட்டார். முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
குடியரசு தின விழா,இன்று கொண்டாடப்படுகிறது. விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதிச் செயலில் ஈடுபடலாம் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருப்பதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில எல்லைகள் சீல் வைக்கப்பட்டு, வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே தமிழக அரசு சார்பில் குடியரசு தின விழா நடைபெற்றது. ஆளுநர் ரோசய்யா, காலை 8 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பை பார்வையிட்டாடர். விழாவில் முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
முப்படைகள் மற்றும் காவல்துறையினரின் பல்வேறு பிரிவுகள் சார்பில் அணிவகுப்பு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் அரசு துறைகளின் சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், 5 பேருக்கு அண்ணா பதக்கத்தையும், 4 பேருக்கு காந்தியடிகள் காவலர் விருதையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் நடந்த தீவிபத்தில் உயிர்த் தியாகம் செய்த தீயணைப்புப் படை வீரர் அன்பழகன், படுகாயமடைந்த தீயணைப்பு அதிகாரி பிரியா ரவிச்சந்திரன், வீரர் முருகன், திருப்பூரில் 2010ம் ஆண்டு வங்கிக் கொள்ளைய துணிகரமாக தடுத்த ஹரீஷ்குமார், ரவி ஆகியோருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. இவர்களுக்கு தலா ரூ. 1லட்சம் பரிசுடன், பதக்கம் அளிக்கப்பட்டது.
அதேபோல ஜெயக்குமார், செந்தில்குமார், சம்பத்குமார், சின்னமாதன் ஆகிய காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அளிக்கப்பட்டது.
மெரினா கடற்கரையில் விழா நடந்த பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள், அவர்களின் உடமைகள் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது. மின்சார ரயில்களிலும் ரயில்வே போலீசார் மாறுவேடங்களில் கண்காணிக்கின்றனர். ரயில் நிலையங்களில் கேட்பாரற்று ஏதாவது பொருட்கள் கிடந்தால் அதை எடுக்க வேண்டாம் எனவும், உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்குமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படுகிறது.
முக்கிய வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகம் கூடும் ஷாப்பிங் மால்கள் போன்ற இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருச்சி, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.