Published On: Monday, January 23, 2012
‘Z’ ஸ்கோர் உட்பட அனைத்து கல்வி நடைமுறையிலும் மாற்றம்

இலங்கையில் காணப்படும் கல்வி முறையில் மாற்றத்தை கொண்டு வரும் அதேவேளை, தற்போது நடைமுறையில் உள்ள Z ஸ்கோர் முறை உட்பட அனைத்து நடைமுறைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சில மாணவர்கள் 3 (ஏ) பாடங்களிலும் திறமைச்சித்தியைப் பெற்றிருந்த போதிலும் பல்கலைக்கழகத்திற்கு
தெரிவாகும் சந்தர்ப்பத்தை இழக்கின்றனர். எனினும் 2 (ஏ) பாடங்களில் திறமைச் சித்தியை பெற்ற ஒருவர் பல்கலைக்கழகத் திற்கு தெரிவு செய்யப்படும் சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கையில் இலவசக் கல்வியை சி.டபிள்யு.டபிள்யு. கன்னங்கர அறிமுகப்படுத்திய நாள் முதல் இன்றுவரை பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே காணப்படுகின்றன. எனினும் தற்போது நடைமுறையில் உள்ள கல்வி திட்டத்தில் புத்துயிர் அளிக்க வேண்டிய கடப்பாட்டில் நாம் இருக்கின்றோம். இதற்காக சகல பிரிவுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
இதேவேளை கடந்தாண்டு வெளியான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி கிராமப்புற பாடசாலைகள் கல்விச் செயற்பாடுகளில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றதை காணக்கூடியதாக இருக்கின்றது.
வணிகத்துறையில் நாரம்மல வித்தியாலயம் நாடளாவிய ரீதியில் முதலிடத்தையும், கலைத்துறையில் திஸ்ஸமஹாராம பாடசாலை முதலிடத்தையும், கணிதப்பிரிவில் யாழ்ப்பாண பிரதேசத்தை சேர்ந்த பாடசாலையும் முதலிடத்தையும் பெற்றுக் கொண்டது. விஞ்ஞானப் பிரிவில் மாத்திரமே கொழும்பில் உள்ள பாடசாலை முதலிடத்தை பெற்றுக் கொண்டது. முன்னாள் கல்வி அமைச்சர் சி.டபிள்யு. டபிள்யு. கன்னங்கர அறிமுகப் படுத்திய தொழிற்பயிற்சியுடன் கூடிய கல்வித் திட்டங்களை அமுல்படுத்துவதற்கான தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. அன்றைய காலத்தில் தரம் 8ஆம் ஆண்டில் இருந்து மாணவர்களுக்கு தச்சன், மேசன், வெல்டிங் உட்பட பல்வேறு துறைகளில் பயிற்சியுடன் கூடிய பாடத்திட்டம் அமுலில் இருந்தது.
எனவே, மாணவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய தகவல் தொழில்நுட்பம், கணினி, விஞ்ஞான ஆய்வுக்கூட வசதிகளுடனான பாடசாலைகளை ஒவ்வொரு கிராமத்தில் ஏற்படுத்த அரசாங்கம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்தில் 3 இரண்டாம் நிலை பாடசாலைகளை உருவாக்குவதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இரண்டாம் நிலை பாடசாலை யில் தனியான கணினிக் கூடம், விஞ்ஞான ஆய்வுக்கூடம், ஆங்கில இலக்கியம், வெளி நாட்டு பாசை, புத்தகசாலை, தகவல் தொழில்நுட்பம், விளையாட்டு மைதானம் உட்பட சகல வசதிகளையும் உள்ளடக்கியதாக அமைக்கப்படும்.