Published On: Wednesday, January 18, 2012
மாணவர்களுக்கு ஏற்படும் அநீதியைத் தடுக்கவே Z ஸ்கோர்
மாணவர்களுக்கு அநீதி ஏற்படுவதைத் தடுக்கவே Z ஸ்கோர் முறை அமுல்படுத்தப்படுவதாக உயர் கல்வியமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் எதிரக்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரைக்கு பதில் அளித்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் இங்கு மேலும் கூறியதாவது,
சில சமயங்களில் சில கேள்விப் பத்திரங்கள் மிகவும் இலகுவாக அமைந்து விடுகின்றன. சில சமயங்களில் கடினமாகவும் அமைந்துவிடுகின்றன. இது சிலருக்கு சார்பானதாகவும் சிலருக்கு சார்பற்றதாகவும் அமைந்து விடுகின்றது. மற்றும் சிலர் பல்கலைக்கழகத்துக்கு நுழைந்துவிட வேண்டும் என்பதற்காக இலகுவான பாடங்களையே தெரிவு செய்கின்றனர். இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக ஒரு சாராருக்கு அநீதி ஏற்படுகின்றது.
இந்த அநீதிகளைத் தடுக்கும் நடவடிக்கையாகவே Z ஸ்கோர் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனால்தான் எவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் பலகலைக்கழக அனுமதி கிடைக்கின்றது. Z ஸ்கோர் முறை நீக்கப்பட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் கோரிக்கையை முன்வைத்தார். ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் 17 ஆயிரமாக இருந்த பல்கலைக்கழக அனுமதியை இப்போது 5000 ஆக அதிகரிக்கச் செய்துள்ளோம் என்றும் அமைச்சர் கூறினார்.